கூட்டமைப்பின் தலைவர்கள் சந்திக்கிறார்கள்; சுமந்திரன் விவகாரம் பேசப்படுமா?: உண்மை என்ன?


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்கும், இரா.சம்பந்தனிற்குமிடையில் விரைவில் சந்திப்பு நடக்கலாமென தெரிகிறது. அனேகமாக இந்த சந்திப்பு இன்று அல்லது நாளை நடக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இதன்பின்னர் இரா.சம்பந்தன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இரா.சம்பந்தன், சுமந்திரன் மிக நெருக்கமானவர்கள் என்பதால், அந்த விதமான அறிக்கையை அவர் வெளியிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்தநிலையில், மாவை சேனாதிராசாவை அகற்றிவிட்டு, எம்.ஏ.சுமந்தினை தலைவராக்க வேண்டுமென செயற்பட்டு வரும் சில ஊடகங்கள் வாயிலாக அண்மையில் ஒரு போலிச் செய்தி கசியவிடப்பட்டிருந்தது. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மூவரும், எம்.ஏ.சுமந்திரன் மீது நடவடிக்கெயடுத்த வலியுறுத்தி, இரா.சம்பந்தனை சந்திக்க செல்வதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், அது போலியான செய்தி.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளின் தலைவர்களும், இரா.சம்பந்தனும் சந்தித்து பேசுவதென அண்மைக்காலமாக திட்டமிடப்பட்டிருந்த போதும், கொரோனா நெருக்கடி காரணமாக அது சாத்தியமாகியிருக்கவில்லை.

இந்த நிலைமையில் சுமந்திரன் சர்ச்சையும் உருவானது. கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கை, தேர்தல் உத்திகள் உள்ளிட்ட கட்சி விவகாரங்கள் பேசப்படும் சந்திப்பொன்று இன்று அல்லது நாளை நடக்குமென தெரிகிறது.

காலமாகிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அஞ்சலி நிகழ்வு இன்று நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அங்கத்துவ கட்சிகளின் மூன்று தலைவர்களும் கொழும்பு சென்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில், முன்னர் திட்டமிட்ட சந்திப்பு நடக்கலாமென தெரிகிறது.

மாவை சேனாதிராசாவிற்கு எதிரணி பரப்புவதை போல, சுமந்திரனுக்கு எதிரான சந்திப்பல்ல இது. கட்சியின் சமகால விவகாரங்கள் பேசப்படும்போது, சுமந்திரனின் புலிகள் தொடர்பான எதிர்ப்புணர்வு கருத்துக்களிற்கு பூட்டுப்போடுவது பற்றியும் கலந்துரையாடப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here