இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை வெற்றி!

நீண்ட தொடர் தோல்விகளின் பின், தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரை இலங்கை முழுமையாக வென்றது. கொழும்பில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 199 ஓட்டங்களால் தென்னாபிரிக்காவை வீழ்த்தியதன் மூலம், இலங்கை தொடரை வென்றது.

இரண்டாவது டெஸ்டின் மூன்றாம் நாளான இன்று 290 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் தென்னாபிரிக்கா இழந்து தோல்வியை தழுவியது.

முதலில் ஆடிய இலங்கை 338 ஓட்டங்களை பெற்றது. குணதிலக 57, கருணாரத்ன 53, தனஞ்ஜெய 60 ஓட்டங்களை பெற்றனர். தென்னாபிரிக்காவின் கேஸவ் மகராஜ் 9 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

அடுத்து ஆடிய தென்னாபிரிக்கா இலங்கையின் சுழல் தாக்குதலிற்கு ஈடுகொடுக்க முடியாமல் 124 ஓட்டங்களில் சுருண்டது. ப்ளெஸிஸ் 48 ஓட்ங்களை பெற்றார். அகில தனஞ்ஜெய 5, டில்ருவான் 4 விக்கெட்டுக்களை கொய்தனர்.

இலங்கை இரண்டாவது இன்னிங்சில் 275 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. மத்யூஸ் 71, கருணாரத்ன 85, குணதிலக 61 ஓட்டங்களை பெற்றனர். கேஸவ் மகராஜ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

490 என்ற வெற்றி இலக்குடன் ஆடிய தென்னாபிரிக்கா இன்றைய 3ம் நாளில் 290 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. ப்ருயன் நிதானமாக ஆடி சதமடித்தார். 101 ஓட்டங்களை பெற்றார். வுபுமா 63 ஓட்டங்களை பெற்றார். வேறு யாரும் சொல்லிக்கொள்ளும் விதமாக ஆடவில்லை. இலங்கை தரப்பில் ரஞ்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களை சாய்த்தார். அவர் 33வது தடவையாக 5 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார்.

ஆட்டநாயகன், தொடர்நாயகன் இரண்டையும் திமுத் கருணாரத்ன பெற்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here