கூட்டமைப்பின் சிறிய கோரிக்கைகளிற்கு மஹிந்த பச்சைக்கொடி: கிளிநொச்சியில் காணி விடுவிக்கவும் சம்மதம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று (4) மாலை இடம்பெற்றது.

மஹிந்த ராஜபக்சவின் விஜேராம மாவத்தை இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பில் கலந்து கொண்ட பிரமுகர்களுடன் தமிழ்பக்கம் சார்பில் பேசினோம்.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் 11 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அலரி மாளிகை சந்திப்பில் 12 பேர் கலந்து கொண்டிருந்த நிலையில், முன்னாள் எம்.பி சிவமோகன் ஊர் திரும்பிய நிலையில், மற்றையவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது, நாடாளுமன்றத்தை மீள கூட்டப்படுவதையே நாம் விரும்புகிறோம் என இரா.சம்பந்தன் தெரிவித்தார். எனினும், முகத்தில் எந்த பிரதிபலிப்புமில்லாமல், மௌனமாக பிரதமர் உட்கார்ந்திருந்தார்.

கடந்த அரசின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் வீடுகள் கட்டியும் நிதி விடுவிக்கப்படாமலுள்ளதை கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

அரசின் நிவாரணத் திட்டத்தின் கீழ் அன்றாட உழைப்பாளர்கள் அனைத்து தரப்பினரையும்- பூசகர்கள், நாதஸ்வர கலைஞர்கள், சிகை அலங்கரிப்பாளர்கள் உள்ளிட்டவர்களையும் இணைக்க வேண்டும்,

கொரோனா இடர் முடிவடையும் வரை கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் மீன், விவசாய உற்பத்திப் பொருட்களை நியாயமான விலையில் அரசு கொள்வனவு செய்ய வேண்டும்,

வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களில் நடக்கும் விடயங்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்களால் மக்கள் பிரதிநிதிகளிற்கு அறிவிக்கப்படுவதில்லை. மாவட்ட செயலக கலந்துரையாடல்களிற்கு பிரதேசசபை தவிசாளர்களும் அழைக்கப்படுவதில்லை. இதற்கு முறையான பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டனர்.

அன்றாட தொழிலாளர்களின் நிவாரணம், உற்பத்திகளை கொள்வனவு செய்வது தொடர்பில் அரச அதிபர்கள் மூலம் நடவடிக்கையெடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களின் நிதியை நிவாரணத்திற்கு வழங்க அரசு அனுமதிக்கவில்லை, குறைந்தபட்சம் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக, அந்த நிதியிலிருந்து வீட்டுத் தோட்டம், விவசாயத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளிற்கு பிரதேசசபை நிதி செலவிட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

உள்ளூராட்சிசபை நிதியை விடுவித்து செயற்படுவதை தேர்தல் திணைக்களம் அனுமதிக்கவில்லை, உள்ளூர் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டங்களிற்கு நிதி செலவிட அனுமதிக்கலாமென பிரதமர் தரப்பில் கூறப்பட்டது.

20 வருடங்களிற்கு மேற்பட்ட காலம் சிறையிலுள்ள, பாரதூரமான குற்றமிழைக்காத அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென செல்வம் அடைக்கலநாதன்> எம்.எ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

71 அரசியல் கைதிகள் உள்ளனர், அவர்களுடைய விவகாரம் வழக்கு விவகாரத்தில் உள்ளதாகவும், அவர்களை விடுவிப்பதில் தாமும் அக்கறையாக இருப்பதாகவும் மஹிந்த குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தலாமென சுமந்திரன் குறிப்பிட்டார். அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திற்கும், அவர்களின் உறவினர்களின் பிரதேசத்திற்குமுள்ள தூரத்தை சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டி, அவர்களை அண்மைய இடமொன்றில் மாற்ற வேண்டுமென்றார்.

புதிய அரசியலமைப்பு விவகாரம் நகர்த்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டபோது, புதிய நாடாளுமன்றத்தில் இரு தரப்பும் அது தொடர்பில் உட்கார்ந்து பேசி, செயற்படுத்தலாம் என ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தின் கீழ் உள்ள 300 ஏக்கர், ஜெயபுரத்தில் உள்ள 200 ஏக்கர் விவசாய காணிகளை வனவள திணைக்களம் ஆக்கிரமித்துள்ளதை சிறிதரன் சுட்டிக்காட்டினார். ஒரு காலத்தில் விவசாய நிலங்களாக இருந்த பகுதிகள் அவை, சுயசார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டுமென உங்கள் அரசு கூறுகிறது, ஆனால் காணிகள் விடுவிக்கப்படவில்லையென குறிப்பிட்டார்.

உடனடியாக, அந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஆனையிறவு சோதனைச்சாவடியின் கெடுபிடி குறித்து சிறிதரன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரும்போது, வவுனியா வரையே சோதனைச்சாவடி கெடுபிடி இருப்பதாகவும், தெற்கில் இல்லையென்றும், இராணுவம் போர்க்கால மனநிலையில் தமிழர்களுடன் செயற்படுவதை போல தோன்றுவதாகவும் தெரிவித்தார்.

இதை கேட்டு, மஹிந்த, பசில் உள்ளிட்டவர்கள் சிரிப்புடன், சோதனைச்சாவடி விவகாரத்தில் கவனம் செலுத்துவதாகவும், பிரமுகர்களின் போக்குவரத்திற்கான ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here