உலக யன்னல் :லண்டன் கட்டிடத்தின் மேலே நிற்கும் அந்த 84 பேர்கள் யார்?

சார்ள்ஸ் ஜே போர்மன்

லண்டனில் ஐ.டி.வி கட்டடத்தின் கூரையில் பலர் நிற்பதைக்கண்டு அவ்வழியே சென்ற பலர் திடுக்கிட்டார்கள். பலர் அவசர உதவி இலக்கத்துடன் தொடர்பும் கொண்டார்கள்.

விரைவில் அதன் காரணம் ஊடகங்களில் பரவியது. விபரங்கள் தெரிந்தவுடன் அக்காரணம் பற்றியும் அதை ஐ.டி.வி நிறுவனம் கவனப்படுத்தியது பற்றியும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் உண்டாகின.

#project84 என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கவனத்துக்கு உள்ளாக்கப்பட்டு அதே பெயரில் ஐ.டி.வி நிறுவனத்தினரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் வாராவாரம் 84 பிரிட்டிஷ் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதாகும். மேலும் சொல்லப் போனால் பிரிட்டனில் தற்கொலை செய்துகொள்பவர்களில் நான்கில் மூன்று பேர் ஆண்கள். 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிட்டனில் இறப்பதுக்கு காரணம் தற்கொலைகளே.

அக் கட்டடத்தின் முகட்டில் நிஜமாக தற்கொலை செய்துகொண்ட 84 பேர்களை மார்க் ஜென்கின்ஸ் என்ற சிற்பியின் மூலமாக தத்ரூபமாக சிலைகளாக்கி நிறுத்தியிருந்தார்கள். அச்சிலைகளின் மிக தத்ரூபமான அமைப்பு அவர்கள் அக்கட்டிடத்திலிருந்து குதிக்கக்கூடும் என்ற பயத்தை பலருக்கு உண்டாக்கியது. அத்துடன் நிஜமான மனிதர்களை அப்படியான சிலைகளாக்கி பொதுஇடத்தில் வைத்திருந்ததும் பலரால் விமர்சிக்கப்பட்டது. அதற்காக இறந்தவர்களின் நெருங்கிய உறவினரின் அனுமதி பெறப்பட்டதாக ஐ.டி.வி நிர்வாகம் தெரிவித்தது.

 

பீஜிங்குக்கு வந்த பச்சை ரயில்

பங்குனி 26 ம் திகதியன்று பீஜிங் நகர மக்கள் தங்கள் நகரின் பல இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து தடைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனித்து ஆச்சரியப்பட்டார்கள். சீனாவின் கம்யூனிசக்கட்சியின் அரசியல்வாதிகளின் பயணங்கள் பெரும்பாலும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தாலும் குறிப்பிட்ட நாளில் நகருக்குள் ஆங்காங்கே காணப்பட்ட நிலைமை வித்தியாசமாக இருந்தது.

அதை தொடர்ந்து சீனாவில் பாவிக்கப்படாத மஞ்சள் குழாயொன்றை வரியாகக் கொண்ட கடும் பச்சை நிற ரயிலொன்று பீஜிங் நகருக்குள் அதி பாதுகாப்புடன் நுழைந்தது பலரின் கவனத்தை கவர்ந்தது. சமூக வலைத்தளங்களின் காலத்தில் இதை விடுவார்களா மக்கள்?

வேகமாக சீனாவின் சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த ரயிலின் படங்கள் ஜப்பானியர்களின் கவனத்தையும் ஈர்த்து, அங்கிருந்து சர்வதேசத்திலும் பிரபலமானது. நிச்சயமாக அது அரசியல்வாதியொருவர் பாவிப்பதுதான், ஆனால், யாரவர்? என்று யோசித்தவர்கள் பெரும்பாலும் பதிலையும் கண்டுபிடித்து விட்டார்கள்.

அப் பதில் சரியே என்று அடுத்தநாள் பிற்பகல் அந்த ரயில் திரும்பிப் போனபின்பு சீன அரசின் ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகள் நிரூபணம் செய்தன. தனது தந்தைக்குப் பின்பு 2011 இன் கடைசிப்பகுதியில் வடகொரியாவின் தலைமைப் பதவியை எடுத்துக்கொண்ட கிம்யொங்-உன் தான் சீனாவுக்கு வந்த அந்தச்சீமான்.

தனது பதவியேற்பின் பின்பு முதல் தடவையாக வெளிநாட்டு விஜயம் செய்த கிம்யொங்-உன் தனது நாட்டுக்குள் எப்படி பிரயாணம் செய்கிறார் என்ற விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட ரயில், அல்லது அதேபோன்ற நிறமுள்ள ரயிலில்தான் அவரது தந்தை கிம்யொங்- இல் பயணம் செய்வதுண்டு என்பது பிரபலமானது.

உல்லாசப் பிரியரான கிம்யொங்-இல் விமானப் பயணத்துக்கு பயந்தவர். தனது உல்லாச வசதிகள் உள்ள ரயிலில் தனக்கு நெருக்கமானவர்களுடன் குடி, உல்லாசப் பெண்களுடன் சீனா, ரஷ்யா உட்பட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறார்.

ஜப்பானின் பிடியிலிருந்த வடகொரிய பகுதியில் ஒரு புனிதமலையில் இரட்டை வானவில்களுக்கு நடுவே ரோஜாப் பூக்களின் வரவேற்புடன் கிம் யொங்- இல் பிறந்ததாக கூறப்பட்டாலும் அவர் உண்மையிலேயே பிறந்த இடம் வியாட்ஸ்கோயெ என்ற ரஷ்யாவுக்குச் சேர்ந்த நகரம்தான் என்று குறிப்பிடப்படுகிறது. யூரிஇர்ஸனோவிட்ச் கிம் என்ற பெயருடன் கிம் உல்- சுங் என்ற சிகப்பு இராணுவ உயரதிகாரி ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். ஸ்டாலினுக்கு நெருக்கமான இந்த அதிகாரியைத்தான் பின்பு ஸ்டாலின் வடகொரியாவின் தலைவராக்கினார்.

பொருளாதார ரீதியில் முழுக்க முழுக்க சீனாவில் தங்கியிருக்கும் நாடான வடகொரியாவின் தலைவராக இருந்த கிம் யொங்-இல் அரசியலிலும் சீனாவின் சொல்லைக் கேட்டு நடக்கும் நல்ல பிள்ளைதான். தனது 17 வருட ஆட்சிக்காலத்தில் சீனாவுக்கு அடிக்கடி பயணம் செய்து அவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தது போல மகன் கிம் யொங்-உன் செய்யவில்லை.

கிம் யொங்-உன் பதவியேற்றது முதல் வடகொரியா தன்னை உலகின் சகல நாடுகளுக்கும் அன்னியப்படுத்தி கொண்டது என்றே கருதப்படுகிறது. அதன் விளைவால்தான் அமெரிக்கா உட்பட்ட சகல நாடுகளும் வடகொரியாவை தண்டிப்பதை சீனாவும் ஏற்றுக்கொண்டு கிம் யொங்-உன் உடன் ஒரு காட்டமாக நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டது.

ரஷ்யாவுக்கு இன்னும் 11 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நாடாக இருக்கிறது வடகொரியா. நாட்டுக்கு தேவையான உணவுப்பொருட்கள், எரிபொருள் ஆகியவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் வடகொரியா சில வாரங்களுக்கு முதல்தான் அணு ஆயுதப் பரீட்சைகளை நிறுத்த தயார் என்றும் டொனால் ட்டிரம்பை சந்திக்க தயாரென்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீன அதிபர் ஷீசின் பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடாத்திய கிம் யொங்- உன் அங்கேயும் “கொரியப் பிராந்தியத்தில் வளர்ந்துவரும் சமாதான நிலையை விரும்புகிறேன். அமெரிக்காவும், தென்கொரியாவும் ஒத்துழைத்தால் நாங்கள் எங்கள் அணு ஆயுத ஆராய்ச்சிகளை நிறுத்தத் தயார்,” என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

இந்த பச்சை ரயில் பயணத்தின் மூலமாக கிம் யொங்-உன் தான்டொனால் ட்டிரம்ப்புடன் நேரடியாக சந்திக்கத் தயாரென்று பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் எனலாமா?

 

ஒரேஒரு சட்டம் துப்பாக்கிகளை மௌனமாக்கியது.

ஒவ்வொரு தடவையும் யாராவது ஒருவர் அமெரிக்காவில் துப்பாக்கியை எடுத்துப் பலரை சுட்டுக்கொல்லும்போதும் எழுப்பப்படும் சர்ச்சை “அமெரிக்காவில் துப்பாக்கிகளை வாங்க, வைத்திருக்க, பாவிக்க இருக்கும் மிக இலகுவான சட்டங்களை இறுக்க வேண்டுமா?” என்பதாகும். ஐக்கிய அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஆதரிக்கும் மிகப்பலமான இயக்கம் எந்தக்கட்சி நாட்டின் ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும் தனது குறிக்கோளான மிக இலகுவான சட்டங்களை காப்பாற்றியே வருகிறது.

தனிமனிதனின் உரிமைகளில் ஒன்று துப்பாக்கி வைத்திருப்பவைகளில் ஒன்றாகும் என்று நம்பும் அமெரிக்கர்களுக்கு அது ஒரு முக்கிய பாரம்பரிய வழமை. “சட்டங்களை கடுமையாக்கினாலும் மிலேச்சத்தனமாகக் கொல்லப் போகிறவர்களை தடுக்க முடியாது,” என்று அவர்கள் வாதாடுகிறார்கள்.

வித்தியாசமாக இம்முறை அமெரிக்க சரித்திரத்திலேயே மிகப்பெரிய மாணவர்கள் போராட்டம் வெடித்திருக்கிறது “March for Our Lives” என்ற பெயருடன். சில வாரங்களுக்கு முன்பு பார்க்லாண்ட் கல்லூரியில் நடந்த துப்பாக்கிக் கொலைகளின் பின்பு “இனியும் பொறுக்கத் தயாராக இல்லை, துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு அமெரிக்காவில் முடிவு வையுங்கள்,” என்று அரசியல்வாதிகள்நோக்கிஉரத்த குரலுடன் ஆரம்பித்த மாணவர்கள் படிப்படியாக நாடு முழுவதும் உள்ள மாணவர்களை ஒன்று திரட்டி இன்று அமெரிக்கா முழுவதும் தங்கள் பலத்தை காட்டுகிறார்கள். “எங்கள் நோக்கம் இவ்வருட இறுதியில் வரவிருக்கும் தேர்தல்களை நோக்கியிருக்கும், அச்சமயத்தில் அரசியல்வாதிகள் எங்கள் குரல்களை கேட்டே ஆக வேண்டும்” என்று திடமாகச் சொல்கிறார்கள் மாணவர் பிரதிநிதிகள்.

அவர்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ என்னவோ அமெரிக்காவின் இன்றைய ஆயுதத் தாராள மனப்பான்மை போன்ற பாரம்பரியத்தைக் கொண்டிருந்த இன்னொரு உலகநாடு, ஆயுதம் வாங்குவதற்காக இருக்கும் சட்டங்களை கடுமைப்படுத்தியதால் இதுவரை ஒரேயொரு தனி மனிதர் – பலரைச் சுட்டுத்தள்ளுதல் இல்லாமல் காலந்தள்ளி வருகிறது.

அதுதான் அவுஸ்ரேலியா. 1996 நடந்த போர்ட்ஆர்தர் படுகொலைகளில் வெவ்வேறு வயதான 35 பேர் ஒரு இளைஞனால் கொல்லப்பட்டார்கள். அன்று அவுஸ்ரேலிய பிரதமராக இருந்தவர் ஜோன் ஹவார்ட்.

நடந்த கொலைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று- எவராலும் மிக இலகுவாக துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கொள்வனவு செய்ய முடிவதே என்று பல அவுஸ்ரேலியர்களும் கருதினர். 12 நாட்களில் ஜோன் ஹவார்ட் புதிய கடுமையான ஆயுதப் பாவனைச் சட்டங்களை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்து ஒரே வருடத்தில் நாட்டின் துப்பாக்கி சம்பந்தப்பட்ட குற்றங்கள் 60 விகிதத்தால் குறைந்தன.

அன்று முதல் இன்று வரை 22 வருடங்களாக அவுஸ்ரேலியாவில் பைத்தியக்காரத்தனமாக பலரைக் கொன்றொழிக்கும் கூட்டுக்கொலைகள் எதுவும் நடக்கவும் இல்லை.

 

எதிர்காலச் சாரதிச் செயலி செய்த முதலாவது மரண விபத்து.

பலரும் பயந்து கொண்டிருந்தது நடந்து விட்டது அமெரிக்காவில், அரிசோனா மாகாணத்தில். உலகின் வெவ்வேறு பாகங்களிலும் பரிசோதனையாக நடந்துவரும் தானே இயங்கும் காரொன்று ஒரு இரவு பாதசாரிகள் வழிச்சந்தியொன்றில் தனது துவிச்சக்கர வண்டியை உருட்டியபடி நடந்து கொண்டிருந்த 49 வயதுப் பெண்ணை மோதியது.

ஊபர் நிறுவனத்தின் வாகனமொன்றில் ஒரு சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்தாலும், அந்த வொல்வோ வாகனம் “தானே இயங்கும் செயலி” மூலம் இயங்கிக் கொண்டிருந்தது.

உடனடியாக ஊபர் நிறுவனம் தனது தானே இயங்கும் செயலியால் இயங்கும் கார்களைப் பரீட்சார்த்தமாக இயக்குவதை நிறுத்தி விட்டது. அமெரிக்க வாகனப் போக்குவரத்து ஆராய்வு அதிகாரம் நடந்த ஆபத்தைப் பற்றிய விபரங்களை அறிந்துகொண்டு ஆராய்வதில் இறங்கியிருக்கிறது.

அமெரிக்காவில் மட்டுமன்றி உலகின் பல பாகங்களிலும் இப்படியான தானியங்கும் தனியார் வாகனச் செயலிகளை போக்குவரத்தில் இயக்குவது பற்றிய தொழில்நுட்ப பரீட்சை வெவ்வேறு தடங்களில், மட்டங்களில் நடந்து வருகிறது. இத் தொழில்நுட்பத்தில் எங்கெங்கே என்னென்ன நடக்குறது, எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பது பற்றிய சகல விபரங்கள் இன்று எவரிடமும் இல்லை.

பல ஐரோப்பிய நாடுகள், சீனா, கனடா போன்றவைகளையும் இங்கே குறிப்பிடலாம். யார் முதலில் இப்பரீட்சையில் வெற்றி பெறுவது என்ற போட்டியும் இவர்களுக்கிடையே இருப்பதை ஊகிக்கலாம். முதலில் வெற்றிகரமாக இயக்குபவர்கள் பெரும் இலாபமும், பிரபலமும் பெறுவார்கள் என்பதே அதன் காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை.

அமெரிக்காவில் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் நாட்டின் போக்குவரத்து அதிகாரத்திடம் தமது தொழில்நுட்பத்தை விபரித்து அதன் ஆய்வுகூடப் பரீட்சை வெற்றிகளை காட்டி அச் செயலியை நிஜமான போக்குவரத்தில் பரிசீலிக்க அனுமதி பெறலாம். ஐரோப்பிய நாடுகளில் போக்குவரத்து அமைச்சு, பரீட்சிக்கும் நிறுவனத்துடன் சேர்ந்துதான் பரீட்சைக்கு அனுமதி கொடுக்கும். இதனால்தான் நடைபெற்ற முதலாவது மரண விபத்து அமெரிக்காவில் நடந்தது எனலாம்.

மனிதர்கள் வாகனங்களைச் செலுத்தும் இச்சமயத்தில் வருடாவருடம் 1 மில்லியன் மனிதர்கள் உலகம் முழுவதும் போக்குவரத்து விபத்துக்களில் இறக்கிறார்கள். 20 – 50 மில்லியன் பேர் காயப்படுகிறார்கள்.

ஒரு தொழில்நுட்பத்தை சாரதியாக அமர்த்திவிடும் காலம் வரும்போது இப்படியான விபத்துக்கள் மிகவும் குறைந்துவிடும் என்றே சகல ஆராய்ச்சியாளர்களும் சொல்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்க அப்படியான தொழில்நுட்பம் பாவிப்புக்கு வரும்போது நாம் என்ன எதிர்பார்க்கிறோம்?

 

 

 

 

 

 

 

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here