இலங்கை வருமாறு இந்திய அணிக்கு அழைப்பு!

ஜூலை மாதத்தில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டி, மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஐசிசி அட்டவணைப்படி ஜூலை மாதம் இலங்கையில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாட வேண்டும். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கைச் சுற்றுப்பயணம் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.

இதையடுத்து பிசிசிஐக்கு இலங்கை கிரிக்கெட் கடிதம் எழுதியுள்ளது. ஜூலை மாதம் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. இதையடுத்து இந்தத் தொடர் குறித்து பிசிசிஐ விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள 2020 ஐபிஎல் போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் கடந்த மாதம் விருப்பம் தெரிவித்தது. இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா ஒரு பேட்டியில் கூறியதாவது: இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்தியுள்ளார்கள். எனவே எங்கள் கோரிக்கையை பிசிசிஐ பரிசீலிக்கும் என நம்புகிறோம். இதற்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டால் அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவோம். எங்களுக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கும் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here