மறக்க முடியாத நாள்: சென்னையில் ருத்ரதாண்டவமாடிய சயீட் அன்வர்!

சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் என்றால், ஒவ்வொரு ரசிகருக்கும் ஒவ்வொருவிதமான நினைவலைகள் காலச்சக்கரமாகச் சுழலும். 1983 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் கவாஸ்கர் விளாசிய 236 ரன் (நொட் அவுட்), 1986 இல் இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் டை; 1988 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களில் நரேந்திர ஹிர்வானி தன் மந்திரச் சுழலில் வீழ்த்திய 16 விக்கெட்டுகள்; 1999 இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி விரட்டலில் சச்சின் எடுத்த 136 ரன்கள், 2008 இல் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் சேவாக் அடித்த மறக்க முடியாத 319 ரன்கள்; 2016 இல் இங்கிலாந்துக்கு எதிராக கருண் நாயர் சேர்த்த 303 ரன்கள் என எத்தனையோ நினைவலைகள் வந்து செல்லும்.

அதுவே, சென்னையில் ஒரு நாள் போட்டி என்றால், ஒரே ஒரு மறக்க முடியாத இன்னிங்ஸ் எல்லார் மனதிலும் நினைவாக எட்டிப் பார்க்கும். அது, 1997 ஆம் ஆண்டில் சுதந்திர தினக் கோப்பைக்கான போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்கள் விளாசியதுதான். ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை அரங்கேறக் காரணமாக இருந்த அந்த இன்னிங்ஸ் நிகழ்ந்த நாள் இன்று (21-05-1997).

1980-90 களில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் உச்சபட்ச ரன் என்றால், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் விவியன் ரிச்சர்ஸ் 1984 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 189 (நொட் அவுட்) ரன் மலைப்பை உண்டாக்கும். 1996 இல் தென்னாபிரிக்க வீரர் கரி கிரிஸ்டன் 188 ரன்கள் எடுத்து விவியன் ரிச்சர்ஸின் சாதனையை வீழ்த்த முடியாமல் ஒரு ரன்னில் தவறவிட்டார். அதற்கு அடுத்த ஆண்டே விவியன் ரிச்சர்ஸின் சாதனையை உடைத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு நாள் கிரிக்கெட்டில் முதன் முறையாக 190 ரன்களைக் கடந்த வீரர் என்ற மைல்கல் சாதனையும் நிகழ்ந்தது. 1997 இல் வெயில் கொளுத்தும் கோடையான மே 21 அன்று சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சுதந்திர தினக் கோப்பைக்கான லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.

அப்போது சச்சின் டெண்டுல்கர்தான் இந்திய அணியின் கப்டன். பாகிஸ்தான் அணியின் கப்டன் ரமீஸ் ராஜா. ரொஸ் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார் ரமீஸ் ராஜா. தொடக்க ஆட்டக்காரராக சயீத் அன்வரும் இளம் வீரரன ஷாகித் அப்ரிடியும் களமிறங்கினர். அப்ரிடி விரைவாக அவுட்டாகிவிட, ரமீஸ் ராஜா, இஜாஸ் அகமது, இன்சமாம் உல் ஹக் ஆகியோர் அன்வருடன் சுமாரான பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அவர்கள் எல்லோரும் சொற்ப ரன்களையே எடுக்க, தனி ஒருவனாக சயீத் அன்வர் மட்டும் சேப்பாக்கத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். வெங்கடேஷ் பிரசாத், அபய் குருவில்லா, கும்பளே, சுனில் ஜோஸி, ராபின் சிங், சச்சின் டெண்டுல்கர் என பலருடைய பந்துவீச்சுகளையும் நொறுக்கினார் சயீத் அன்வர்.

போட்டி தொடங்கியது முதலே அன்வரின் அதிரடி ஆட்டத்தால் சென்னை ரசிகர்கள் வழக்கத்துக்கு மாறாக மயான அமைதியிலேயே இருக்க வேண்டியிருந்தது. நாலா புறமும் பந்துகள் பறக்க 26 வது ஓவரில் 100 ரன்களை எடுத்த சயீத் அன்வர், அதன் பின்னர் அவருடைய ஆட்டம் ஜெட் வேகம் பிடித்தது. பாகிஸ்தான் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அனில் கும்ப்ளேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை விளாசி 200 ரன்களை நோக்கி வேகமாக முன்னேறினார் சயீத் அன்வர். ரிச்சர்ஸின் 189 ரன் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரின் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து அன்வர் கடந்தார்.

சயீத் அன்வர் 190 ரன்களைக் கடந்த பிறகு 2 ஓவர்கள் முழுமையாக இருந்தன. எனவே, ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் என்ற புத்தம் புதிய சாதனை சென்னையில் படைக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். சச்சின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விளாசிய சயீத் அன்வர், 4 வது பந்தை ஸ்வீப் ஷொட் மூலம் அடிக்க முயன்றார், பந்து ‘ரொப் எட்ஜ்’ ஆகி உயரமாக ‘கல்லி’ திசையில் மேலே சென்றது. பகலிரவு போட்டி என்பதால், லைட்டுகள் ஒளிரவிடப்பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் உயரே சென்ற பந்தை சவுரவ் கங்குலி பிடிக்க முயன்றார். அவர் நிச்சயம் பிடிக்க மாட்டார் என்றே எல்லோரும் நினைத்திருப்பார்கள். ஆனால், பந்தைப் பிடித்து டைவ் அடித்து தலையில் கை வைத்தபடி தரையில் விழுந்தார் கங்குலி. அந்த விநாடி சேப்பாக்கம் அரங்கமே அதிர்ந்தது. கங்குலி பந்தைப் பிடித்ததும் ஒருசில விநாடிகள் அன்வரின் முகத்தில் ஏமாற்றம் தெரிய, அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கினார்.

ஆனால், ஒரு புதிய சாதனை அரங்கேற்றிய மகிழ்ச்சியோடு நடைபோட்டுவந்த அன்வரை அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கைதட்டி பாராட்டினார்கள். 146 பந்துகளைச் சந்தித்து 22 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உதவியுடன் 194 ரன்களைச் சேர்த்த அன்வரின் மறக்க முடியாத ஆட்டத்தால், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு பிறகு சயீத் அன்வரின் ரன் குவிப்பு பற்றி சுவாரசியமான ஒரு தகவல் வெளியானது. சயீத் அன்வர் புதிய உலக சாதனை படைத்த அந்தப் போட்டியில் பயன்படுத்திய துடுப்பு மட்டை, சென்னையில் உள்ள ஒரு விளையாட்டு உபகரணம் விற்கும் கடையில் அவர் வாங்கியது என்பது தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here