15 கிலோ பிளாஸ்டிக்கை விழுங்கி 3 மாதமாக உயிருக்குப்போராடிய ஜல்லிக்கட்டு காளை: அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள்

மதுரை அருகே 15 கிலோ பிளாஸ்டிக்கை விழுங்கிய ஜல்லிக்கட்டு காளை ஒன்று கடந்த 3 மாதமாக உயிருக்குப்போராடி வந்தது. அந்த காளைக்கு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து 15 கிலோ பிளாஸ்டிக்கை அப்புறப்படுத்தி உயிரை காப்பாற்றியுள்ளனர்.

மதுரை ஊமச்சிக்குளம் அருகே மாரணியை சேர்ந்தவர் அருண்குமார். இவர், 2 வயது ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்க்கிறார். அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக இந்த காளையை அவர் தயார்ப்படுத்தி வந்தார்.

கடந்த 3 மாதமாகவே காளை அடிக்கடி சோர்வாகவும், சரியாக சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டு வந்தது. இவர், அருகில் உள்ள கால்நடை மருந்துமனைகளுக்கு அழைத்து சென்றுப் பார்த்துள்ளார். அவர்களும் தற்காலிகமாக ஊசிப்போட்டு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும், காளை சரியாக சாப்பிட முடியாமல் உடல் சோர்வாகவே காணப்பட்டுள்ளது.

சில நாளுக்கு முன் காளை திடீரென்று மூச்சுக்கூட விட முடியாமல் உயிருக்குப்போராட ஆரம்பித்துள்ளது. சாப்பிடவும் முடியாததால் கீழே சரிந்து மயங்கி விழுந்துள்ளது. அதிர்ச்சியைடைந்த அருண்குமார், அவரது நண்பர்கள், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவர்கள், காளையை காப்பாற்ற இயலாது என்று கைவிரித்துள்ளனர். குழந்தையைப்போல் கடந்த ஒரு ஆண்டாக வளர்த்த காளை உயிருக்குப் போராடுவதை கண்டு பதறிய அருண்குமாரும், அவரது நண்பர்களும் காளையை அப்படியே விட மனமில்லாமல் தல்லாக்குளம் மாவட்ட கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், திருப்பரங்குன்றம் கால்நடை பல்லைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் உமா ராணி மற்றும் மருத்துவ குழுவினர் உடனடியாக ஆம்புலன்சில் காளை உயிருக்குப் போராடிய கிராமத்திற்கே சென்று அதனை எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது காளையின் வயிற்றில் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் இருந்தது கண்டுபிடிப்பட்டது.

தாமதிக்காமல் மருத்துவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை காளையின் வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 3 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் 15 கிலோ பிளாஸ்டிக் வயிற்றில் இருந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அதை அகற்றி காளையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் தையல்போட்டுள்ளதால் காளையால் சாப்பிட இயலவில்லை. கடந்த 2 நாளாக குளுக்கோஸ் வழங்கி வருகின்றனர். 15 கிலோ பிளாஸ்டிக்கை விழுங்கி 3 மாதமாக உயிருக்குப்போராடிய காளைக்கு கால்நடை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அதன் உயிரை காப்பாற்றிய இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் கால்நடை பல்லைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் உமா ராணி கூறுகையில், “இந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கடந்த 6 மாதமாகவே நிறைய மருத்துவ சிகிச்சைகள் கொடுத்துள்ளனர். எதுவும் சரியாகவில்லை. பரிசாதனை செய்து பார்த்ததில் செரிமானம் ஆகாத பொருட்கள் வயிற்றில் இருந்தது தெரியவந்தது.

இதற்கு அறுவை சிகிச்சை செய்வதுதான் ஒரே வழி என்று முடிவு செய்து வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்தோம். வயிற்றில் இருந்த பிளாஸ்டிக்கை முற்றிலும் அப்புறப்படுத்தி விட்டதால் காளை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. தற்போது காளை எழுந்து நிற்க ஆரம்பித்துள்ளது. தையல் பிரிக்கும்வரை குளுக்கோஸ் கொடுப்போம்.

அதன்பிறகு வழக்கமான தீவனங்களை கொடுக்கலாம். காளையை வெளியே மேயவிடும்போது அவை பாலித்தீன் கவர்களையும், பிளாஸ்டிக்கையும் சாப்பிட்டுவிடுகின்றன. பாலித்தீன் மண்ணிலே மக்காதபோது எப்படி மாட்டின் வயிற்றில் செரிக்கும். அதனால், அந்த பிளாஸ்டிக்குகள் கடந்த 6 மாதமாக வயிற்றில் இருந்து கொண்டு காளைக்கு பல்வேறு தொந்தரவுகளை தந்துள்ளது.

அந்த பிளாஸ்டிக்குகள் வயிற்றில் ஒன்றோடு ஒன்று சிக்கி மலச்சிக்கல், செரிமானத்திற்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி கடைசியில் காளையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.

எங்கள் கவனத்திற்கு வந்து இந்த காளையை காப்பாற்றி உள்ளோம். மருத்துவமனைக்கு வராத இதுபோன்ற எத்தனையோ கால்நடைகள் பிளாஸ்டிக்கை சாப்பிட்டு இறக்கின்றன. அதனால், பிளாஸ்டிக்குகளை திறந்த வெளியில் போடக்கூடாது. அதை பயன்படுத்துவதை கைவிடுவதோடு இருந்தால் அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here