இலங்கை யானையின் நரக வேதனைக்கு முடிவு: பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாகிஸ்தான் மிருகக்காட்சி சாலையில் நீண்ட பல வருடமாக நரக வேதனையை அனுபவித்து வந்த காவன் யானையை விடுவிக்க பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து உலகமெங்குமுள்ள மிருக ஆர்வலர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார்கள்.

காவனை உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அது எங்கிருந்து வந்ததோ, அங்குள்ள (இலங்கை) அதிகாரிகளிடம் பேசி, காவனிற்கு பொருத்தமான வசிப்படத்தை அடையாளம் காண நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த 30 நாட்களிற்குள் இதை நடைமுறைப்படுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

காவன் யானை தனது ஒரு வயதில் இலங்கையிலிருந்து பாகிஸ்தானிற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

யானைகள் இல்லாத நாடான பாகிஸ்தானிற்கு இலங்கை 1985ஆம் ஆண்டு ஒரு வயதான காவன் யானையை அன்பளிப்பு செய்தது. பின்னர் 1990 இல் அதற்கு துணையாக சஹோலி என்ற பெண் யானையையும் இலங்கை அன்பளிப்பு செய்தது.

2012ஆம் ஆண்டு சஹோலி உயிரிழந்தது.

அதன்பின்னர் காவன் தனிமையில் இருந்தது. ஆசிய யானைகள் மிதவெப்பமான பகுதிகளில் வாழும் நிலையில், மிருகக்காட்சிசாலையில் மோசமான சூழலில் வசித்தது. சுமார் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் அது வசித்தது.

தனிமையில் வசிப்பதால் விரக்தியில் இருந்த அந்த யானை குழப்பத்தில் ஈடுபட்டதாக 2015 இல் குறிப்பிட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டது.

அப்போது, மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரை எதிர்த்து குரலெழுப்பப்பட்டு, பலர் மனுவில் கையெழுத்திட்டனர்.

பிரபல பாடகி செர், யானைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். உலகளவில் அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார். அவரது முயற்சியால் உலகம் முழுவதும் 200,000 க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்ட மனு பாகிஸ்தானிடம் கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here