புலிகளின் தேசியப்பட்டியல் பரிந்துரையில் சுமந்திரன் இருந்தாரா?: உண்மை என்ன?

தமிழ் தேசிய அரசியலுக்குள் காலாகாமாக முறுகல்கள் தோன்றி வருவது வழக்கம். சிலர் வெளியேறுவர். தனிக்கட்சி ஆரம்பிப்பார்கள். பின்னர் அவர்களிற்குள் மோதிக் கொண்டிருப்பார்கள்.

இதுவரையான மோதல்கள் அனைத்தும் கட்சிக்குள் இருந்து வருவது. கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடு, முற்றி உடைவு ஏற்படும்.

ஆனால், ஒரு சுவாரஸ்யமான விடயத்தை முன்னைநாள் எம்.பியொருவர் சுட்டிக்காட்டினார். இம்முறை தமிழ் அரசு கட்சிக்குள் உடைவை ஏற்படுத்த பத்திரிகையாளர் ஒருவர் முயற்சிக்கிறார். அது அவருக்கு பதவி கிடைக்காத வெப்பியாரத்தால் நிகழ்வது என்றார்.

தேவையானால் தானே ஒரு குரல் பதிவை தருவதாகவும், தனது பெயரை பாவித்தே செய்தியை வெளியிடுங்கள் என்றார். நாம் அதை தவிர்த்து விட்டோம்.

ஆனால் சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையுள்ளது.

அண்மையில் சமூக ஊடகங்களில் திடீரென ஒரு பேப்பர் கட்டிங் உலாவியது. சுமந்திரனை நாடாளுமன்ற உறுப்பினராக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சம்மதித்திருந்தார், ஆனால் பிரபாகரன் அதை தவிர்த்து விட்டார், மாவை சேனாதிராசாதான் பிரபாகரனிடம் சுமந்திரனை எம்.பியாக்கும் சிபாரிசை செய்தவர்  என அந்த கட்டிங்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பேப்பர் கட்டிங்குகளிற்கு எல்லாம் விளக்கமளித்துக் கொண்டிருந்தால், யாரும் ஊடகம் நடத்த முடியாது. ஆனால் இப்பொழுது புலிகளை பாவித்து யாழ்ப்பாண வாசிகள் சிலரில் இருந்து தமிழகத்தின் சீமான் வரை செய்யும் அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களால் தவறான வரலாறுகள் பதிவாகி விடக்கூடாது என்பதால் இது பற்றிய உண்மைத்தன்மையை விளங்கப்படுத்த வேண்டும்.

உண்மையில் அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை.

பொதுவாகவே கட்சி தலைவர்கள் காரியம் சாதிக்க, கீழுள்ளவர்களிற்கு சும்மா அடித்து விடுவது வழக்கம். அப்படியாக, 2004 காலப்பகுதியில் சுமந்திரனிற்கு, மாவை சேனாதிராசா ஏதும் அடித்து விட்டாரா தெரியாது. (இப்பொழுது சுமந்திரன் அதே உத்தியை கையாள்கிறாரோ என தெரியவில்லை. எதிர்கால வடமாகாணசபை அமைச்சர்கள் என 8 பேருக்கும் அதிகமானவர்களிற்கு வாக்களிக்கப்பட்டுள்ளது)

ஆனால், அப்பொழுது விடுதலைப் புலிகளின் எம்.பி பட்டியலில் சுமந்திரன் இருக்கவில்லை. மிகச்சுவாரஸ்யம் என்னவென்றால், விடுதலைப் புலிகள் தேசியப்பட்டியலில் நியமிக்க விரும்பியது ஒரு முஸ்லிமை. அவர் மௌசூர் மௌலானா என்ற பழைய தமிழ் அரசு கட்சி உறுப்பினரை.

மருதமுனையை சேர்ந்த அவரை எம்.பியாக்கலாமென சு.ப.தமிழ்செல்வன் விரும்பினார். எனினும், மௌலானா அப்பொழுது முஸ்லிம் காங்கிரசில் இணைந்து விட்டார்.

இதேநேரம், அப்போதைய எம்.பி நியமன விவகாரங்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளை, கூட்டமைப்பின் தலைமைகள் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் விவாதிப்பதில்லை.

பொதுவாக அப்போதைய கூட்டமைப்பு எம்.பிக்கள், அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் எனப்படுபவர்களை விடுதலைப் புலிகள் கையாண்ட விதம் அலாதியானது. இடைநிலை பொறுப்பாளர்களே அனேகமாக அவர்களை கையாள்வார்கள். ஆனால், “தலைவர் சொன்னவர்“ என இடையில் ஒரு ரொனிக் கொடுத்து விடுவார்கள். நம்மாட்கள் அவ்வளவுதான். சீமான் பாணியில் ஆயுளுக்கும் அடித்து விட்டுக் கொண்டிருப்பார்கள்.

சுமந்திரனின் தேசியப்பட்டியல் விவகாரத்திலும் இப்படியேதும் சம்பவம் நடந்திருக்கலாம், அதனால்தான் பிரபாகரனே அவரை ஏற்றுக்கொண்டிருந்தார் என்ற கதை உலாவலாம் என்பதால், இப்போது அதை உறுதிசெய்யக்கூடிய மாவை தரப்பிடமே அதைப்பற்றி விசாரித்தோம்.

அவர்களிற்கு இந்த தகவலே புதிது. அப்படியொரு சம்பவம் நடந்தேயிருக்கவில்லையென்றனர்.

பொதுவாகவே எங்கள் அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்களை புலிகள் எப்படி கையாண்டார்கள் என்பதை தெரிந்திருந்ததால், தேசியப்பட்டியல் விவகாரத்திற்கு வாய்ப்பேயில்லையென தெரிந்திருந்தது. அதை சம்பந்தப்பட்டவர்களே உறுதிசெய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here