பிரிந்த காதலனின் இறுதிச்சடங்கிலன்று நீர்த்தேக்கத்தில் குதித்த யுவதி… பெற்றோரின் மூளைக்கும் பிள்ளைகளின் இதயத்திற்குமிடையிலான முடிவற்ற போர்: ரிஸ்வான் மரண சம்பவத்தின் பின்னணி!


மே 21.

காலை 10 மணி இருக்கும். தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் திடீரென யுவதியொருவர் குதித்தார். அவரது அலறல் சத்தம் அந்த பகுதியில் எதிரொலித்தது.

அண்மைக்காலமாக இலங்கையில் வரண்ட காலநிலை நிலவியது. இதனால் அனேக நீர்த்தேக்கங்கள் வற்றியிருந்தன. மேல் கொத்மலை நீர்த்தேகத்தின் நீர் மட்டமும் கணிசமாக குறைந்திருந்தது. எனினும், அண்மையில் வங்கக்கடலில் ஏற்பட்ட அம்பன் சூறாவளி காரணமாக, நாட்டில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக மத்திய மலைநாட்டில் அதிக மழை பெய்தது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கமும் நிறைந்தது.

21 வயதான திருச்செல்வம் சிறியானி என்ற யுவதியே தற்கொலை முடிவுடன் நீர்த்தேகத்தில் குதித்தார்.

இதன்போது நீர்த்தேகத்தை சுற்றியுள்ள பகுதியில் நிறையப் பேர் நின்றனர். யுவதி குதித்ததை கண்டதும், வீதியால் பயணித்தவர்களும் அந்த பகுதியில் குவிந்தனர். கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல் அங்கு குவிந்திருந்தனர். ஆனால் யாரும் யுவதியை மீட்க நீர்த்தேகத்திற்குள் குதிக்கவில்லை.

யுவதி நீரில் மூழ்குவதும், மூச்செடுக்க மேலெழுவதுமாக நீருக்குள் போராடிக் கொண்டிருந்தார். எதுவும் செய்ய முடியாதவர்களாக சுற்றியிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தச்சுத் தொழிலாளியான ரிஸ்வான் நீர்த்தேக்கத்திறகு அண்மையில் கட்டடம் ஒன்றின் நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பகுதிக்கு வந்தபோது நீர்த்தேகத்தை சுற்றி கூட்டம் கூடியிருந்தது. என்ன நடக்கிறதென அவரும் பார்த்தார். நீர்த்தேக்கத்திற்குள் யுவதியொருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் பார்த்தார். யாரும் உதவவில்லை. எதையும் யோசிக்காமல் உடனே நீர்த்தேகத்திற்குள் பாய்ந்தார்.

கயிறு ஒன்றுடனேயே அவர் நீந்திச் சென்றார். யுவதிக்கு அண்மையாக சென்று கயிற்றை அவர் நீட்டியபோதும், யுவதியால் அதை பிடிக்க முடியவில்லையென நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

யுவதி பிடித்து நீரின் மேற்பரப்பிற்கு கொண்டு வர ரிஸ்வரன் முயன்றபோது இருவரும் மீண்டும் நீருக்குள் மூழ்கி விட்டனர். இடையிடையே யுவதி மேலெழுந்தார். ரிஸ்வான் மேலெழவில்லை.

ரிஸ்வானை தொடர்ந்து மேலும் சில இளைஞர்கள் நீர்த்தேக்கத்திற்குள் குதித்திருந்தாலும், ரிஸ்வான் மூழ்கியதை தொடர்ந்து யாரும் அவரை நெருங்கவில்லை.

அந்த சமயத்தில் தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவான் பெர்னாண்டோ சம்பவ இடத்திற்கு பொலிஸ் அணியுடன் வந்திருந்தார்.

யுவதியின் நிலைமை மோசமடைவதை உணர்ந்த அவர், ரயர் ஒன்றுடன் நீர்த்தேகத்திற்குள் குதித்து நீந்தத் தொடங்கினார். யுவதியை மீட்டு ரயரில் அவரை வைத்து, கயிற்றால் கட்டப்பட்ட ரயரை இழுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார்.

கரையிலிருந்த மற்றைய பொலிசார், பொதுமக்களால் யுவதி கரைக்கு கொண்டு வரப்பட்டு, லிந்துலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சிறியானியின் விபரீத முடிவிற்கு காரணம் என்ன?

நீரில் குதித்த யுவதி சுமார் அரை மணித்தியாலம் நீருக்குள் வாழ்வா சாவா போராட்டம் நடத்தினார். அவருக்கு உதவச் சென்ற ரிஸ்வான் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார்.

சிறியானி தலாவக்கலையில் வசிப்பவர். அவர் நானு ஓயாவை சேர்ந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்தார். நீண்டகாலமாக இந்த காதல் விவகாரம் இருந்தது. எனினும், சிறியானியின் பெற்றோர் இந்த காதல் விவகாரத்தை ஏற்கவில்லை. அவர்கள் தமது மகளிற்கு வெறொரு மணமகனை பார்த்தனர்.

ஆரம்பத்தில் சிறியானி எதிர்ப்பை காண்பித்தபோதும், இறுதியில் பெற்றோரின் வற்புறுத்தலிற்கு சம்மதித்தார்.

சிறியானி வெறொரு திருமணம் செய்யப் போகிறார் என்பதை அறிந்த நானு ஓயா இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார். சிறியானி உயிரை மாய்க்க முடிவெடுத்து நீர்த்தேக்கத்தில் குறித்த 21ஆம் திகதியே, அந்த இளைஞனின் இறுதிச்சடங்குகள் நடக்கவிருந்தது.

ரிஸ்வான் நல்ல மனிதர், மற்றவர்களிற்கு உதவக்கூடியவர் என அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், ரிஸ்வானின் தாயார் வேறுவிதமாக கூறுகிறார்.

“எங்களுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டாவது மகன் ரிஸ்வான். அவர் எங்களுடன் அருகிலுள்ள வீட்டில் வசிக்கிறார். மகனுக்கு 12 வயது. மகளுக்கு 9 வயது. சந்தோசமாக வாழ்ந்தனர். எல்லோரும் எனது மகன் ஒரு ஹீரோ என்று கூறுகிறார்கள். ஆனால் இன்று அவர் இல்லை. அவரது இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறேன்“ என ரிஸ்வானின் தாய் நில்மினி குமாரி கூறினார்.

பண்டாரவளையை சேர்ந்தவரான, தலாவாக்கலை ஓ.ஐ.சி ருவான் பெர்னாண்டோ, அனைத்து மக்கள் மற்றும் பொது சொத்துக்களை பாதுகாப்பதாக உறுதியெடுத்த ஒரு பொலிஸ் அதிகாரியாக எனது கடமையையும், சமூகப் பொறுப்பையும் நிறைவேற்றிய திருப்தியுள்ளதாக தெரிவித்தார். தனக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். மற்றவர்களிற்கு உதவ தயங்கும் சமூகத்தில் ரிஸ்வான் போன்றவர்கள் மரியாதைக்குரியவர்கள். அவரை இழந்தது வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எடுக்கும் சில முடிவுகள், யாரென்று தெரியாதவர்களின் குடும்பங்களையே எப்படி மீள முடியாத சோகத்தில் தள்ளுகிறது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம். இந்த உலகத்தில் வாழவே பிடிக்காமல் உயிரை மாய்க்கலாமென சிறியானிக்கு தோன்றியது. ஆனால் அவரை சாக விடாமல் காப்பாற்ற, யாரென்றே தெரியாத ஒருவர் ஆபத்தை பொருட்படுத்தாமல் நீருக்குள் குதித்து, தன்னுயிரை இழந்திருக்கிறார்.

ரிஸ்வான் என்ற பெயரை இதுவரை அறிந்திராவர்கள் எல்லோரும் இப்பொழுது அவருக்காக அனுதாபப்படுகிறார்கள்.

உலகத்தில் நம்பிக்கை இழை நமது கண்ணுக்கு தென்படவில்லையென்றாலும், அது நம்மை சுற்றிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உயிரை மாய்க்க முடிவெடுப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ரிஸ்வானின் தந்தை

ஒரு காதல் உறவு பிரிந்த… உயிரிழந்த துயரம் பெரியது. அதனை தாங்க முடியாமல் அந்த யுவதி அப்படியொரு முடிவெடுத்திருக்கிறார். திருமண வாழ்க்கையென்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்னொரு படிமுறை. அதில், மனதுக்கு பிடித்தவர்களுடன் வாழ இளவயது இதயம் விரும்பும். காதலுக்கு வெளியிலுள்ள மற்றை அனைத்து விடயங்களையும் மூத்தவர்களின் மூளை சிந்திக்கும். தலைமுறைகளிற்கிடையிலான இந்த இதயத்தினதும், மூளையினதும் சிந்தனைகளால் அடிப்படி விபரீதங்கள் நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது. எப்படி சிந்தனை வேறுபாட்டை கடக்கலாமென்பதிலேயே குடும்பங்களின் மகிழ்ச்சி தங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here