தமிழ்பக்கத்திற்கு தகவல் வழங்கியது யார்?; ரெலோ தலைமைக்குழுவில் விவாதம்: உறுப்பினர்களிற்கு வாய்ப்பூட்டு!

சற்று முன்னர் நிறைவடைந்த ரெலோ தலைமைக்குழு கூட்டத்தில் தமிழ்பக்கம் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் நடந்துள்ளன. ரெலோவின் உள்வீட்டு விடயங்களை- அப்படியே தமிழ்பக்கத்திற்கு அச்சொட்டாக கசிய விடும் அந்த முக்கியஸ்தர் யார் என்று இன்று கடும் விவாதம் நடைபெற்றது.

ரெலோ அமைப்பின் தலைமைக்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. 21 தலைமைக்குழு உறுப்பினர்களில் 13 பேர் கலந்து கொண்டிருந்தனர். செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன், சிறீகாந்தா, கோவிந்தன் கருணாகரன், விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் ஆரம்பத்திலேயே தமிழ்பக்கம் தொடர்பில் சர்ச்சை வெடித்தது.

கடந்த வாரம் திருகோணமலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோரை ரெலோ சந்தித்து கலந்துரையாடியது. ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் சிறிகாந்தா உள்ளிட்ட ஆறுபேர் அதில் கலந்து கொண்டனர். இரவு சந்திப்பு முடிந்ததும், “வழக்கமான சந்திப்புத்தான் இது“ என ரெலோ தரப்பு ஊடகவியலாளர்களிற்கு சொல்லிக் கொண்டிருக்க, கூட்டத்தில் நடந்த அத்தனை விடயங்களையும் தமிழ்பக்கம் வெளியிட்டது. இதையடுத்து, யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் மறுநாள் அதை பிரசுரித்திருந்தன.

செல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா ஆகியோர் ஊடகங்களிடம் வழக்கமான சந்திப்பு என்றுதான் கூறினார்கள், அப்படியானால் மிகுதி நால்வரில் யாரோ ஒருவர்தான் தமிழ்பக்கத்தின் “உளவாளி“ என சிறிகாந்தா பகிரங்கமாக சீறினார். செல்வம் அடைக்கலநாதனும் அதை வழிமொழிந்தார்.

கட்சியின் உள்விடயங்களை பகிரங்கமாக வெளியில் சொல்லக்கூடாது, அது முறையற்ற நடவடிக்கையென அங்கு அறிவுரையும் வழங்கப்பட்டது. இதன்பின்னரே, கட்சியின் ஏனைய விடயங்கள் ஆராயப்பட்டன.

கட்சியின் தேசிய மாநாட்டை செப்ரெம்பரிற்கு ஒத்திவைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஓகஸ்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், தற்போது செப்ரெம்பர் இறுதிக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

வரும் பத்தாம் திகதி நடக்கும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து, தேசியப்பட்டியல் தொடர்பில் பேசுவதென்றும் முடிவாகியுள்ளது.

அண்மையில் விந்தன் கனகரட்ணம் நடத்திய செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக சிறிகாந்தா பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தார். தமிழரசுக்கட்சியையும், சுமந்திரனையும் தாக்கி பேசப்பட்டது தவறென குறிப்பிட்டார். இந்த விடயத்தை சிறிகாந்தா அண்மையில் பகிரங்க மேடையிலும் பேசினார். அதை தவறென வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டார்.

இதையடுத்து கட்சி உறுப்பினர்களிற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்புக்களை நடத்துவதென்றால் கட்சி தலைவர் அல்லது செயலாளரின் அனுமதியை பெற்ற பின்னரே நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது. கட்சியின் பல கட்டுப்பாடுகளை மீறி சிவாஜிலிங்கம் செயற்பட்டு வருகிறார், அவரை கட்டுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா? அவர்தானே வாரத்துக்கொரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருப்பவர் என பலரும் சுட்டிக்காட்டினர். அதை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுப்பதாக கூறப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பில் கட்சிக்குள் நிலவும் விவகாரங்கள் குறித்தே ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதிக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here