சீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுகிறது: இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா எதிர்ப்பு


ஹொங்கொங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுவதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஹொங்கொங்கில் சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த முடிவு எடுத்து உள்ளது. இதற்கான வரைபு, ஹொங்கொங் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி உள்ளது. இந்த வரைபுக்கு எதிராக அங்கு பொதுமக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த வரைபு, ஹொங்கொங்கின் சுயாட்சிக்கு எதிரானது என்ற கருத்து எழுந்துள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் அந்த நாடுகள், “ஹொங்கொங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சீனாவின் முடிவானது, சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டதும், ஐ.நா. சபை பதிவு செய்ததுமான சீன, இங்கிலாந்து கூட்டு பிரகடனத்தின் கொள்கைகளின்கீழ் சர்வதேச கடமைகளை மீறுவதாக அமைந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த சட்டம், ஒரு நாடு, இரண்டு அமைப்புகள் என்னும் கட்டமைப்பை குறைப்பதாகும் என்றும் கூறி உள்ளன.

இதற்கிடையே இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டொமினிக் ரொப் நிருபர்களிடம் பேசுகையில், “ஹொங்கொங்கில் சீனா தனது புதிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அங்கு இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் உரிமைகளை சுற்றி, இங்கிலாந்து தனது விதிமுறைகளை மாற்றி விடும். இது இங்கிலாந்து குடியுரிமைக்கு ஒரு பாதையை ஏற்படுத்தும்” என கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here