‘மோடியே திரும்பிப் போ’- திமுக எம்எல்ஏ பறக்கவிட்ட ராட்சத கருப்பு பலூன்

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சி தொடக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அனைவரும் கருப்பு உடை அல்லது கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் எனவும், அனைவரது வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றி துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும், திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. அதில், “மோடியே திரும்பிப் போ” என்பதைக் குறிக்கும் வகையில் ‘MODI GO BACK’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here