கருணாவை கடத்த புலிகள் நடத்திய இரகசிய ஒப்ரேசன்!

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 28

பீஷ்மர்

கருணா அணியின் நிதி விவகார தகவல்களை புலிகள் எப்படி துல்லியமாக பெற்றார்கள் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். கம்சன் என்ற போராளி ஒரு பென்ட்ரைவில் எல்லா தகவல்களையும் சேகரித்துக்கொண்டு, மட்டக்களப்பில் இருந்து தப்பி, வன்னிக்கு சென்றார் என கடந்த பாகத்தை முடித்திருந்தோம்.

கிழக்கில் வாங்கப்படும் வரி, அதில் எத்தனை வீதம் கணக்கு காட்டப்படுகிறது. மிகுதி பணம் எப்படி, யாருடைய வங்கிக்கணக்கிற்கு செல்கிறது என்பதை பற்றிய துல்லியமான தகவல்கள் புலிகளின் விரல் நுனிக்கு சென்ற கதை இதுதான்.

இந்த விபரங்கள் அனைத்தும் பிரபாகரனின் கவனத்திற்கும் சென்றது. அமைப்பின் கட்டுப்பாடுகளை மீறியதற்காக கருணா மீது நடவடிக்கை எடுப்பதற்கான அத்தனை வாய்ப்பும், இந்த பென்ட்ரைவ் பொட்டம்மானிடம் சென்று சேருவதற்கு முன்னரே விடுதலைப்புலிகளிற்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் பிரபாகரன் அவசரப்படவில்லை. கருணாவுடன் பேசி, அவரை சமாதானப்படுத்தி, அமைப்பிற்குள் சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்கவே விரும்பினார்.

விடுதலைப்புலிகளின் தலைமையுடன் கருணா தொடர்பை துண்டித்தது, 2004 மார்ச்சில் அல்ல. கருணா பிரிந்து செல்வதாக மார்ச்சில் அறிவித்தாலும், அதற்கு ஆறு மாதங்களின் முன்னரே இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது. கருணாவை வன்னிக்கு வருமாறு பிரபாகரன் அழைக்க, அவர் மறுத்தபடியிருந்தார். ஒரு கட்டத்தில், பிரபாகரனிற்கும் கருணாவிற்குமிடையிலான நேரடி தொடர்பு இல்லாமல் போய்விட்டது.

2003 ஒப்ரோபரில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தார். அப்பொழுது ஊடகங்களின் முன் பேசிய தமிழ்செல்வன், தனது வழக்கமான சிரிப்புடன்- “பேச்சின் அடுத்த கட்டங்கள் பற்றி நாங்கள் (கருணாவுடன்) நீண்ட ஆலோசனை நடத்தினோம். கிழக்கு நிலவரங்களை நேரில் பார்க்கவே இங்கு வந்தேன்“ என சொன்னார்.

ஆனால் அவர் சொன்னது உண்மையல்ல. அவர் மட்டக்களப்பிற்கு சென்றது, கருணாவுடன் சமரசம் பேச. பொட்டம்மான் கிழக்கிற்கு வந்துபோன பின்னர், கருணா மேலும் தொடர்பெல்லைக்கு வெளியில் சென்றுவிட்டார். புலிகளின் சமரச முயற்சிகளை அவர் விரும்பவில்லை.

புலிகளுடன் தொடர்பிலும் இல்லை, முக்கிய தளபதிகளுடன் முறுகல் என சமரச வாய்ப்புக்களை அவர் குறைத்துக்கொண்டு சென்றபோதுதான், தமிழ் செல்வன் பேசினார். கருணாவிற்கும் தமிழ்செல்வனிற்குமிடையில் நல்ல நட்பிருந்தது. (இதனடிப்படையில்தான் தமிழ்செல்வனின் மனைவியை இராணுவத்தின் பிடியில் இருந்து வெளியில் எடுப்பதில் கருணா முழுமையான உதவிகள் செய்திருந்தார். ஆனால் வெளிநாட்டுக்கு சென்றபின்னர், கருணா உதவவில்லையென தமிழ்செல்வனின் மனைவி சொன்னது வெறுகதை!)

கௌசல்யன்

தமிழ்செல்வன் தொடர்புகொண்டு சமரசம் பேசிய பின்னர்தான், அவரை நேரில் வருமாறு கருணா சொன்னார். இதுதான் தமிழ்செல்வன் மட்டக்களப்பிற்கு சென்றதன் இரகசியம். ஆனால் இந்த பேச்சுக்களும் பலனளிக்கவில்லை. கருணாவிற்கு எந்த நிபந்தனையுமில்லாத மன்னிப்பு வழங்கவும் புலிகள் தயாராக இருந்தார்கள். ஆனால், கருணா அதற்கு உடன்படவில்லை.

இதற்கெல்லாம் பிறகுதான் பென்ட்ரைவ் வன்னிக்கு வந்தது.

எந்த சமரசத்திற்கும் கருணா உடன்படாத நிலையில், விடுதலைப்புலிகள் ஒரு சேர்ஜிக்கல் ஒப்ரேசன் செய்ய முடிவெடுத்தனர். ஆம், கருணாவை உயிருடன் பிடித்து வன்னிக்கு கொண்டு வர புலிகள் முடிவெடுத்தனர்!

தரவை முகாமில் கிட்டத்தட்ட ஐயாயிரம் போராளிகளின் மத்தியில் கருணா இருக்கிறார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அங்கிருந்து கருணாவை எப்படி வன்னிக்கு கொண்டு வருவது?

அது சாத்தியமேயில்லை. ஐயாயிரம் போராளிகளை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி கருணாவை கைது செய்வதென்பது சாத்தியமேயில்லாத காரியம். அதற்கு புலிகளிடம் பத்தாயிரம் போராளிகளாவது தேவை. வன்னியிலிருந்து அவர்களை கிழக்கிற்கு நகர்த்தி செல்வதெல்லாம் சாத்தியமேயில்லை. அதற்குள் கருணா, அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று விடுவார்.

வேறு என்னதான் செய்யலாம்?

புலிகள் இதைப்பற்றித்தான் தீவிராக ஆலோசனை செய்தார்கள். பொட்டம்மான்தான் ஒரு மாஸ்ரர் பிளான் போட்டார்.

கருணாவை அந்த தரவைக்கு வெளியில் அழைத்து, அங்கு வைத்து மடக்கி வன்னிக்கு கொண்டு வருவதே திட்டத்தின் ஒன்லைன்.

இனி இதற்கு திட்ட வடிவங்கள் கொடுக்க வேண்டும். பொட்டம்மான் கச்சிதமாக அதை செய்தார்.

தமிழ்ச்செல்வன்- கருணா

கருணாவை வன்னிக்கு கொண்டுவரும் அந்த முக்கிய ஒப்ரேசன், புலிகளின் மட்டக்களப்பு புலனாய்வு பொறுப்பாளராக இருந்த நீலனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்ரேசன் மட்டும் வெற்றிகரமாக நடந்திருந்தால், விடுதலைப்புலிகளின் தலைவிதி வேறுவிதமாக மாற்றமடைந்திருக்கும். கருணாவை மட்டும் சிக்கலில்லாமல் வன்னிக்கு கொண்டு சென்றிருந்தால், கிழக்கிலிருந்த ஐயாயிரம் போராளிகளும் சிதைந்திருக்க மாட்டார்கள். புலிகளின் போரிடும் ஆற்றல் குறைந்திருக்காது.  புலிகளை பற்றிய இரகசிய தகவல்கள் இலங்கை, இந்தியாவிற்கு போயிருக்காது. கருணாவின் கீழ் செயற்பட்டவர்கள் புலிகளிற்கு எதிராக செயற்பட்டிருக்கமாட்டார்கள். இத்தனை அனுகூலமும் புலிகளிற்கு இருந்திருந்தால், யுத்தத்தின் முடிவு வேறுவிதமாகவும் மாறியிருக்கலாமல்லவா?

இந்த ஒப்ரேசன், ஒரு காதலால்தான் தோல்வியடைந்தது என்பது உங்களிற்கு நம்ப சிரமமாக இருக்கும். கருணா கடத்தல் ஒப்ரேசனை விபரமாக தருகிறோம். படித்து பாருங்கள் உண்மை புரியும்.

கருணாவை வன்னிக்கு கொண்டு வர வேண்டுமென பொட்டம்மான் திட்டமிட்டதும், மட்டக்களப்பிலிருந்த புலனாய்வு பொறுப்பாளர்களை வன்னிக்கு அழைத்தார். நீலன் மற்றும் இருவர் என மொத்தமாக மூவர் வன்னிக்கு இரகசியமாக வந்தனர். (இதில் ஒருவர் தற்போது ஐரோப்பாவில் இருக்கிறார். மற்றவர் மரணமாகிவிட்டார்) அவர்கள் வன்னிக்கு செல்வது, கிழக்கில் கருணாவின் ஆட்களிற்கு தெரியக்கூடாது. தெரிந்தால்- என்ன விசயமென துருவிப்பார்க்க முயலுவார்கள். ஆகவே புலனாய்வு பிரிவில் இருந்த போராளிகளிற்கே தெரியாமல், மிக இரகசியமாக வன்னிக்கு வந்தனர்.

2004 ஜனவரி இறுதியில் இந்த சம்பவம் நடந்தது. ஒரு மாலைப்பொழுதியில் வாகரைக்கு பக்கத்தில் உள்ள பால்சேனையிலிருந்து படகில் புறப்பட்டு, செம்மலையை அடைந்தனர். மறுநாள் காலையில் புதுக்குடியிருப்பில் இருந்த பொட்டம்மானின் முகாமில் சந்திப்பு நடந்தது.

மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யனிற்கு அப்பொழுது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த திருமணத்தை கருணாவிற்கான பொறியாக மாற்ற புலிகள் முடிவெடுத்தார்கள்.

கிழக்கு போராளிகளில் யார் யார் கருணாவுடன் நிற்கிறார்கள் என்பதை உறுதியாக தெரியாமல், இப்படியான ரிஸ்க்கான ஒப்ரேசன்களை செய்ய முடியாது. அது சிக்கல்களை கொடுக்கும்.  ஒரு சிறிய தகவல் லீக் ஆனால் கூட, கருணாவின் ஆட்கள் அலேர்ட் ஆகி விடுவார்கள்.

ஆனால், கௌசல்யன் நம்பிக்கையான ஆள் என நீலன் சொன்னார். புலிகளுடன் கருணா முரண்பட தொடங்கி, வன்னியுடனான தொடர்புகளை துண்டித்த பிறகு, கருணாவுடன் நெருங்கிய வட்டத்தில் இருந்த சில முக்கிய சோஸ்களின் மூலமே, அங்கு நடப்பவற்றை புலிகள் அறிந்து கொண்டார்கள். அதில் கௌசல்யன் முக்கியமானவர். புலிகளிற்குள் பிளவு வருவதை அவர் விரும்பவில்லை. அது தமிழர்களிற்குத்தான் பாதகமாக முடியுமென தனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், பிளவு வெளிப்படையாக ஏற்படாதவரையும், அவர் கருணாவின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் செயற்பட்டு வந்தார்.

அப்பொழுது பத்திரிகையாளர் சிவராம்தான் கருணாவின் ஆலோசகர்களில் முதன்மையானவர். கிழக்கில் தனியான அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென அவர் கருணாவிற்கு ஆலோசனை கொடுத்து வந்தார். அப்பொழுதுதான் புலிகளில் இருந்து பிரிந்தாலும், பலமான தனி அமைப்பாக செயற்படலாமென்றார்.

சிவராமின் ஆலோசனையையடுத்து கிழக்கு புலிகளின் முக்கியஸ்தர்களை அழைத்த கருணா, தனியான அரசியல்துறை கட்டமைப்பை உருவாக்கி செயற்பட தயாராகுமாறு ஆலோசனை கூறியிருந்தார். இந்த தகவல்கள் எல்லாம் கௌசல்யன் ஊடாக உடனுக்குடன் பொட்டம்மானிடம் வந்து கொண்டிருந்தது.

புதுக்குடியிருப்பு கூட்டத்தில் கருணாவை எப்படி வெளியில் கொண்டு வருவதென தீவிரமாக ஆலோசனை நடத்தினார்கள். மட்டக்களப்பில் இருந்து சென்ற புலனாய்வு பொறுப்பாளர்கள் இரண்டு ஐடியா வைத்திருந்தார்கள். அதை பொட்டம்மானிடம் சொன்னார்கள்.

முதலாவது, கொமாண்டோ அற்றாக் செய்வது. சிறிய புலனாய்வு அணியொன்று கருணாவின் இருப்பிடத்தை இரகசியமாக சுற்றிவளைத்து, கருணாவை பணயக்கைதியாக பிடித்து, தரவை முகாமிற்கு வெளியில் கொண்டு வருவது. கருணாவின் தங்குமிடம் வரை கொமாண்டோ அணி செல்வதற்கு திட்டமுள்ளது என்றார்கள்.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், எப்படியும் அந்த இடத்தில் மோதல் நடக்கும். எதிர்பாராத விதமாக கருணாவின் தரப்பு பலமாகி விட்டால், திட்டம் குழம்பிவிடும். இந்த தாக்குதல் நடக்குமிடத்தை சூழ ஐயாயிரம் போராளிகள் நிற்கப் போகிறார்கள். அவர்களை சமாளிப்பது சிரமமாக இருக்கலாம். மற்றது, அவர்களிற்கு மத்தியில் இருந்து கருணாவை கைது செய்துகொண்டு செல்வது, அவர்களிடம் எதிர்மறையான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி விடலாம்.

இரண்டாவது திட்டம், வெளியில் இருந்து தாக்குதலணி செல்லாமல், கருணாவுடன் நிற்கும் போராளிகளில் நம்பிக்கையான சிலர்  மூலம் கருணாவை இரகசியமாக வெளியில் கொண்டு வருவது.

இதுவும் உத்தரவாதமில்லாத திட்டம்தான். தங்குமிடத்திற்குள் கருணாவை துப்பாக்கி முனையில் பணிய வைக்கலாமா இல்லையா என்பதில்தான் இந்த திட்டத்தின் வெற்றி தங்கியிருக்கிறது. பணிய வைக்க முடியவில்லையென்றால், திட்டம் சிக்கலாகிவிடும். அங்கு ஏதும் அசம்பாவிதம் நடந்து கருணாவிற்கு ஏதும் ஆகி, நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் சிக்கவும் சாத்தியம் உள்ளது. அவர்களை விசாரிக்க, வன்னிக்கு கொண்டு செல்ல இந்த ஒப்ரேசனை செய்தோம் என சொன்னால், பெரிய சிக்கலாகி விடும். கிழக்கு படையணிகள் மொத்தமாக விடுதலைப்புலிகளில் அதிருப்தியடையும்.

ஆகவே, இரண்டு ஐடியாக்களையும் பொட்டம்மான் தவிர்த்து விட்டார். அவரிடம் வேறொரு ஐடியா இருந்தது. அது கௌசல்யனின் திருமணத்தில் வைத்து கருணாவை கடத்துவது!

கௌசல்யனின் திருமணத்தை தரவை முகாமிற்கு வெளியில் எங்காவது நடத்தி, அங்கு கருணாவை வரவைத்து, அந்த இடத்தில் வைத்து கருணாவை கடத்தி செல்வதே பொட்டம்மானின் திட்டம்!

திட்டம் பற்றிய விளக்கத்தை பொட்டம்மானிடம் இருந்து பெற்றதும், அன்றிரவே நீலனும் மற்றைய இருவரும் மட்டக்களப்பிற்கு திரும்பினார்கள். மறுநாள் மதிய உணவை தமது முகாமில் உட்கொண்டார்கள். அவர்கள் வன்னிக்கு போய் வந்த விசயம் யாருக்கும் தெரியாது. அவ்வளவு இரகசியமாக எல்லாம் முடிந்தது. புலனாய்வுத்துறை ஆட்களின் மீது கருணாவின் புலனாய்வு ஆட்கள் எப்பொழுதும் ஒரு கண் வைத்திருந்தார்கள். அவர்களிற்கும் டிமிக்கி கொடுத்து, வன்னிக்கு போய் வந்தனர்.

மட்டக்களப்பிற்கு வந்ததும் நீலன் ஒப்ரேசனிற்கான ஆயத்தங்களை தொடங்கினார்.

மட்டக்களப்பில் புலனாய்வுத்துறை போராளிகளின் இரண்டு முகாம்கள் இருந்தன. திடீரென கஞ்சிகுடிச்சாறில் மூன்றாவது முகாம் அமைக்கப்பட்டது. இரண்டு முகாம்களிலுமிருந்து, நம்பிக்கையான பதினைந்து போராளிகளை தெரிவுசெய்து அந்த முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள்தான் கருணாவை கடத்தும் ஒப்ரேசனில் பங்குபற்றவிருப்பவர்கள்.

இந்த ஒப்ரேசனில் புலனாய்வுத்துறையினரின் கையில் இல்லாத மிக முக்கியமான விசயமொன்று இருந்தன. விடுதலைப்புலிகளுடன் முரண்பட தொடங்கிய பின்னர், தரவை முகாமைவிட்டு கருணா வெளியில் செல்வதில்லை. ஐயாயிரம் போராளிகளால் சூழப்பட்ட கோட்டைக்குள்ளேயே தங்கியிருந்தார். வெளியில் செல்ல வேண்டியிருந்தால், மிக நம்பிக்கையான நிறைய போராளிகளுடன் சென்று வந்தார். கௌசல்யனின் திருமண வீட்டிற்கு எப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வருவார்? பாதுகாப்பு குறைந்த திருமண வீட்டிற்கு வர சம்மதிப்பாரா?

கௌசல்யனின் திருமண வீட்டிற்கு வர கருணா சம்மதிப்பதிலேயே, இந்த ஒப்ரேசன் தங்கியிருந்தது. 2004 மார்ச் 03ம் திகதி திருமணத்திற்கு திட்டமிடப்பட்டது.

வாய்ப்பான இடமொன்றில் திருமணம் நடந்தாலே, ஒப்ரேசனை வெற்றிகரமாக செய்யலாம். கொக்கட்சிசோலை ஆலயத்தில் திருமணத்தை நடத்தினால், தமக்கு வாய்ப்பாக இருக்குமென புலனாய்வுத்துறையினர் கருதினர். அந்த இடத்தையே திருமணத்திற்காக கௌசல்யன் தேர்ந்தெடுத்தார்!

2004 பெப்ரவரி மாதம்.

ஒருநாள் கருணாவை சந்தித்த கௌசல்யன், தனது திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்ற சம்பிரதாய அழைப்பை விடுக்க, உடனடியாக கருணா அதை ஏற்றுக்கொண்டார். கௌசல்யன் மட்டக்களப்பின் மூத்த போராளிகளில் ஒருவர். மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர். ஆகவே சம்பிரதாய அடிப்படையிலாவது கருணா கலந்துகொள்வார் என எதிர்பார்க்க கூடியதுதான். ஆனால், புலிகளுடன் சிக்கல் ஆரம்பித்த பின்னர், தனது பாதுகாப்பில் கவனமெடுத்து, வெளிநிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து விடுவாரோ என்றுதான் புலிகள் பயந்தார்கள். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை.

ஆகவே, திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக கடக்கப்பட்டது.

தேனகம்

அடுத்ததாக, பதினைந்து போராளிகளிற்கும் குறுகிய பயிற்சி வழங்கப்பட்டது. கொக்கட்டிசோலை ஆலயத்தில் எந்த இடத்தில் மணமக்கள் உட்கார்ந்திருப்பார்கள், விருந்தினர்கள் எங்கு நிற்பார்கள், ஒப்ரேசன் ஆட்கள் எங்கு நிலையெடுத்திருக்க வேண்டும், கருணாவின் பாதுகாப்பு ஆட்களை எப்படி முடிப்பது, யார் கருணாவிற்கு பக்கத்தில் நிற்பது, யார் கைவிலங்கிடுவது, பாதுகாப்பு ஆட்களை முடித்ததும் யார் கருணாவை அலாக்காக தூக்கிச்சென்று வாகனத்தில் ஏற்றுவது, வாகனத்தை பாதுகாப்பாக எங்கு கொண்டு செல்வது பற்றி பயிற்சியளிக்கப்பட்டது.

கொக்கட்ச்சோலை ஆலயத்தில் இருந்து கருணாவை வாகனத்தில் ஏற்றினால், அடுத்து என்ன செய்வது?

அதற்காகவும் பக்கா பிளான் ஒன்றை புலிகள் போட்டிருந்தார்கள். கருணாவை கடத்தும் ஒப்ரேசனில் நேரடியாக கலந்துகொள்பவர்கள் பதினைந்து பேர். இதைவிட, இன்றும் பத்துப் பேர் அதில் இருந்தார்கள். அவர்களை பற்றி, ஒப்ரேசனில் கலந்துகொள்பவர்களிற்கும் தெரியாது. அவர்கள் கோயிலுக்கு வெளிப்புறத்தை கவனித்து கொள்வார்கள். கருணாவின் ஆட்கள் யாராவது சிவில் உடையில் கண்காணிப்பில் நின்று, பிரச்சனையென்றதும் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை உருவினால், அவர்களை முடிக்க இந்த பத்து பேர்.

கொக்கட்டிசோலை ஆலயத்தில் கருணாவை கைது செய்து, வாகனத்தில் ஏற்றி, கொக்கட்சிசோலை சந்தியின் ஊடாக உன்னிச்சைக்கு கொண்டு வருவதுதான் திட்டம். கொக்கட்டிசோலையில் இருந்து உன்னிச்சை பக்கம் திரும்பியதும், இன்னொரு வாகனத்தில் ஆட்கள் மாறி ஏறிக்கொள்ள வேண்டும். பின்னர், ஆட்கள் இல்லாத வெறும் வாகனம் வெல்லாவெளி நோக்கி போக வேண்டும். அந்த வாகனத்தின் மீதே எல்லோரது கவனமும் இருக்கும்.

உன்னிச்சை தொடக்கம் மாங்கேணி வரை வெவ்வேறு இடங்களில் நான்கு இரகசிய மறைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஏதாவதொன்றிற்கு கருணா கொண்டு செல்லப்பட்டால் சரி. ஒப்ரேசனின் முதல் பாகம் முடியும்.

இதன்பின், இன்னொரு அணியால் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்படும்.

இரண்டாம் பாகத்தில் என்னென்ன விசயங்கள் இருந்தன என்பதையும், இந்த ஒப்ரேசன் ஏன் சறுப்பியது என்பதையும் அடுத்த பாகத்தில் குறிப்பிடுகிறோம்.

(தொடரும்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here