ஊர்ச்சண்டையாக மாறிய இளநீர்த் திருட்டு… கல்லூரி மாணவனின் தலை துண்டிப்பு!


தூத்துக்குடி அருகே இளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களின் 30 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இரண்டு தரப்பினரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் சத்தியமூர்த்தி (22). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை 6 மணியளவில் நடைப்பயிற்சிக்காக செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் தேடிய போது, தலைவன்வடலி பாலத்தின் அருகே முற்புதருக்குள் சத்தியமூர்த்தியின் உடல் மட்டும், தலை இல்லாமல் முண்டமாகக் கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த தலைவன்வடலி கிராம மக்கள் உடலை எடுக்கவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர்.

சத்தியமூர்த்தியின் தலையைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். கொலைக் குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என அவர்கள் முழக்கம் எழுப்பினர். போலீஸார் அவர்களை சமாதானம் செய்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சத்தியமூர்த்தியின் தலையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் சத்தியமூர்த்தியின் உடல் கிடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் அவரது தலை கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்து, அதனைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தலைவன்வடலி கிராம மக்களுக்கும், அருகேயுள்ள கீழ கீரனூர் கிராம மக்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது தெரியவந்தது.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தலைவன்வடலியைச் சேர்ந்த ஒருவர் இறந்தபோது, அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் கீழ கீரனூரை சேர்ந்த சிலர் தடுத்து தகராறு செய்துள்ளனர்.

இதனை சத்தியமூர்த்தி தட்டிக் கேட்டுள்ளார்.

தலைவன்வடலி கிராமத்துக்கு அருகிலுள்ள கீழகீரனூர் கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் தன் இரண்டு நண்பர்களுடன் சத்தியமூர்த்தி, இளநீர்களைப் பறித்தபோது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்தது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், “கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்திக்கு 2 அண்ணன், 2 தங்கைகள் இருக்காங்க. அப்பாவும் அம்மாவும் கூலி வேலை பார்த்துதான் குடும்பத்தை நடத்திட்டு வர்றாங்க. சத்தியமூர்த்தி, வாய்த்துடிப்பான பையன். எது கேட்டாலும் சரியாவே பதில் சொல்ல மாட்டான். எல்லாத்துக்கும் எடக்கு மடக்காவே பேசுவான்.

பி.காம் முதல் வருஷம் திருச்செந்தூர்ல உள்ள ஒரு காலேஜ்ல படிச்சான். அங்க பாடம் சொல்லித் தர்ற புரொபசரையே வாய்க்கு வந்தபடி பேசியதுல டி.சி-யைக் கொடுத்துட்டாங்க. அவனோட அப்பா, யார் கையில காலில விழுந்தோ ஸ்ரீவைகுண்டம், பத்மநாபமங்கலத்துல உள்ள காலேஜ்ல ரெண்டாவது வருஷம் சேர்த்துவிட்டாரு. அங்கேயும் பசங்களை செட்டு சேர்த்துக்கிட்டு பிரச்சனை பண்ணிருக்கான். அங்க இருந்தும் துரத்தி விட்டுட்டாங்க. இப்போ, மூணாவது வருஷம் தூத்துக்குடியில உள்ள ஒரு காலேஜ்ல படிச்சுட்டு வர்றான்.

தலைவன்வடலி கிராமத்துக்காரங்களுக்கும், கீழகீரனூர் கிராமத்துக்காரங்களுக்கும் பல வருஷமா பிரச்னை இருந்துட்டு வருது. சின்னப்பசங்க பிரச்னை என்றால்கூட பெரியவங்க வரைக்கும் போயி பெருசாயிடும். இந்த நிலையிலதான், சில மாதங்களுக்கு முன்பு கீழகீரனூர் கிராமத்துல உள்ள ஒரு தென்னந்தோப்புக்குள்ள சத்தியமூர்த்தியும் அவனது ரெண்டு நண்பர்களும் நுழைஞ்சு, தென்னமரத்துல ஏறி இளநீர்களைப் பறிச்சிருக்காங்க.

இதைப்பார்த்த தோப்புல வேலை பார்த்த சிலர் மூணு பேரையும் மரத்துல கட்டி வச்சு கடுமையா திட்டி, மரம் ஏறித் திருடியதற்கு மன்னிப்பு கேட்கச் சொன்னதாகச் சொல்றாங்க. மற்ற ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்டிருக்காங்க. ஆனா, கடைசி வரையிலயும் சத்தியமூர்த்தி, மன்னிப்பு கேட்க முடியாது எனச் சொன்னதுடன், அந்த ஊர்க்காரங்களை சாதி பெயரைச் சொல்லி அவதூறா பேசியதாகவும் சொல்கிறார்கள். இந்த விஷயம் அந்த ஊருல உள்ள இவன் வயசுப் பயலுகளுக்குத் தெரிஞ்சு, ரெண்டு தரப்புக்கும் மோதல் இருந்து வந்திருக்கு.

இந்த நிலையிலதான் தலை துண்டித்து கொடூரமா கொலை செஞ்சிருக்காங்க. செஞ்சது தப்புன்னு உணராம, மன்னிப்பு கேட்கச் சொன்னதை அவமானமா நினைச்சதுனால வந்த விளைவுதான் இது” என்றனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், “கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்தி மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 2 வழக்குகள் உள்ளன. இந்தச் சம்பவம் குறித்து இரண்டு பேரைக் கைது செய்து விசாரணை நடத்திட்டு வர்றோம். மேலும் நான்கு பேரை தேடிக்கிட்டு இருக்கோம். விசாரணை முடிந்தால்தான் எதுவும் சொல்ல முடியும்” என்றனர்.

கீழ கீரனுரை சேர்ந்த ராஜேஷ், பழனிச்சாமி, குட்டி என்ற முனியசாமி, ஸ்டீபன்ராஜ், ஸ்ரீதர், வினோத் ஆகிய 6 பேருமே கொலையுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த கொலையால் ஆத்திரமடைந்த தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கீழ கீரனூர் கிராமத்துக்குள் அத்துமீறி நுழைந்து 30 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

தலைவன்வடலி மற்றும் கீழ கீரனுர் கிராமங்களை சேர்ந்தவர்கள் இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமார், தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் ஆகியோர் இந்த பகுதியில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். சுமார் 600 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here