சென்னை ஐபிஎல் போட்டிகளை நடத்த 4 முக்கிய நகரங்கள் தயார்

0

தமிழகத்தில் காவிரி நதி நீர் மேலாண்மை அமைக்கக் கோரி போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னையில் அடுத்து நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் நடத்த 4 முக்கிய நகரங்களை பிசிசிஐ அமைப்பு தேர்வு செய்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழங்கில் 6வாரங்களுக்குள் காவிரி நதிநீர் மேம்பாட்டு வாரியத்தை அமைக்க மத்திய அ ரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வாரியத்தை அமைக்காமல் பல்வேறு காரணங்களைக்கூறி மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால், போராட்டம் திசை திரும்பும் வகையில் அமைந்துவிடும் எனக் கூறி போட்டிகளை நடத்த அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் நேற்று மாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் தீவிரமான பாதுகாப்பு சோதனைக்கு பின்பே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் போல் நுழைந்த சிலர் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் ரவிந்திர ஜடேஜா மீது செருப்பு வீசி எறிந்தனர். இதனால், சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது.

இந்நிலையில், சென்னையில் அடுத்து நடக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்தவிடமாட்டோம் என அரசியல்கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால், சென்னையில்இருந்து போட்டிகளை வேறு நகரங்களுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டனர்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி வினோத் ராய் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது, சென்னையில் நடந்த முதல் போட்டியில் கூட வீரர்கள் மீது செருப்பு வீசப்பட்டது. இதனால் சென்னையில் அடுத்து நடக்கும் ஐபிஎல் போட்டிகளை வேறு நகரங்களுக்கு மாற்ற ஆலோசனை செய்து வருகிறோம்.

இதற்காக 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டிணம், திருவனந்தபுரம், புனே, மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்கள் தாயாராக இருக்கின்றன.

அதேசமயம், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், பாதுகாப்பு சூழலையும் மனதில்வைத்து முடிவு செய்வோம். ஆனால், சென்னை சூப்பர்சிங்ஸ் அணி நிர்வாகத்தினர் தமிழகத்தில் நிலவும் அரசியல்சூழலைக் கருத்தில் கொண்டு முடிவு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வினோத் ராய் தெரிவித்தார்.

இதற்கிடையே சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்பட்டால், போக்குவரத்து சூழலைக் கருத்தில் கொண்டும், ரசிகர்கள் எளிதாக வந்து செல்லவும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடத்தவே அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக திருவனந்தபுரம் பரிசீலிக்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here