இன்று அன்னையர் தினம்!


இன்று உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக வரலாற்றில் இயற்கையையும், அன்னையையும் தெய்வங்களாக கருதி வழிபட்ட நீண்ட மரபு இருந்து வந்தது. ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என நம் கலாசாரம் அன்னையருக்கு தான் முதலிடம் தந்து
இருக்கிறது.

படைத்தவன் தான் கடவுள் எனில், நம்மை படைத்த அன்னையர் தான் கடவுள். அன்னைதான் அனைத்துக்கும் அடிப்படையானவள் என்ற அடிப்படையில் தமிழ் பண்பாட்டில் அன்னை போற்றுதலுக்குரிய பாத்திரத்தை வரலாறு முழுவதும் வகித்து வந்தார்.

சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும் ஆசானாக.. இப்படிப் பெண், தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும், அன்னை என்ற பாத்திரமே உன்னதமானது. உலகில் ஈடு இணையற்றது. அன்னையே முதல் தெய்வம்.

ஆண்டுதோறும் மே 2வது ஞாயிறு உலக அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக அளவில் பல்வேறு அம்சங்களை அடிப்படையாக வைத்துப் பல்வேறு தினங்கள் கொண்டாடப்படுகின்றன. உடல் நலம் குறித்த விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவை தவிர, அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் முதலான பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

இவற்றில் அன்னையர் தினத்துக்கு மட்டும் ஒரு வித்தியாசமான தன்மை உள்ளது. இது ஒவ்வோர் ஆண்டும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. பல நாடுகளில் வெவ்வேறு திகதிகளில் கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, அவுஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (மே 10) அன்னையர் தினம்!

அன்னையர் தினம் – ஒரு நெகிழ்ச்சி வரலாறு:

அன்னையர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுவதன் காரணம் என்ன? அன்னையை ஆராதிக்கும் கொண்டாட்டங்கள் பண்டைய காலத்தில் கிரேக்கத்தில் இருந்தன. வசந்த காலத்தின் தொடக்கத்தை அவர்கள் தாய் தெய்வமான ‘ரியா’வை வணங்கியே கொண்டாடினார்கள். ரோமர்கள் ‘சைபெலி’ என்ற பெண் தெய்வத்தைத் தாயாகக் கருதி வழிபட்டனர். கிறிஸ்துவத்தின் வருகைக்குப் பின்பு இந்தக் கொண்டாட்டம் ‘மாதா’ திருக்கோயிலுக்கு மரியாதை செய்வதாக மாறியது. இவை எல்லாமே சமய அடிப்படையில் உருவானவை. ஆனால் நவீன உலகில் கொண்டாடப்படும் ‘அன்னையர் தினம்’ அப்படி அல்ல.

அமைதியை நாடிய சமூக சேவகி

அனா ஜோர்விஸ் என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் ‘கிராப் டன்’ என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது அங்கு நடந்த யுத்தத்தில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்கள் சிதறி சீரழிந்தன. பிரிந்த குடும்பங்கள் ஒன்றுசேரவும், போர் இல்லாத சமாதானம் நிலவவும் அனா ஜோர்விஸ் கடுமையாக போராடினார். அவருடைய மகளுக்குப் பார்வை கிடையாது. ஆனால், தன் சொந்த சோகத்தைப் பொருட்படுத்தாமல் இறுதிவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904 ஆம் ஆண்டில் மறைந்தார்.

அனா ஜோர்விஸின் மகள் அன் ரீவ்ஸ் ஜோர்விஸ் தன் தாயின் நினை வாக உள்ளூரில் இருந்த ஒரு தேவாலயத்தில் 1908 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று ‘சிறப்பு வழிபாடு’ ஒன்றை நடத்தினார். தன் தாயாரின் நினைவை போற்றியதைப் போலவே, எல்லோரும் அவரவர் அன்னையை கௌரவிக்க வேண் டும் என்று அவருக்குத் தோன்றியது.

அன்னையின் அடிச்சுவட்டில்

1913 ஆம் ஆண்டு வேலை நிமித்தமாக அன் ரீவ்ஸ் ஜோர்விஸ் பென்சில் வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்பியாவில் குடியேறினார். பார்வையற்றவரான அவருக்குத் தன் தாயைப் போலவே சமூக சேவையின் மீது அளவற்ற நாட்டம் இருந்தது. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டார்.

அன்னையைப் போற்றுவது குறித்த தனது எண்ணத்தை அவர் பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசாங்கமும் அவருடைய கருத்தை ஏற்று 1913 ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீ கரித்து அறிவித்தது.

அதன் பிறகு, அமெரிக்கா முழு வதும் ‘அன்னையர் தினம்’ கொண்டாடப்பட வேண்டும், அந்த நாளை அரசின் ‘விடுமுறை’ நாளாக அறிவிக்க வேண்டுமென அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சனுக்கு வேண்டுகோள் விடுத்தார். அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி ஆதரவு கோரினார். அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் இதை ஏற்றுக் கொண்டார். ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரபூர்வ அன்னையர் தினமாக அறிவித்தார்.

பிறகு கனடா அரசும் இதனை அங்கீகரித்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளை ‘அன்னையர் தினம்’ என அறிவித்து நடைமுறைப்படுத்தின.

அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் ஒரு கட்டத்தில் வணிகமயமாக மாறின. பணம் சம்பாதிப்பதற்கான உத்தியாக இதைப் பல அமைப்புகள் பயன்படுத்திக் கொண்டன. அன்னையின் உருவம் பொறித்த கொடிகள் விற்கப்பட்டன. இந்தக் கொடி விற் பனையை எதிர்த்து அன் ரீவ்ஸ் ஜோர்விஸ் 1923 ஆல் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். “அன்னையர் தினம் உணர்ச்சி பூர்வமான நாளாகவே இருக்க வேண்டும். பணம் சேர்க்கும் நாளாக இருக்கக் கூடாது” என்று வாதாடி வென்றார்.

தனது 84வது வயதில் அன் ரீவ்ஸ் ஜோர்விஸ் மறைந்தார். “உலகம் முழுவதும் அன்னையர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் விளங்க வேண்டும்” என்று தன் கடைசி ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.

தன் அன்னையின் சுவடுகளைப் பின்பற்றிச் சமூக சேவையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த அன் ரீவ்ஸ் ஜோர்விஸின் ஆசை பூர்த்தியாகும் விதமாக ஆண்டுதோறும் உலகம் முழுவதும்அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here