சென்னை வந்தார் மோடி: ராணுவக் கண்காட்சியில் பங்கேற்பு – பல்வேறு இடங்களில் போராட்டம்

பலத்த எதிர்ப்புக்கிடையே, இந்திய ராணுவக் கண்காட்சி தொடக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். திருவிடந்தையில் நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியில் அவர் பங்கேற்றுள்ளார். மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை முறைப் படி தொடங்கி வைத்து பார்வையிடுதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் 9.25 மணிக்கு ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் சென்று, அங்கிருந்து கார் மூலம் ராணுவக் கண்காட்சி நடக்கும் திருவிடந்தைக்கு 9.50 மணிக்கு பிரதமர் சென்றார். அங்கு நடைபெறும் ராணுவ கண்காட்சி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

கருப்புக் கொடி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்போவ தாக திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. மேலும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவைத் தலைவரான இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தேச பொதுவுடமை கட்சித் தலைவர் பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலை வர் கருணாஸ், திரைப்பட இயக்குநர்கள் அமீர், கவுதமன் உள்ளிட்டோர் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here