செம்பருத்தி சீரியல் நடிகையை பார்க்க போக பெற்றோரை மிரட்டிய யாழ் யுவதி: தவறுதலாக தீப்பற்றியதில் உயிரிழந்த பரிதாபம்!


தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்ல பெற்றோரை மிரட்ட தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக மிரட்டிய யுவதி, தவறுதலாக தீப்பற்றியதில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் , மல்லாகத்தின் கோட்டைக்காடு கிராமத்தில் இந்த துயர சம்பவம் நடந்தது. சூரியகுமார் தேனுஜா (26) என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.

மல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் நடிகையை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். எனினும் பெற்றோர்கள் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இப்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (24) இந்த விவகாரம் மீண்டும் வீட்டில் சூடு பிடித்தது. தன்னை இந்தியா அழைத்துச் செல்லுமாறு யுவதி வலியுறுத்தியுள்ளார். தற்போது கொரொனா காலமாகையால் இந்தியா செல்ல முடியாதென பெற்றோர் குறிப்பிட்டனர். எனினும், இந்தியா போகலாமென குறிப்பிட்ட யுவதி, பணத்தை தன்னிடம் தருமாறும், தான் இந்தியா சென்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பெற்றோர் அதற்கு சம்மதிக்காததையடுத்து, வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றி, தனக்குத்தானே தீ வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

அவர் தீக்குச்சியை தீமூட்ட முயன்றபோதும், அது தீப்பற்றவில்லை. அவர் சில சந்தர்ப்பங்களில் இப்படி விடாப்பிடியாக நடந்து கொண்டிருந்ததால், இம்முறையும் அதை பெற்றோர் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், யுவதி அருகிலுள்ள காகிதமொன்றை எடுத்து அதில் தீமூட்டி பார்த்துள்ளார். இதன்போது தீக்குச்சி தீப்பற்றி, யுவதியின் முகப்பகுதியில் பற்றிக் கொண்டது.

உடனடியாக பெற்றோர் தீயை அணைத்து யுவதியை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். தான் விளையாட்டிற்காக செய்ததாகவும், தன்னைக்காப்பாற்றுமாறும் யுவதி அவலக்குரல் எழுப்பினார்.

பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here