யாழ் பல்கலைகழக மருத்துவபீட சோதனைக்கூடத்தில் கொரோனா வைரஸ் பரவலா?… பின்னணி என்ன?

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா நோய் நிலைக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

சர்வதேச ரீதியாக – தேசிய மட்டத்தில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் எல்லா நாடுகளுமே கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் ‘எபிடேமிக்’ என்கிற நிலையைத் தாண்டி, அது ‘பன்டமிக்’ என்கிற நிலைக்கு (அதாவது உலகையே அச்சுறுத்தும் ஒரு கொடிய தொற்று நோய்) மாற்றம் பெற்றபோது அந்தந்த நாடுகளில் நிலைமையை எதிர்கொள்வதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட்டன.

தனித்தனியே நோயைக் கட்டுப்பாடுகள் கொண்டுவருவதற்கு நாடுகள் பாடுபட்டாலும், சர்வதேச ரீதியாக ஒரு நியமத்துக்குள் , உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச பொறிமுறைகளுக்கு அமையவும் ஏற்பாடுகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த நிலை இலங்கைக்கு மட்டும் விதிவிலக்காகவில்லை. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவது, நோயாளர்களை இனங்காண்பது மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என பல வழிகளிலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இலங்கையின் சுகாதார அமைச்சும், கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான செயலணியும் செயற்பட்டு வந்தன.

அந்த வகையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் சுகாதாரத்துறை அவ்வளவாகச் சவால்களை எதிர்கொண்டதாக இல்லை.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசு நேரடியாக தனது ஆட்பலத்தை ஈடுபடுத்தி, தன்னிடமுள்ள முழுவளங்களையும் ஒருங்கிணைத்து இந்தப் பணிகளை நிறைவேற்றி வருகிறது.

இலங்கைப் படையினர் இப்பணிகளில் ஈடுபட்டமை ஒரு விதத்தில் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய காரணியாக இருந்தாலும், அதே படைகள் மத்தியில் நோய்ப் பரவத் தொடங்கியிருக்கின்றமை ஒரு வகையில் பின்னடைவே.

வேகமாகப் பரவி வந்த நோய் நிலையைக் கண்டறிவது என்பது இன்று வரை இலங்கைக்கு ஒரு சவாலான விடயமாகவே இருந்து வருகிறது.

மார்ச் மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக ‘சுவிஸ் பாஸ்டருடன்’ தொடர்பு பட்டிருந்த தாவடியைச் சேர்ந்த ஒருவர் ‘கொரோனா’ தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்ட பின், குறிப்பிட்ட நபருடன் நெருங்கிப் பழகியவர்கள் உட்பட நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களைத் தேடி, இனங்கண்டு, அவர்களுக்கு நோய்த் தொற்று உண்டா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்தும் வரை பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் தொற்றபாயம் உள்ள பகுதிகளில் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நோய்ப் பரிசோதனை செய்யப்பட வேண்டும், அதே நேரத்தில் நோய்த் தொற்றபாயத்துடன் வடக்குக்கு வெளியேயிருந்து கொண்டு வரப்பட்டு, வடக்கில் பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைக்கப்பட்டிருப்பவர்களிடமும் நோய்ப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலை காணப்பட்டது.

வடக்கில் இதற்கான வசதிகள் எவையும் இல்லாத நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு காணப்படுகின்ற யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலை ஆளணியினரால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை அநுராதபுரத்திலுள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து முடிவுகள் கிடைக்கும் வரை கிட்டத்தட்ட 3 நாள்கள் காத்திருந்து முடிவுகளைப் பெறவேண்டிய நிலைமை இருந்தது.

இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்றை இனங்காண்பதற்கான பி.சீ.ஆர். சோதனைகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டால் என்ன என்ற சிந்தனை தோற்றம் பெறுகிறது.

சம நேரத்தில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் தலைவரும், நாட்டிலுள்ள சகல மருத்துவ பீடங்களுக்கும் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோளை முன்வைக்கின்றார்.

வடக்கில் நாளுக்கு நாள் சோதனைக்கு உட்படுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், சோதனைகளை இங்கேயே செய்ய முடியாமல் அநுராதபுரத்தில் இருந்து ஆய்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையும் காணப்பட்டதனால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் வேண்டுகோள் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலைப் பணிப்பாளரின் நெஞ்சில் பால் வார்த்து போல் அமைந்து விட்டது.

உடனடியாக களத்தில் இறங்கிய வைத்தியசாலைப் பணிப்பாளர், யாழ் பல்கலைக்கழக மருத்தவ பீடாதிபதியுடன் தொடர்புகொண்டு தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

நாட்டிலுள்ள அநேகமாக இடங்களில் மருத்துவ பீடங்களிலேயே பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால், இதனைச் செய்வதில் தமக்கேதும் ஆட்சேபனைகள் இல்லை என மருத்தவ பீடத்தினரும் இன்முகத்துடன் சம்மதித்ததோடு, அதற்கான பூர்வாங்கப் பேச்சுக்களில் ஈடுபடத் தயாராகினார்.

இதனிடையே யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளப்படப் போகின்றன என்பதை ஊரடங்கு நேரத்திலும் ஊகித்தறிந்து கொண்ட சில ‘உள்வீட்டுப் பிள்ளைகள்’ அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கினர்.

எங்கே? எவ்வாறு? சோதனைகள் மேற்கொள்ளப்படப் போகின்ற போன்ற விடயங்களில் இறுதி முடிவுகள் எட்டப்படுவதற்கு முன்னரே ‘‘யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இந்தச் சோதனைகளைச் செய்வதற்கு பொருத்தாமானதொரு இடமல்ல”, ‘‘இங்கிருக்கும் விரிவுரையாளர்கள் இதற்குத் தகுதியாளர்கள் இல்லை’’, “ஒரு வைரஸ் நிபுணர் (வைரோலொஜிஸ்ட்) இல்லாமல் இதனைச் செய்ய முடியாது’’, ‘‘இது பாதுகாப்பானதில்லை, ‘‘மாணவர்களும், ஊழியர்களும் தொற்றை வாங்கப் போகிறார்கள்’’ போன்ற விவுமக்கருத்துக்களைக் கொண்ட மின்னஞ்சல் ஒன்று சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னரே பகிரப்பட்டன.

மின்னஞ்சல் மூலம் விசமக் கருத்துகள் பரவ விடப்பட்டாலும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இந்தப் பரிசோதனையை மேற்கொள்வதற்கான முன்னாயத்தக் கூட்டங்களின்போது மின்னஞ்சலில் ‘அநாமதேயமாகக்’ குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன.

இது பற்றிய ஒரு கலந்துரையாடலில் போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ‘‘இதுவொரு தேசிய செயற்றிட்டம், வசதிகள் இருக்கின்ற நிலையில் இதனைச் செய்வதற்கு நீங்கள் முன் வருகின்றபோது வேறு எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். ஜனாதிபதி செயலணியின் நேரடி நெறிப்படுத்தலில் இடம்பெறும் செயற்பாடுகளில் ஏதாவது இடையூறு வந்தால் நான் அந்த மட்டம் வரை சென்று தீர்வைப் பெற்றுத் தருவேன்’ என்று மருத்துவ பீடத்தினருக்கு நம்பிக்கையூட்டி இருக்கின்றார்.

மேலதிகமாக இத்தகைய பரிசோதனைகள் ஒரு ‘‘கிளினிக்கல் வைரோலொஜிஸ்ட்‘ இன் நேரடி கண்காணிப்பு இல்லாமல் மேற்கொள்ளப்படமுடியாது என்ற “அநாமதேய ஆர்வலர்களின்’’ குறிப்புக்கமைய வடக்கில் எந்தவொரு வைத்தியசாலையிலும் ‘‘ ‘‘கிளினிக்கல் வைரோலொஜிஸ்ட்‘ இல்லாத நிலையில் அநுராதபுரத்தில் உள்ள ஒரே ஒரு ‘‘கிளினிக்கல் வைரோலொஜிஸ்ட்‘ வைத்தியக் கலாநிதி சாரங்க சுமதிபாலவின் சம்மதத்துடன், யாழ் மருத்தவ பீடத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகளை பரிசீலனைக்குட்படுத்தி அத்தாட்சிப்படுத்தும் பணிகளுக்காக ‘‘கவரப்’’ ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

அத்துடன் ஆய்வு நடவடிக்கைளின் போது தொற்றுநிலை மேற்பார்வை மற்றும் அறிக்கையிடலுக்கென “கிளினிக்கல் மைக்றோபயோலொஜிஸட்.’’ வைத்திய  கலாநிதி அஜந்தியும் இந்த அணியில் உத்தியோகபூர்வமாக சேர்க்கப்பட்டிருக்கின்றார்.

இந்த நிலையில், தங்கள் விசமப் பிரசாரங்கள் உள்வீட்டில் செல்லாமல் போக அந்த ‘அநாமதேயப்’ பேர்வழிகள் மீண்டும் மருத்துவ பீடத்து கொரோனாச் சோதனைகள் பற்றி ஊடகங்களின் ஊடாக மக்களைப் பீதிக்குள்ளக்கும் செலவில் இறக்கி இருக்கின்றன.

இந்தப் பின்னணியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா சோதனைகள் உண்மையில் தொற்றபாயம் உள்ளதா? உரிய பாதுகாப்பு நியமனங்கள் பின்பற்றப்படுகின்றனவா? ஆகிய சந்தேகங்கள் எமக்கும் எழுந்தவை தான்.

மருத்துவ பீடத்தினுள் நிலவுகின்ற உள்வீட்டுப் பிரச்சினைகளினால் புரையோடிப்போய் இருக்கின்ற அதிகாரப் போட்டியின் ஒரு அங்மாக, ஆளடையாளமின்றி – அநாமதேயமாக முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுகளின் உண்மைத் தன்மை என்ன என்பது குறித்து எமது குழு சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவே தொடர்பு கொண்டு விடயங்களை உறுதிப்படுத்திக் கொண்டது.

யாழ்.மருத்துவ பீட ஆய்வு கூடம் மிக சிறந்த தரமான ஆய்வு கூடம். அந்த ஆய்வு கூடம் மிகுந்த பாதுகாப்பும் வசதியானதுமாக இருக்கின்றது. ஒரு கொரோனோ பரிசோதனை செய்யும் ஆய்வு கூடமானது எவ்வாறு இருக்க வேண்டுமோ அதே தரத்துடன் இந்த ஆய்வு கூடம் இருக்கின்றது என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

அதுமட்டுமல்ல, கொரோனோ தொற்றாளர்களின் மாதிரிகளை பரிசோதிக்கும் பரிசோதகர்கள், அவர்களின் உதவியாளர்கள் தொடக்கம் ஆய்வு கூடத்தை சுத்தம் செய்யும் தூய்மை தொழிலாளி வரை பாதுகாப்பாகவே தமது கடமைகளை செய்கின்றார்கள்.

அதேவேளை, பரிசோதனை மாதிரிகள் மற்றும் தொற்று இனம் காணப்பட்டவர்களின் மாதிரிகளை மிக மிகப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த கூடிய வசதிகள் என எமது மருத்துவ பீட ஆய்வு கூடம் தரமானதும் பாதுகாப்பானதுமானது என்று அவை மேலும் விளக்கமளிக்கின்றன.

இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடுகின்றவர்கள், தங்களைப்பற்றி – அதிகாரப் போட்டியின் வெளிப்பாடாகத் தங்கள் மீது சேறு பூசப்படுவதைப்பற்றிக் கிஞ்சித்தும் அச்சம் கொள்ளவில்லை. மாறாக மக்களைக் குழப்பி, மக்களின் உணர்வோடு குளிர்காய முனைபவர்களின் செயற்பாடுகள் குறித்துத்தான் கவலை கொள்கிறார்கள்.

யாருக்காவது, ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தெளிவு படுத்திக் கொள்ளலாம் என்கிறார்கள் அவர்கள்.

இந்தப் பரிசோதனைகள் சர்வதேசத் தர நியமங்களுக்கமைவாக மருத்துவ பீடத்தின் “பரிசிற்றோலொஜி” துறையின் “மொலிக்கியூலர் பயோலொஜி” ஆய்வு கூடத்தில் ஏற்கனவே இந்தப் பரிசோதனைகளுக்குத் தேவையான சகல ஆய்வு கூட உபகரணங்களும் இருந்தன. இதற்கான சகல வசதிகளும் உள்ள அந்த ஆய்வு கூடத்தில் மிகவும் பாதுகாப்பான முறையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவ்வத் துறைகளில் கற்றுத் தேர்ந்த துறைசார் நிபுணர்களின் நேரடிக் கண்காணிப்புடனேயே அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்றும் சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடுகின்ற எவரும் இலாபங்கருதி இதனைச் செய்வதாகத் தெரியவில்லை. மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே இதில் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆய்வு கூடத்துக்குத் தயார்ப்படுத்தும் போதே பி. பி. ஈ எனப்படும் தனி நபர் பாதுகாப்பு அங்கியை அணிந்து விட்டால் கிட்டத்தட்ட ஆறேழு மணி நேரத்துக்கு – ஆய்வுகள் முடியும் வரை அதனைக் அகற்ற முடியாது. இந்த இடைவெளியில் இயற்கை உபாதைகளிற்குகூட வெளியேற முடியாது. உணவு, நீர் எதுவுமில்லை.

இதில் இன்னுமொரு விடயமும் தங்கியிருக்கின்றது. மருத்துவ பீடத்தில் இந்தப் பரிசோதனைகளில் ஈடுபட வேண்டும் என்று மருத்துவ பீடத்தின் கல்வியாளர்களான இவர்களுக்கு எந்தக் கட்டாயமுமில்லை. மேலிடங்களிலிருந்து கட்டாயப்படுத்தி இவர்களை ஈடுபடுத்துவதற்கு இவர்கள் சுகாதாரத் துறைப் பணியாளர்களுமில்லை.

இவ்வாறு சுயநலம் – பசி, தூக்கம் மறந்து பொது நலனுக்காகப் பணியாற்றுபவர்களைப் போற்றாதிருப்பினும், தூற்றாமலாவது இருப்பது சமூகப் பொறுப்புள்ளவர்களின் கடமையல்லவா?

எல்லாவற்றையும் விட, தொற்றபாயம் உண்டெனில் அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் செல்வது எப்படி? யாரைப் பற்றி அக்கறை கொள்ளாது விடினும் தன்னையும், தன் சார்ந்தவர்களையும் இந்தத் தொற்று அண்டாத வகையில் தானே அவர்கள் நடந்து கொள்வார்கள்?

ஆரம்பத்தில், யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை தன்னார்வத் தொண்டு அடிப்படையில் செய்து கொடுப்பது என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் மருத்துவ பீடத்தில் இந்த ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் காலத்தின் கட்டாயத்தினால் – தேவையுணர்ந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனாலேயே யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் சுமார் 100 வரையிலான பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது சாத்தியமாகிறது.

சரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. அதனால் பல்கலைக்கழக சமூகத்துக்கு தொற்றபாயம் உள்ளது என்றால் முன்னணி ஆய்வுகூடவியலாளர் ரவி குமுதேஸைப் போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு உண்மையைச் சொல்வதற்கு ஏன் இங்குள்வர்களுக்குத் திராணி இல்லை?

இவர்கள் பரப்பும் விசம விடயங்களில் உண்மை இருக்குமானால் இப்படி ‘‘ஒளித்துப் பிடித்து’’ விளையாட வேண்டிய தேவை இல்லையே?

மிக அண்மையில் கூட, குளிரூட்டி திருத்தல் பணிகளுக்காக இரண்டு நாள் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டபோது அதனை ‘வைரஸ் தொற்றுக் காரணமாக சோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள.” “கொழும்பிலிருந்து அதிகாரிகள் வந்து சோதனைகளை மேற்பார்வை செய்யப் போகின்றார்கள் “ என்றெல்லாம் தங்கள் “தாளத்துக்கு நாட்டியம் போடும்” ஊடகங்கள் சிலவற்றைக் கொண்டு வதந்திகளைப் பரப்ப முனைந்த போதும், திருத்தப் பணிகள் முடிந்து மீண்டும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதால் மூலம் ‘‘அநாமதேய அசகாய சூரர்கள்’’ முகங்களில் கரி பூசப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here