மட்டு ஐ.தே.க அமைப்பாளரை தூக்க ஸ்கெட்ச் போட்ட ஸ்ரீநேசன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு எம்.பி ஸ்ரீநேசன் குழுவினருக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் கடந்த மாதம் 26ம் திகதி ஈஸ்ற் லகூன் நட்சத்திர விடுதியில் நடந்த சந்திப்பு தொடர்பில் தமிழ்பக்கம் சில தினங்களிற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, மேலும் சில தகவல்களையும் பெற்றிருக்கிறோம்.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்கள் ஸ்ரீநேசன், யோகேஸ்வரன் ஆகியோருடன், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சரவணபவனும் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் அலிசாகிர் மௌலானாவும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பில்- மாவட்ட கணக்காளர் நியமனம் தொடர்பாக பேசப்பட்டதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

இந்த சந்திப்பிற்கு முன்னதாக, மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க முக்கியஸ்தர்களை ரணில் விக்கிரமசிங்க சந்தித்திருந்தார். இதன்போது, ஐ.தே.கவின் சிறிய அணியொன்று, மட்டக்களப்பு ஐ.தே.க பிரமுகர் கணேசமூர்த்தி தொடர்பில் அதிருப்தி வெளியிட்டிருந்தது. இந்த அதிருப்தியை ரணில் விக்கிரமசிங்க சமாளித்து, கூட்டத்தை முடித்திருந்தார்.

பின்னர், ரணில்- ஸ்ரீநேசன் சந்திப்பு முடிந்த பின்னர், அலிசாகிர் மௌலானாவின் ஏற்பாட்டில் ஐ.தே.க முக்கியஸ்தர் கபீர் ஹாசிமுடன் தொலைபேசியில் ஸ்ரீநேசன் உரையாடியிருந்தார். இதன்போது, மட்டக்களப்பு அமைப்பாளர் பதவியிலிருந்து கணேசமூர்த்தியை அகற்றும்படி ஸ்ரீநேசன் கோரிக்கை விடுத்திருந்தார். “ஐ.தே.கவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்துணர்வுடனும், நல்லிணக்கத்துடனும் செயற்படுகிறது. ஆனால் மாவட்ட அமைப்பாளர் கணேசமூர்த்தி எமக்கு எதிராக, மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார். அவரை மாற்றி புதிய ஒருவரை நியமியுங்கள்“ என கோரிக்கை விடுத்ததாக, அந்த சந்திப்பில் கலந்து கொண்ட, இன்னொரு முக்கியஸ்தர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

கணேசமூர்த்தியை மாற்றினால் அந்த இடத்திற்கு பொருத்தமானவர் என, ஓய்வுபெற்ற பெண் நீதிபதியொருவரின் பெயரையும் ஐ.தே.கவிற்கு ஸ்ரீநேசன் முன்மொழிந்திருந்தார்.

அண்மையில் கபீர் ஹாசிம் கூட்டமொன்றில் உரையாற்றியபோது, விடுதலைப்புலிகளில் பிளவை ஏற்படுத்தி, இலங்கையில் ஐக்கியத்தை ஏற்படுத்தியவர் அலிசாகிர் மௌலானா என புகழாரம் சூட்டியிருந்தார். இந்த அணியுடன் த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு பிரமுகர்களிற்கு என்ன இரகசிய உறவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here