முள்ளிவாய்க்கால்: கடக்க முடியாத துயர நிழல்!

♦தமிழ்பக்கம்

நவீன மானிடகுல வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் மனிதப்பேரவலத்தின் நினைவுநாள் இது. உலகில் மீண்டும் ஒரு மனிதப்பேரவலம் நிகழக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஐநா சபையின் பிரதிநிதிகளை வெளியேற்றிவிட்டு, பன்னாட்டு மனிதஉரிமைகள், போர்ச்சட்டங்களை மீறி நிகழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் இனப்படுகொலையின் நினைவுநாள்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் என்ற பேதமின்றி வகைதொகையில்லாமல் கொல்லப்பட்ட மக்கள் புதைக்கப்பட்ட நாட்களையும் அதன் நினைவுகளையும் ஏந்தி இந்த நாட்களில் கடந்து செல்கிறோம். நினைவுகொள்ளவே முடியாத துயரத்தின் கனதியை இந்தநாட்களில் ஏந்திச்செல்லும் வல்லமையை எங்களிற்கு காலம் வழங்கட்டும்.

எத்தனை பேர் கொல்லப்பட்டனர், எத்தனை பேர் காணாமல் போனார்கள், எத்தனை பேர் குடும்பங்களை இழந்தார்கள், எத்தனை பேர் அங்கங்களை இழந்தார்கள், எத்தனை பேர் சொத்துக்களை இழந்தார்கள் என்ற ஒரு புள்ளிவிபரத்தையும் வரலாற்றின் ஏடுகளில் பதிந்து விடக்கூடாதென்ற மிருகத்தனமாக ஓர்மத்துடன் தமிழர்கள் என்ற சிறிய இனத்தின் மீது நடத்தப்பட்ட கொடிய போர் அது.

மே 18ம் திகதியுடன் அது முடியவில்லை. இன்றுவரை தொடர்கிறது. கொல்லப்பட்டவர், காணாமல் போனவர்கள் பற்றிய புள்ளிவிபரங்களை திரட்ட முடியாத நெருக்குவாரங்களை தொடர்ந்து ஏற்படுத்தி, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கும் அரசின் செயற்பாடுகள் கூட ஒரு மறைமுக போர்தான்.

மன்னாரில் ஆரம்பித்த போர் மெதுமெதுவாக நகர்ந்து வந்து முள்ளிவாய்க்கால் கரையோரமாக முடிந்த கோர யுத்தத்தின் அழியாத நினைவுகள் இன்றும் தமிழ் மக்களின் நினைவுகளில் உள்ளது. உலகத்தின் கண்களை மறைத்து அல்லது உலகம் கண்ணைமூடிக் கொண்ட சமயத்தில் நடந்த அந்த பேரழிவு நாட்களின் சில சம்பவங்களின் தொகுப்பு இது.

 • 2006 இல் தள்ளாடியிலிருந்து படைநடவடிக்கையை ஆரம்பித்த படையினர் 2008 ஓகஸ்டில் வெள்ளாங்குளம் நகரை கைப்பற்றினர். மன்னாரின் பல பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் வெள்ளாங்குளத்தில் தங்கவைக்கப்பட்டு, தன்னார்வ அமைப்புக்களால் பராமரிக்கப்பட்டு வந்தனர். வெள்ளாங்குளத்தை படையினர் கைப்பற்றியதன் மூலம் மன்னாரின் பெருமளவு பகுதியை இராணுவம் கைப்பறியது.
 • பூநகரி நகரத்தை 2008.11.15 இல் கைப்பற்றியதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. பூநகரியை கைப்பற்றியதன் மூலம் விடுதலைப்புலிகளின் தென்னிந்திய பின்தளம் அற்றுப்போனது. மன்னாரில் இருந்து ஏ 32 சாலை வழியாக பூநகரியை நோக்கி செல்லும் படையினரின் தசாப்தகால கனவு இதன்மூலம் நிறைவேறியது. 1985ம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாண படையினருக்கும் தென்னிலங்கை பின்தளத்தை கொண்ட வவுனியா, மன்னார் படையினருக்குமிடையில் தொடர்பு வழி ஏற்பட்டது.
 • பூநகரியில் இருந்து பரந்தனை நோக்கி முன்னேறிய படையினர் 2009.01.01 அதிகாலை பரந்தனை கைப்பற்றினார்கள். மறுநாள் கிளிநொச்சிக்குள் நுழைந்தார்கள். இதன் மூலம் ஏ9 வீதிக்கு கிழக்கு புறமாக மக்கள் குறுக்கப்பட்டனர்.
 • 2009.01.21 இல் பாதுகாப்பு வலயத்தை அரசு பிரகடனப்படுத்தியது. உடையார்கட்டு சந்தி தொடக்கம் மஞ்சள் பாலம் வரையான பகுதி பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், ஓரிரு நாட்கள் கழித்து அதன்மேல் செல் மழை பொழியப்பட்டது. இடம்பெயர்ந்து வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் வாகனத்திலேயே சடலமாக கிடந்தனர். வீதியெங்கும் சடலங்கள் சிதறிக் கிடந்ததாக அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பின்னர் விபரித்திருந்தனர்.
 • 2009.03.02 இல் புதுக்குடியிருப்பு நகரத்தை இராணுவம் கைப்பற்றியது. இதன்மூலம் மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான குறுகிய நிலத்தில் மக்கள் அடைபட்டனர்.
 • பாதுகாப்பு வலயத்தில் அடைபட்ட மக்களை புலிகளிடமிருந்து பிரித்தெடுக்க உணவு, மருந்து தடை மற்றும் அகோர செல் தாக்குதல் உத்தியை இராணுவம் மேற்கொண்டது. இதனால் பாதுகாப்பு வலயத்திற்குள் பெரும் மனிதப்பேரவலம் ஏற்படத் தொடங்கியது.
 • பட்டினியை பொறுக்க முடியாத மக்கள், மாத்தளனிற்கு அண்மையாக இருந்த உமி குவியலில் அரிசிமணி கிடைக்குமா என பொறுக்குவதை கண்டதாக ஒருவர் பதிவு செய்திருந்தார். நாள் முழுவதும் தேடினால் உள்ளங்கையில் சிறிதளவு அரிசி கிடைப்பதாகவும், குடும்பமாக அரிசி பொறுக்கி, கஞ்சி காய்ச்சி குடிப்பதாக இன்னொருவர் பதிவு செய்திருந்தார்.
 • 2008 நடுப்பகுதியின் பின்னர் அனேகமாக ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு வாரமும் புதிய இடங்களிற்கு குடிபெயர்ந்து கொண்டிருந்தார்கள். போகுமிடத்தில் பதுங்குகுழி வெட்டுவது தலையாய பணி.
 • உலகின் மிகப்பெரிய மலசலகூடமாக மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான கடற்கரை பகுதி மாறியது. இடம்பெயர்ந்து குறுகிய இடத்தில் அடைபட்ட மக்களிற்கு மலசலகூட வசதியும் இருக்கவில்லை. கடற்கரைதான் தஞ்சமாக இருந்தது. சிறிய கடற்கரையில் இலட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் கடற்கரையும் நகரத்தை போன்ற நெரிசலை கொண்டிருந்தது. மலசலகூடத்திற்கு செல்ல வழியில்லாததாலேயே பெண்கள் சாப்பிடாமல் இருந்த நாட்களவை.
 • நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்து கொண்டிருந்த காலம் அது. பொக்கணை பாடசாலை, மாத்தளன் பாடசாலையில் தரையில் காயமடைந்தவர்களை வரிசையாக அடுக்கி வைத்து அவசர சிகிச்சையளிக்கப்பட்டனர். அவசர சிகிச்சையளிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். காரணம், தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைவதால் அவர்களிற்கு சிகிச்சையளிக்க வசதியிருக்கவில்லை.
 • 2009 ஏப்ரல் 20இல் மாத்தளன் பகுதிக்குள் இராணுவம் ஊடுருவியது. சுமார் 150,000 மக்கள் இந்த சமயத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றனர்.
 • வலைஞர்மடம், முள்ளிவாய்க்காலில் குறுக்கப்பட்ட மக்கள் மீது நாலாபுறமிருந்தும் கோர தாக்குதல் நடத்தப்பட்டது. மே மாத ஆரம்பத்திலிருந்து வெளியில் தலைநிமிர்ந்து நடமாடியதில்லையென்கிறார்கள் அங்கிருந்த மக்கள். நாலா திசைகளில் இருந்தும் சீறிப்பாயும் தோட்டாக்கள் நிமிர்பவர்களை துளைத்து சென்றுவிடும்.
 • மே மாதத்தின் முதல்வாரத்தில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த வைத்தியசாலையை இராணுவம் நெருங்கிவிட்டது. காயமடைந்தவர்கள் அங்கிருந்து ஊர்ந்தபடி கிறவல் வீதிக்கு வந்து, வீதியில் கைவிடப்பட்டிருந்த வாகனங்களின் கீழ் தஞ்சமடைந்தனர். இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றவர்களின் உறவுகளே தனித்துபோய் சிரமங்களை அதிகமாக எதிர்கொண்டனர்.
 • அப்போது நடந்த சம்பவமொன்றை ஒருவர் நினைவுகூர்ந்தார். “நான் அவசரமாக வீதியால் சென்று கொண்டிருந்தேன். ஒரு டிப்பர் நின்றது. அதை கடக்க, திடீரென ஒரு கை என பாதத்தை பிடித்தது. ஒரு இளம்பெண். முள்ளந்தண்டு இயங்க முடியாமல் காயமடைந்திருந்தாள். வைத்தியசாலையிலிருந்து ஊர்ந்து வந்து, வாகனத்தின் கீழ் தஞ்சமடைந்திருக்கிறாள். வெயில் வேறு கொளுத்துகிறது. ஒரு சொட்டு தண்ணீர் கேட்டாள். பக்கத்தில் தேடி சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வாங்கிவந்து கொடுத்தேன். யாராவது இயக்க போராளிகளிடம் ஒரு குப்பி வாங்கி தருமாறு கெஞ்சினாள். என்னாலும் அதிகம் அவ்விடத்தில் நிற்க முடியாது. பக்கத்தில் இருந்த சிறிய பள்ளத்திற்குள் அவளை தூக்கி வைத்துவிட்டு வந்துவிட்டேன்“ என்றார்.
 • “தினமும் மரணத்தை கண்டது போய், ஒவ்வொரு நொடியும் மரணத்தை கண்டுகொண்டிருந்த சமயம். சடலங்களின் மேலாக நடந்துதான் நீரேரி கரையை அடைந்தேன். நடக்க முடியாத காயமடைந்தவர்கள் “என்னை தூக்குங்கோ“ என அவலமாக கத்திக் கொண்டிருந்தார்கள். யாருடைய உயிருக்கும் உத்தரவாதமற்ற சமயம் அது. இப்போது நினைக்க, பலரிற்கு உதவியிருக்கலாம் என தோன்றுகிறது. ஆனால் அப்பொழுது எதையும் சிந்திக்கும் நிலையில் இல்லை“ என்பது இன்னொருவரின் வாக்குமூலம்.
 • இந்த காலப்பகுதியில் ஒரு தேங்காயின் விலை 3,000 ரூபா. ஒரு பவுண் நகைக்கு ஒரு கிலோ அரிசி பண்டமாற்றப்பட்டது. ஒரு சங்கிலியை கொடுத்து ஒரு கிலோ மா வாங்கியவர்கள் இருக்கிறார்கள்.
 • பொக்கணையில் பால்மாவிற்கு வரிசையில் நின்றவர்கள் மீது நடத்தப்பட்ட உலங்கு வானூர்தி தாக்குதலில் வகைதொகையில்லாமல் மக்கள் கொல்லப்பட்டனர். 

 • 2009.05.16 மாலையில் தமது கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த மக்கள் வெளியேறுவதெனில், சுயவிருப்பின் அடிப்படையில் முடிவெடுக்குமாறு புலிகள் அறிவித்தனர்.
 • 16ம் திகதி முள்ளிவாய்க்காலில் சிறிய நிலப்பரப்பில் மக்கள் ஒடுக்கப்பட்டு, நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
 • தாக்குதல் அகோரத்தை தாங்க முடியாத மக்கள் வட்டுவாகல் பாலத்தால் முல்லைத்தீவு நோக்கி தப்பியோடினர். அங்கு மக்கள் தரம் பிரிக்கப்பட்டு, பலர் இராணுவத்தால் கைதாகினர். பலர் சரணடைந்தனர். சரணடைந்தவர்களை இராணுவம் பேரூந்தில் ஏற்றிச்சென்றதை கண்ணால் கட்ட சாட்சியங்கள் ஏராளம்பேர் உள்ளனர்.
 • இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் நடந்த விசாரணை இடங்களிற்கு அண்மையாக இருந்த தென்னந்தோப்புக்களில் பெண்களில் அலறலை கேட்டதாக கூறுபவர்களும் உள்ளனர்.
 • சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களிற்கு நடந்த துயரம் பற்றிய புகைப்பட, வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here