தவராசாவிற்கு தகுதியில்லை, மாற்றுங்கள்: வடமாகாணசபையில் புது குழப்பம்!

வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை மீண்டும் உருவாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை சி. தவராசா தார்மீக அடிப்படையில் வகிக்க முடியாது என வடமாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அதிக ஆசனங்களை வைத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

வடமாகாணசபையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவரானவர் ஈ.பி.டி.பி உறுப்பினராக இருந்த கமலேஸ்வரன். பின்னர், கொலைக் குற்றச்சாட்டில் சிக்கி எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்க, சி.தவராசாவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கும்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு கோரியது. தவராசா எதிர்க்கட்சி தலைவரானார். ஆனால் பின்னர் ஈ.பி.டி.பி கட்சிக்குள் ஏற்பட்ட சொத்து பிரிப்பு தகராற்றில் கட்சியை விட்டு ஒதுங்கினார் தவராசா. தவராசாவை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்க ஈ.பி.டி.பி கடும் முயற்சியெடுத்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுசெயலாளர், வடக்கு அவைத்தலைவரிற்கு கடிதமொன்றும் எழுதியுள்ளார்.

எனினும், தவராசா தொடர்ந்தும் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். தவராசா எதிர்க்கட்சி தலைவராக பதவியை தொடர்வதில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமே ஒரே காரணகர்த்தா. அப்பொழுது ஈ.பி.டி.பியுடன் மோதலில் இருந்ததாலும், விக்னேஸ்வரனை சங்கடப்படுத்தவும் தவராசாவே எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டுமென விரும்பிய சிவஞானம், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, இரகசியமாக பேசி- தவராசாவை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று தவராசாவை எதிர்க்கட்சி தலைவராக ஏற்க அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

எனினும், தற்போது வடமாகாணசபைக்குள் புதிய குழப்பம் எழுந்துள்ளது. அதிக ஆசனத்தை கொண்டுள்ள எதிர்க்கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகில இங்கை மக்கள் காங்கிரஸ் மூன்று உறுப்பினர்களை கொண்டுள்ளதால் அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி அல்லது, இரண்டு உறுப்பினர்களை கொண்ட சுதந்திரக்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டுமென கேட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ் பக்கத்திடம் கருத்து தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் ஜெயதிலக- “அவைத்தலைவர் கேட்டதாலேயே தவராசாவை ஆதரித்ததாகவும், இப்பொழுதாவது நேர்மையாக நடவுங்கள் என அவரிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளோம்“ என்றும் தெரிவித்தார்.

வடமாகாணசபைக்குள்ளும், வெளியிலும் சட்டம், நியாயம் எல்லாம் பேசும் தவராசா, எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிப்பதற்கான தார்மீக தகுதியை கொண்டிருக்கவில்லை. அரசியல் நேர்மை இருந்திருப்பின் தவராசா எப்பொழுதே அந்த பதவியை துறந்திருக்க வேண்டும் என்பதே உண்மையாகும்.

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here