கைத்துப்பாக்கிக்கு அனந்தி விண்ணப்பித்தது உண்மை… ஆனால்?

அனந்தி கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக மாகாணசபை உறுப்பினர் அயுப் அஸ்மின் கூறியிருந்தபோதும், அவரிடம் அதற்கான ஆதாரங்கள் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லையென்பதை இன்று மாலை தமிழ்பக்க வாசகர்களிற்காக வெளியிட்டிருந்தோம். அனந்தியிடம் கைத்துப்பாக்கி உள்ளதா? இருந்தால் என்ன ரக துப்பாக்கி இருக்கிறது என்ற விபரங்களை இன்றிரவு வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தோம்.

அதற்கு முன்னதாக ஒரு தகவல்.

அரசியல்வாதிகள் தமக்கு பக்கத்திலிருந்தவர்களை வெளியில் விடக்கூடாது என்பார்கள். கூட இருந்தவர்களை வெளியில் அனுப்பினால் என்ன நடக்கும்?… அதற்கு அனந்தி விடயமே ஒரு உதாரணம்!

அனந்தியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர் றிப்தி மொஹமட். இப்பொழுது அனந்தியின் முகாமிலிருந்து வெளியேறி, தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கிறார். அனந்தியுடன் முரண்பட்டு கொண்டு அவர் வெளியேறிய பின்னர், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவையும் சந்தித்து பேசியிருந்தார். எனினும், மாவை அவரை ஓரளவிற்கு மேல் தன்னை நெருங்க அனுமதிக்கவில்லை.

இதன்பின்னரே மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் போன்றவர்களுடன் நெருக்கமானார். அவர் மூலமே இப்படியான தகவல் ஒன்று கசிந்திருக்கலாமென பரவலான அப்பிராயம் உள்ளது.

தகவல் கசிந்த மூலம் இதுவென வைத்தாலும், கசிந்த தகவல் சரியானதா?

இந்த கேள்விக்கு விடை கிடைக்காமல்தான் பலரும் குழப்பமடைந்திருக்கிறார்கள். இந்த குழப்பத்தையெல்லாம் தீர்க்க, தமிழ்பக்கம் விசேடமாக திரட்டிய தகவல்கள் உதவும்.

முதலாவது- அனந்தியிடம் கைத்துப்பாக்கியெதுவுமே கிடையாது!

அடுத்தது- தனக்கு கைத்துப்பாக்கி தேவையென அனந்தி விண்ணப்பிக்கவும் இல்லை!!

தமிழ்பக்கம் இப்போதுவரை திரட்டிய தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தகவல்கள்தான் இவை.

அப்படியானால் அஸ்மின் சொன்னது பொய்யா?

அஸ்மின் ஆதாரங்களுடன் நிரூபிக்கும்போதுதான் அது மெய்யா, பொய்யா என்பது தெரியவரும். ஆனால், அஸ்மின் தவறான தகவலால் ஏமாந்திருக்கவும் வாய்ப்புண்டு. ஏனெனில், அனந்தி கைத்துப்பாக்கிக்கு விண்ணப்பித்த இன்னொரு சந்தர்ப்பமும் உண்டு.

அனந்தி கைத்துப்பாக்கிக்கு விண்ணப்பிக்கவில்லையென ஆரம்பத்தில் குறிப்பிட்டு விட்டு, இப்பொழுது விண்ணப்பித்தது உண்மையென்கிறோமே என வாசகர்கள் குழப்பமடையலாம். விடயத்தை சொல்லிவிடுகிறோம்.

அனந்தி கைத்துப்பாக்கிக்காக விண்ணப்பித்தார் என்பதில் உண்மையுமுண்டு. ஆனால தனக்காக விண்ணப்பிக்கவில்லை. தனது பாதுகாப்பு பொலிசார் ஏ.கே துப்பாக்கி வைத்திருக்கிறார்கள், அதனுடன் வாகனங்களில் செல்வதில் சிரமம் உள்ளதால், கைத்துப்பாக்கியை காவலர்களிற்கு வழங்கும்படி கோரி விண்ணப்பம் செய்திருக்கிறார்.

ஆனால் இது சாதாரண நிர்வாக நடைமுறைதான். தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலர் இப்படி கடிதம் எழுதிதான் தமது பாதுகாப்பு அணியினருக்கு ஒரு காலத்தில் கைத்துப்பாக்கி வாங்கியிருக்கிறார்கள்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமும் உள்ளது. வடமாகாணசபையிலிருந்து இப்படி- மெய்ப்பாதுகாவலருக்கு கைத்துப்பாக்கி வழங்கும்படி- வேறு சில கடிதங்களும் போயிருக்கின்றன!. இது சாதாரண நிர்வாக நடைமுறைதான். இதில் விமர்சனத்திற்கு எதுவுமில்லையென்பதால், அந்த உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிடாமல் தவிர்த்து விடுகிறோம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here