கொரோனா விடுதியில் உள்ளாடையுடன் பணிபுரிந்த தாதி!

கவச உடைக்குள் நீச்சல் உடை அணிந்து கொரோனா வைரஸ் சிகிச்சை மையத்தில் தாதியொருவர் வலம் வந்த காட்சி, ரஷ்யாவில் வைரலாகி உள்ளது.

ரஷ்யாவையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. அங்கு தாமதமாகவும், மெதுவாகவும் பரவத் தொடங்கிய அந்த வைரஸ், இப்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.

அங்கு நேற்று மதிய நிலவரப்படி இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 8 ஆயிரத்து 700 ஐ கடந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 2,900 ஐ தாண்டி இருக்கிறது.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து 193 கிலோமீற்றர் தொலைவில் துலா என்ற நகரத்தில் உள்ள வைத்தியசாலையில், கொரோனா வைரஸ் விடுதியில் பணியாற்றும் தாதியே வைரலாகியுள்ளார்.

இப்போது ரஷ்யாவில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

இதன் காரணமாக அந்த இளம் தாதி ‘டூபீஸ்’ நீச்சல் உடை அணிந்து, அதன் மேல் கொரோனா வைரஸ் விடுதியில் பணிபுரிவதற்கு உரிய பி.பி.இ என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார்.

இப்படி அவர் உடை அணிந்து, நோயாளிகளிடம் ஒரு தட்டில் மருந்துகள் எடுத்துச்சென்றார்

இதை யாரோ செல்போனில் படம் பிடித்து இருக்கிறார். அந்த காட்சி, மொஸ்கோவில் இருந்து வெளிவருகிற ‘துல்ஸ்கி நோவாஸ்டி’ பத்திரிகையில் வெளியானது. அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் மின்னல் வேகத்தில் பரவியது.

தாதி இப்படி ஒரு உடையில் வலம் வந்ததை கொரோனா வைரஸ் நோயாளிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் ரஷ்யா முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க தாதியர்கள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு மலை போல குவிந்தது.

ஒருவர் சமூக வலைத்தளம் ஒன்றில், “சரியாக செய்திருக்கிறார். அவர் தன் உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறார். அவருக்கு யாரும் நன்றி சொல்லவில்லை. ஆனால் கண்டிக்க வந்து விட்டார்கள்” என்று கூறி உள்ளார்.

இன்னொருவர், “தாதி தனக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி உடை அணிந்துள்ளார். யாரிடமும் காட்டிக்கொண்டிருப்பதற்கு அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவரோ, “எதற்காக எல்லோரும் ஓலமிடுகிறீர்கள்? கடும் வெப்பம் காரணமாக அவர் இப்படி உடை அணிந்தார் என்ற உண்மையை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த வெப்ப சூழ்நிலையில் இப்படித்தான் வேலை செய்ய முடியும் என்று அவர் காட்டி இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here