அக்கராயன்குளம் கொரோனா வைத்தியசாலை யாருக்கான தெரிவு? (exclusive)

♦ ந. கங்கைமைந்தன்

உலகளாவிய தொற்றுப் பரவல் அரசியலாக மாறி விட்டது (Pandemic Turns Political) என கடந்த வாரம் அமெரிக்க சமுதாய மருத்துவ சஞ்சிகை ஒன்று தலையங்கம் தீட்டியிருந்தது.

அது அமெரிக்காவுக்கும் அகிலத்துக்கும் மட்டுமல்ல அக்கராயன் குளத்திற்கும் பொருந்தி வருவதுதான் ஆச்சரியம்.

மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கோ, அரச அதிபருக்கோ அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரியாமல் ‘இரவோடு இரவாக’ கிளிநொச்சியின் மிகப் பின்தங்கிய பகுதி ஒன்றின் பிரதான மருத்துவமனை ‘மாகாணத்திற்கான கொரொனா சிகிச்சை’ மையமாக பெயரிடப்பட்டதன் பின்னணி என்ன என்று  தமிழ்பக்கம் ஆய்வு செய்ததில் அகப்பட்டதெல்லாம் அதிர்ச்சி தரும் ‘கொரொனா அரசியல்தான்’.

கொரொனாவும் வடக்கும்

வடக்கில் 21.03.2020 அன்று முதன் முதலாக கொரொனா அபாய அறிவிப்பு விடப்பட்டு ஏறத்தாள 300 பொதுமக்கள் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 23.03.2020 அன்று முதலாவது கொரொனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்.

தற்போது ஒரு மாதம் கடந்த நிலையில் ஏறத்தாள ஆயிரம் பொதுமக்கள் கொழும்பிலிருந்து வடக்கில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையங்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

இலங்கையிலேயே கொரொனாவினால் மிகக் குறைவாகப் பாதிக்கப்பட்ட மாகாணம் வடமாகாணம். இந்த வடமாகாணத்தில் உள்ள மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே இதுவரை ஒரு கொரொனா நோயாளி கூட கண்டறியப்படவில்லை.

சமுதாய மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார நிறுவனம், மருத்துவதுறை சார் தொழிற்சங்கங்கள் என அனைவருமே பரிசோதனைகளை அதிகப்படுத்தி முற்கூட்டியே தொற்றாளர்களை இனங்கண்டு தொற்றுநோயை கட்டுக்குள் வைத்திருப்பதையே வலியுறுத்துகின்றனர்.

இவ்வாறிருக்கையில்  ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு மாவட்டங்களுக்கு இடையிலான போக்கு வரவுகள் ஆரம்பிக்கும் நிலையினை நோக்கி நாடு நகரத்தொடங்கியிருக்கும் வேளையில் வடக்கிற்கு அவசியப்படுவது மாகாணத்திற்கான கொரொனா சிகிச்சை நிலையமா அல்லது பரிசோதனை வசதிகளை அதிகப்படுத்துவதா? என்பதுவே.

நாம் அறிந்தவரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக தினசரி 60 மாதிரிகள் வரையே பரிசோதிக்க கூடியதாக உள்ளது. அதுவும் ஞாயிறு தினங்களில் விடுமுறை. தற்போதே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே வடமாகாணத்திற்கான கொரொனா சிகிச்சை மையமாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டதான  தகவல் பரபரப்பாகியது.

யுத்தத்தில் சேதமடைந்திருந்த வைத்தியசாலை

பதற்றத்தில் அக்கராயன்குளம்

கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளாரை ஊடகங்கள் தொடர்பு கொண்டபோது ‘அக்கராயன்குளம் வைத்தியசாலை கொரொனா சிகிச்சை மையமாக மாறுவது குறித்து எதுவும் தெரியாது’ எனக் கை விரித்துவிட்டார்.

இச் செய்திகள் வெளியானதும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் குழப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை தொடர்பு கொண்டவர்களுக்கு சொல்லப்பட்ட பதில் ‘கொரொனா நோயாளர்கள் திடீரென அதிகரிப்பதால் எமக்கு தனியே கொரொனா சிகிச்சை மையம் தேவை’ என்பதுதான்.

கொரொனா வைத்தியசாலையாக அக்கராயனை மாற்றும் முடிவிற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியதும் அவர்களது வாயை  மூட வைப்பதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பொதுமக்களில் சிலருக்கு ‘தெரியப்படுத்தும் கூட்டம்’ ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கின் மாகாணப் பணிப்பாளர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலந்து கொண்டிருக்கிறார்.  கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கலந்துகொண்டிருக்கிறார். அக்கராயன்குளம் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆளுகைக்கு உட்பட்ட வைத்தியசாலை.  ஆனால் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமை பொதுமக்கள் மத்தியில் கடுமையான சந்தேகங்களை கிளப்பிவிட்டது.

வடக்கிலே கொரொனா நோயாளர்கள் அதிகரித்தாக தெரியவில்லை. அவ்வாறாயின் மாகாண அதிகாரிகள் அக்கராயன்குளத்தில் அமைக்க எத்தனிப்பது முழு இலங்கைக்குமான கொரொனா வைத்தியசாலையா? அல்லது மாகாண வைத்தியசாலையா என்ற கேள்வி எமக்குள் எழவே தமிழ்பக்கம் தேடலை விரிவாக்கியது.

எமது பல்வேறு தொடர்புகள் ஊடாகத் திரட்டிய விபரங்கள் எங்களது சந்தேகத்தினை உறுதிப்படுத்தியது.

ஏமாந்த காத்தான்குடி

அண்மையில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் ஊடக மகாநாடு ஒன்று நடாத்தியிருந்தார். கிழக்கு மாகாணத்திற்கான தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாகவே காத்தான்குடி சுகாதார அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்டதாக அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும்,  அதனாலேயே தாம் அதற்கு ஆதரவளித்ததாகவும் ஆனால் திடீரென கொழும்பிலிருந்து நோயாளர்கள் அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டதுடன் கொரனா சிகிச்சை மையமாக காத்தான்குடி வைத்தியசாலை பிரகடனப்படுத்தப்பட்டது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் அதில் அவர் தெரிவித்திருந்தார்.

உரிய மாற்று ஏற்பாடுகளோ தயார்படுத்தல்களோ இன்றி தமது ஊரின் பிரதான வைத்தியசாலையானது கொரொனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டதால் தாம் எதிர்நோக்கும் அபாயங்களை அவர் அதில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

புத்திசாலி புத்தளம்

புத்தளத்தில் மொத்தமாக 52 சுற்றயல் வைத்தியசாலைகள் உள்ளதாகவும் ஆனால்  தாம் தொலைநோக்குடன் செயற்பட்டு மக்கள் பயன் பெறும் எந்த ஒரு வைத்தியசாலையையும் கொரோனா வைத்தியசாலையாக மாற்ற அனுமதிக்கவில்லை எனவும், மாவட்டத்தில் கைவிடப்பட்டிருந்த அமெரிக்க வானொலி நிலைய கட்டடத்தினை கையகப்படுத்தி அதிலே தற்காலிக வைத்தியசாலையை அமைக்கும்படி தாமே மத்திய சுகாதார அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியதாகவும் புத்தளம் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்  அண்மையில் சகோதர மொழிப் பத்திரிகை ஒன்றிற்கு செவ்வி அளித்திருந்தார்.

இதனடிப்படையிலேயே இரணவிலவில் உள்ள முன்னாள் வானொலி நிலையம் மாவட்டத்திற்கான தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றப்பட்டதாம். இருப்பினும் நோயாளர்களது சடுதியான அதிகரிப்புக் காரணமாக இதுவே தற்போது இலங்கை முழுமைக்குமான கொரோனா சிகிச்சை நிலையங்களில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதாம் என்றும் அச் செவ்வியில் அவர் மேலும் விளக்கியிருந்தார்.

ஆக அக்கராயன்குளம் என்பது இன்னொரு காத்தான்குடியோ அல்லது இரணவிலையோதான். மாகாணத்தை தாண்டி முழு இலங்கையிலிருந்தும் கொரொனா தொற்றுக்குள்ளான நோயாளர்களை கொண்டு வந்து சிகிச்சை அளிக்கும் மையமாக அக்கராயன் மாறப்போவது சர்வ நிச்சயம்.

வடக்கில் ஏன் கிளிநொச்சியில் கூட பொருத்தமான இடத்தில் அவ்வாறான சிகிச்சை மையம் அமைவதில் எவருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. ஆனால் அதற்கு அக்கராயன்குளத்தை தெரிவு செய்தது ஏன்? என்பதே இப்போது அனைவர் முன்னும் எழுந்துள்ள கேள்வியாகும்.

நிலைமைகள் இவ்வாறிருக்கையில் சுகாதார உயரதிகாரிகளோ அக்கராயன் குள மக்களிடம் பல்வேறு பிழையாக வழிநடத்தும் தகவல்களை வழங்கியபடி தமது திட்டத்தினை முன்னகர்த்துவதிலேயே குறியாக உள்ளனர் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

குறிப்பாக ‘கொரொனா வைத்தியசாலையாக அக்கராயன் வைத்தியசாலையினை மற்றுவதன் மூலம் அதிகமாக நிதிகளைப் பெற்நு வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யலாம்’ என்பதும் ‘மாவட்டத்திற்கு ஒரு வைத்தியசாலை’ என்ற அடிப்படையிலேயே அக்கராயன் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்ற நியாயப்படுத்தலும் ‘கொழும்பில் இருந்து வந்த உத்தரவு’ என்பதுவுமே மக்கள் மத்தியில் அதிகாரிகள் விதைக்க முற்படும் மூன்று கருத்துகளாகும்.

இவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தபோது இவற்றிற்கு எவ்வித அடிப்படையோ அல்லது ஆதாரமோ இருப்பதாக தெரியவில்லை. மாறாக முடிவெடுத்த பின்னர் அதிகாரிகள் அதனை நியாயப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இது தென்படுகிறது.

ஏனெனில் அக்கராயன்குள விடயத்தில் விடையில்லாத வினாக்கள் நிறையவே இருக்கின்றன.

மழைக்காலத்தில் அக்கராயன்

விடையில்லாத வினாக்கள்

அக்கராயன்குளம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான கொரொனா வைத்தியசாலையானால் வடக்கில் சனத்தொகை அதிகமான யாழ் மாவட்டத்திற்கு ஒரு கொரொனா வைத்தியசாலையை இனங்காணுவதில் ஏன் எவரும் அக்கறை காட்டவில்லை?

கொரொனாவைக் காட்டி அபிவிருத்தி செய்வதானால் அக்கராயனை விடவும் பௌதீக வளங்களில் பின்தங்கியுள்ள கிளிநொச்சியின் ஏனைய பிரதேச வைத்தியசாலைகளில் ஒன்றை ஏன் தெரிவு செய்யவில்லை?

கொரொனா வைக் காட்டி சகலதையும் அக்கராயனுக்கு பெற முடியுமானால் ஏன் நீண்டநாளாக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் பீ.சீ.ஆர் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்தி மாகாணத்தில் உள்ளவர்களைப் பரிசோதிக்கும் இயலுமையை அதிகரிக்கவில்லை? சில தினங்களின் முன்னர்தான் பீ.சீ.ஆர் பரிசோதனை வசதி ஆரம்பித்தது.

கொரொனா என்று சொன்னால் குபேர வாசல் திறக்குமானால் மத்திய அரசின் ஆளுகையின் கீழ் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையில் பீ.சீ.ஆர் பரிசோதனை செய்வதற்கு அவசியமான உயிரியல் பாதுகாப்புப் பெட்டகம்  (Bio Safety Cabinet)  ஒன்றினை ஒரு மாதத்திற்கு மேலாக சொந்தமாகப் பெற முடியாமல்  அல்லாடி சில நாட்களுக்கு முன்னர் அவசர அவசரமாக முல்லைத்தீவு மார்பு நோய் சிகிச்சை மையத்திலிருந்த உயிரியல் பாதுகாப்புப் பெட்டகத்தினைத் தூக்கிச் சென்றது எதனால்?

கொரொனா வைக் காட்டி நிதி பெற முடியுமானால் எதற்காக அக்கராயன்குள வைத்தியசாலையை கொரொனா வைத்தியசாலையாக மாற்ற 21ம் நூற்றாண்டின் ‘றொபின் கூட்களில்’  ஒருவரிடம் வடக்கு சுகாதாரத் திணைக்களம் மடிப்பிச்சை கேட்க வேண்டும்? (றொபின்கூட் என்பது கொள்ளையடித்த பணத்தை ஏழைகளுக்கு தானம் செய்து பிரபலமான ஒரு மேற்குலகப் பாத்திரம். ‘உரியவர்கள் திடீரென மௌனித்துப் போனதும்’ ஆட்டையைப் போட்டதை அள்ளிக் கொடுக்கும் சிலர் தற்போது நவீன றொபின்கூட்டுகளாக எம்மத்தியில் உலவுகிறார்கள்).

‘தனிநபர் அல்லது அமைப்புகளிடமிருந்து அரச நிறுவனங்கள் நிதி நன்கொடை பெற்றால் அதனை அரச வைப்பில் இட்டு, பாராளுமன்ற அனுமதி பெற்ற பின்னரே செலவு செய்யலாம்’ எனற விடயம் அரச நிதி  விதிகள் மற்றும் இலங்கையின் அரசமைப்பு ஆகியனவற்றில் தெளிவாக உள்ளதாக மூத்த கணக்காய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறிருக்கையில் பாராளுமன்றமே இல்லாத நிலையில் எவ்வாறு தனியாரிடம் பண நன்கொடை பெற்று அக்கராயன்குள வைத்தியசாலை கொரொனா வைத்தியசாலையாக மாற்றப்பட முடியும்?

அக்கராயன்குளம்- சாத்தியக்கூற்று ஆய்வு

அக்கராயன்குள வைத்தியசாலையானது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட எல்லைகளுக்கு அருகே யாழ் கண்டி நெடுஞ்சாலையில் திருமுறிகண்டியிலிருந்து மேற்காக செல்லும் ஜெயபுரம் வீதியில் 11ம் மைல் கல்லில் அமைந்துள்ளது.

தமது அவசர மற்றும் அடிப்படை மருத்துவத் தேவைகளுக்காக இவ் வைத்தியசாலையினை மட்டும் நம்பியே அக்கராயன், முட்கொம்பன், ஸ்கந்தபுரம், வன்னேரிக்குளம், அம்பலப்பெருமாள்,  ஐயங்கன்குளம், கோட்டை கட்டி, ஊற்றுப்புலம், முறிகண்டி எனப் பரந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் வாழந்து வருகின்றனர்.

மிகவும் பின்தங்கிய போக்குவரவு சேவைகள் அற்ற பகுதிகளான இவை மாரிகாலங்களில் முறிகண்டி ஜெயபுரம் வீதியின் முதலாம் கட்டையில் குறுக்கறுத்து ஓடும் வெள்ளத்தாலும், அக்கராயன்குளம் வான்பாயும் போது வெளிப்படும் வெள்ளத்தாலும் பெருநிலப்பரப்பிலிருந்து துண்டாடப்படுபவை.

அவ்வேளைகளில் அக்கராயன் வைத்தியசாலைக்கும் மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையான கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் இடையிலான போக்குவரவும் துண்டிக்கப்பட்டு விடும்.

மேலும் மாரிகாலங்களில் அக்கராயன்குள வைத்தியசாலையைச் சூழ உள்ள வாய்க்கால்களில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் வைத்தியசாலையின் மேற்குப் பகுதி வெள்ளக்காடாக காணப்படும்.  கொரொனா வைரசு நீரில் இரண்டு நாட்களுக்கு உயிர் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றமை இங்கு கவனிக்கத்தக்கது.

இவ்வாறாக பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பின்தங்கிய பகுதி மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கும் ஒரு வைத்தியசாலையை வருடத்தில் சில காலம் பிரதான வைத்தியசாலையுடன் இலகுவான தரைத்தொடர்பு துண்டிக்கப்படும் ஒரு வைத்தியசாலையினை கொரொனா வைத்தியசாலையாக மாற்றுவது என்பது மருத்துவ அறிவற்ற ஒரு பொது மகனாலேயே ஏற்கப்பட முடியாத விடயமாகும்.

ஏனெனில் தற்போது மேற்குலக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் ‘வைரசுடன் வாழ்வதற்கு’ நாம் தயாராக வேண்டிய சூழல். அதாவது கொரொனா சிகிச்சை மையங்களில் ஒன்றாக மாற்றப்படும் ஒரு வைத்தியசாலை அதுவும் நாடெங்கும் இருந்து நோயாளர்களை பெறும் சாத்தியம் அதிகமுள்ள வைத்தியசாலை ஆகக் குறைந்தது அடுத்த இரண்டு வருடங்களுக்காவது கொரொனா வைத்தியசாலையாகவே தொடர வேண்டும்.

இன்னும் நேரடியாகச் சொன்னால், அக்கராயன் வைத்தியசாலையானது முழு இலங்கைக்குமான கொரொனா சிகிச்சை மையங்களில் ஒன்றாக மாற்றப்பட்டால், அது பொதுமக்களுக்கு அடிப்படை வைத்திய வசதிகளை வழங்கும் வைத்தியசாலையாக மீண்டும் வருவதற்கான சந்தர்ப்பங்கள் அண்மை வருடங்களில் இல்லை.

சரி அவ்வாறு கொரொனா சிகிச்சை மையமாக அக்கராயன்குளம் வைத்தியசாலை மாறுமானால் அதற்கு பின்தள உதவிகளை வழங்குவதற்கும் ஆபத்தான நோயாளர்களை உடனடியாகக் கையாள்வதற்கும் ஒரு பிரதான வைத்தியசாலை அவசியம்.

எனினும் அவ்வாறான வைத்தியசாலையாக பொது வைத்தியசாலை கிளிநொச்சியை நாம் கொள்ள முடியாது. காரணம் தற்போது அவ்வைத்தியசாலையின் உள்ளக சூழல் கொதிநிலையில் உள்ளமையே ஆகும்.

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை தொடர்பில் வைத்திய நிபுணர்கள் ஒரு மனதாக முடிவெடுப்பதற்கு அல்லது முடிவெடுக்க வைப்பதற்கு முடியாத நிலையே உள்ளது என்பது வைத்தியர்களது தாய்ச் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வைத்தியர்களுக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினைகள் இப்போது ஊடகங்கள் வாயிலாக வெளிப்படும் அளவிற்கு நிர்வாகத்தின் பிடி தளர்ந்துபோயுள்ளது.

‘தான் போக வழியில்லாத மூஞ்சூறு விளக்குமாற்றையும் தூக்கிப் போவது போல’ கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையிலேயே தற்போது கொரொனா சிகிச்சையானது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவ் வைத்தியசாலையால் எவ்வாறு பின்தள உதவியை அக்கராயனில் அமைக்க எத்தனிக்கும் கொரோனா சிகிச்சை மையத்திற்கு  வழங்க முடியும்?

ஆதலால் அக்கராயனுக்கான பின்தள வைத்தியசாலையாக 83 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள யாழ் போதனா வைத்தியசாலையோ அல்லது 74 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வவுனியா வைத்தியசாலையோ தான் பின்தள வைத்தியசாலையாக அமைய முடியும்.

அப்படியானால் மாகாணத்திற்கான கொரொனா வைத்தியசாலையை யாழ்ப்பாணத்தில் அல்லது வவுனியாவில் அமைப்பதுதானே மிகப் பெர்ருத்தமாக இருக்கும்.  மாறாக மாரிகாலத்தில் அணுக முடியாத,  பின்தங்கிய பிரதேச மக்களுக்கான ஒரே ஒரு அடிப்படை சிகிச்சை வழங்கும் நிலையமாக உள்ள அக்கராயனை ஏன் கொரொனா சிகிச்சைக்கான மையமாக மாற்றி கொரொனா நோயாளர்களை ஆபத்தில் தள்ளி பொதுசனங்களையும் நடுத்தெருவில் விடவேண்டும்?

மழைக்காலத்தில் அக்கராயனிற்கான போக்குவரத்து

தனிநபர் நன்கொடை நிதியைப் பயன்படுத்தி அவசர அவசரமாக அக்கராயன்குள வைத்தியசாலையை மாகாண/மாவட்ட சிகிச்சை மையம் என்ற பெயரில் முழு இலங்கைக்குமான கொரொனா சிகிச்சை மையமாக மாற்றும் அளவிற்கு இப்போது என்ன அவசியம் அல்லது அவசரம் நேரிட்டது?

‘தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து ஏன் அரச நிறுவனங்கள் நன்கொடையாக பணம் பெறுவதில் முனைப்பாக உள்ளன?’  என கேட்டதற்கு ‘பெறுகை நடைமுறைகள் எவற்றையும் பின்பற்றாது தம் விருப்பப்படி பணத்தைக் கையா(ட)ள முடியும் என்பதாலேயே அரச அதிகாரிகள் நன்கொடை நிதிகள் மூலம் காதும் காதும் வைத்ததுபோல காரியங்களை முடிக்க முயற்சிப்பது வழமை ‘ என்று மூத்த கணக்காய்வு அதிகாரி ஒருவர் சொன்னார்.

இதிலிருந்தே இவர்கள் எல்லோரும் அவசரப்படுவது மாகாணத்திற்கான கொரொனா நோயாளர்களுக்காகவோ அல்லது அக்கராயன்குளத்திலிருக்கும் அப்பாவிச் சனங்களுக்காகவோ அல்ல என்பது தெளிவாகிறது.

சரி எப்படி அக்கராயன்குளம் இந்த ‘சீனிற்குள்’ வந்தது எனத் தேடும்போது அகப்பட்டன பின்வரும் ‘உள்வீட்டுத்’ தகவல்கள்.

(இன்னும் வரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here