மகன் கீழே விழுந்தது தெரியாமல் போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற தந்தை!

ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து குழந்தை சாலையில் விழுந்தது கூட தெரியாமல், குடிகார தந்தை சென்றுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் உற்சாகமடைந்தனர். மது குடிப்பவர்களால் தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள் அரங்கேறுவதாக செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மதுபோதையில் தொழிலாளி ஒருவர், தனது மகன் கீழே சாலையில் விழுந்தது கூட தெரியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (38). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு அன்பு அமுதன் (4), அகிலேஸ்வரன் (1) என 2 மகன்கள் உள்ளனர். செல்வம் திருப்பூரில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், செல்வம் திருப்பூரில் இருந்து தனது குடும்பத்தினரை அரியலூர் மாவட்டம் கண்டியங்கொல்லை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு அழைத்து வந்து, தங்கி உள்ளார்.

மது பழக்கத்திற்கு அடிமையான செல்வம், நேற்று முன்தினமும் மது குடித்துள்ளார். பின்னர் அவர் செல்போனை பழுது பார்ப்பதற்காக அன்று மாலை மோட்டார் சைக்கிளில் மூத்த மகனான அன்பு அமுதனை அழைத்துக்கொண்டு ஜெயங்கொண்டம் கடைவீதிக்கு சென்றுள்ளார். பின்னர் கடையில் செல்போன் பழுதை சரி செய்து வாங்கிக்கொண்டு, ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரங்கொண்டான் கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். ஏற்கனவே மது குடித்ததால் போதையில் இருந்த செல்வம், துக்க வீட்டிலும் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது.

பின்னர் அவர் தனது மகனுடன் கண்டியங்கொல்லைக்கு புறப்பட்டார். அப்போது அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததால் அவரை இரவோடு இரவாக செல்லவேண்டாம். இங்கே தங்கிவிட்டு காலையில் செல்லுங்கள் எனக்கூறி உறவினர்கள் தடுத்துள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாத செல்வம் இரவு 10 மணியளவில் தனது மகன் அன்பு அமுதனை மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்கின் மீது அமர வைத்துக்கொண்டு கண்டியங்கொல்லைக்கு புறப்பட்டுள்ளார். சிதம்பரம்-ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் புதுச்சாவடி அருகே சென்றபோது, செல்வத்திற்கு மதுபோதை அதிகமானதால் மோட்டார் சைக்கிளை நிலை தடுமாறி ஓட்டி சென்றுள்ளார். அப்போது, குழந்தை அன்பு அமுதன் மோட்டார் சைக்கிளில் இருந்து வழுக்கி சாலையில் விழுந்தான். தனது மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் செல்வம் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ராஜா, ராஜலிங்கம், நல்லசிவம், தினேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். அவர்கள், குழந்தை ஒன்று சாலையில் படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த குழந்தையை மீட்ட அவர்கள் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார். இதுகுறித்து கேள்விப்பட்ட செல்வத்தின் மனைவி மகாலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை அன்பு அமுதன் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.

குழந்தையின் தந்தை செல்வத்தை போலீசார் தேடியபோது, குழந்தை விழுந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சாலையோரத்தில் உள்ள வடிகால் அருகே முட்புதரில் மோட்டார் சைக்கிளுடன் செல்வம் சுய நினைவின்றி விழுந்து கிடந்தார். பின்னர் அவரும் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தையை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் குழந்தையின் குடும்பத்தினர், உறவினர்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here