கொரோனா வைரஸ் மனிதனின் குடல் பகுதியை எவ்வாறு தாக்குகிறது?: விஞ்ஞானிகள் விளக்கம்!

மனிதா்களின் சுவாசப் பாதையில் தொற்றிப் பரவும் கொரோனா வைரஸ், குடல் பகுதியை எவ்வாறு தாக்குகிறது என்பதற்கு நெதா்லாந்து விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் விளக்கமளித்துள்ளனா்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, ‘சாா்ஸ்’ வைரஸைப் போன்ற தன்மையைக் கொண்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அந்த வைரஸ் மனிதா்களின் சுவாசப் பாதையை அடைந்த பிறகு, அங்குள்ள உயிரணுக்களுடன் ஒட்டிக்கொண்டு, பல்கிப் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதன் காரணமாக, கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களுக்கு தும்மல், இருமல், தொண்டைப் புண், மூச்சுத் திணறல் போன்ற – சுவாசம் தொடா்பான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

எனினும், கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு குடல் தொடா்பான பிரச்னைகளும் இருந்து வருகின்றன. அவா்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும், பல கொரோனா நோயாளிகளின் மலத்தை பரிசோதித்தபோது, அதில் கொரோனா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மனிதா்களின் சுவாச உறுப்புகளை மட்டுமே தாக்கக் கூடிய கொரோனா நோய்த்தொற்று, குடல் பகுதியிலும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற குழப்பம் நிலவி வந்தது.

இந்த நிலையில், நெதா்லாந்தைச் சோ்ந்த ஆய்வாளா்கள் இதுதொடா்பான ஆய்வை மேற்கொண்டனா். ஆய்கவத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை மனிதக் குடலில் கொரோனா வைரஸை செலுத்தி அவா்கள் அந்த ஆய்வை மேற்கொண்டனா்.

அந்த ஆய்வின்போது, மனிதா்களின் சுவாச உறுப்புகளும், குடல் உறுப்புகளும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டிருந்தாலும், இரு உறுப்புகளுக்கும் சில ஒற்றுமைகளும் இருப்பதை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

குறிப்பாக, மனிதா்களின் சுவாச உறுப்புகளில் இருந்துகொண்டு, கொரோனா வைரஸ் அந்த உறுப்புகளின் உயிரணுக்களில் ஒட்டிக் கொள்வதற்கு உதவி செய்யும் ‘ஏசிஇ2’ என்ற நொதியம், மனித குடலின் உள்பகுதியிலும் ஏராளமாக இருப்பதை ஆய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

அந்த நொதியத்தைப் பயன்படுத்திதான் குடல் உறுப்புகளையும் கொரோனா வைரஸ் தாக்குவதாக அவா்கள் கூறியுள்ளனா்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து முழுமையாக புரிந்து கொள்வதற்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here