4 நாளின் பின் அசைந்தது அமெரிக்கா: கொடூரன் கைது; கொலைக்குற்றச்சாட்டு பதிவு!


அமெரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலொய்ட் என்பவரை கழுத்தை அழுத்தி கொன்ற கொடூர பொலிஸ் அதிகாரி மீது மூன்றாம் நிலை கொலை, படுகொலை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. நேற்று அவன் கைது செய்யப்பட்டான்.

மினியாபொலிஸ் பொலிஸ் அதிகாரியான டெரெக் சவுன் என்பவர் மீதே இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் தற்போது, சட்டஅமுலாக்க அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹென்னெபின் கவுண்டி சட்டத்தரணி மைக் ஃப்ரீமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அந்த கொலைக்கு நீதி கோரி அமெரிக்காவில் போராட்டங்கள் தீவிரம் பெற்று, வன்முறைகள் அதிகரித்துள்ள பின்னணியில், 4 நாட்கள் கழித்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“நாங்கள் ஆதாரங்களை மறுஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதன் முடிவில் இன்னும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம்“ என அவர் தெரிவித்தார்.

ஜோர்ஜ் ஃபிலொய்ட் டின் கழுத்தை தனது முழங்கால்களால் டெரெக் சவுன் சில நிமிடங்களுக்கு அழுத்தி வைத்திருந்தது கமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது. என்னால் மூச்சுவிட முடியாமல் உள்ளது என அவர் அந்தரித்ததும் பதிவாகியுள்ளது.

மூன்றாம் நிலை கொலைக்குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டால் அதிகபட்சமாக 25 வருடங்கள் வரை சிறைத்தண்டனை பெற வாய்ப்புள்ளது.

டெரெக் சவுனுடன் கடமையில் இருந்து கொலைக்கு உடந்தையாக இருந்த மற்றைய 3 பொலிஸ்காரர்களிற்கும் எதிரான விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் பொலிஸ் சேவையிலிருந்து தற்போது இடைநீக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் எட்டு நிமிடங்கள் 46 வினாடிகள் ஃப்லொய்டின் கழுத்தில் சவுன் முழங்கால் வைத்திருந்தான். ஃபிலொய்ட் அசைவற்ற நிலைக்கு சென்ற பின்னரும் இரண்டு நிமிடங்கள் 53 வினாடிகள் முழங்காலால் அழுத்தியுள்ளான்.

சந்தேக நபரை இவ்வளவு நேரம் கட்டுப்படுத்துவது  ‘இயல்பாகவே ஆபத்தானது’ என்று பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னால் மூச்சுவிட முடியாதிருப்பதாக ஃபிலொய்ட் கூறியபோது, “நீ நன்றாக பேசுகிறாய்“ என சவுன் கூறியதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவரது கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் நிலையை மாற்றி, அவரை வேறு நிலையில் கட்டுப்படுத்தலாமென இன்னொரு பொலிஸ்காரர் சொன்னதையும் சவன் நிராகரித்துள்ளனா்.

இருப்பினும், ஹென்னெபின் கவுண்டி மருத்துவமனையின் ஆரம்ப பிரேத பரிசோதனையில் ‘அதிர்ச்சிகரமான மூச்சுத்திணறல் அல்லது கழுத்தை நெரித்தல்’ காரணமாக உயிரிழந்தார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஃபிலொய்ட் கட்டுப்படுத்தப்பட்டதிலிருந்தும், அடிப்படை சுகாதார நிலைமைகளிலிருந்தும் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here