கல்மதுரையில் மண்சரிவு அபாயம்: 42 பேர் வெளியேற்றம்!

அக்கரப்பத்தனை கல்மதுரை தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக, ஏழு குடும்பங்களைச்சேர்ந்த 42 பேரை வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில், நேற்று (21) பெய்த பலத்த மழை காரணமாக, கல்மதுரை தோட்ட குடியிருப்புகளுக்கு மேற்பகுதியிலுள்ள மலையில், நீர்க்கசிந்து வீடுகளில் புகுந்துள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது அந்த மலையில் பாரிய வெடிப்புககள் ஏற்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து அந்த வீடுகளில் வசித்தவர்கள் அயலவர்களின் வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் நேற்று  இரவு தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம், வெடிப்புகள் ஒன்றரை அடி வரை விரிவடைந்துள்ளதால், அது தொடர்பில் தோட்ட நிர்வாகத்துக்கும் கிராமசேவகர்களுக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து, மேற்படி குடும்பங்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டனர். ஆனால் வெளியேறுவதற்கு எந்தவிதமான ஏற்பாடுகளையும் தோட்ட நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை எனவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மலையிலிருந்து நீர் கசிந்தவண்ணமே உள்ளதால், இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என மக்கள் அச்சங்கொண்டுள்ள நிலையில், பாரிய உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக, தங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு மேற்படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here