அமெரிக்காவில் உயிரிழப்பவர்கள் ‘திகில் தீவில்’ பெரும் பள்ளத்தில் ஒன்றாக புதைக்கும் காட்சிகள்!

அமெரிக்காவில் நியுயோர்க் நகரில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சடலங்களை ஒரே இடத்தில் பெரும் பள்ளம் வெட்டி அடுக்கடுக்காகப் புதைக்கப்படுகிறது.

இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி அமெரிக்காவில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றால் அமெரிக்காவிலேயே தற்போது அதிக அளவில் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக 2,000 வரையான இறப்புக்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் இறந்தவர்களைத் தனித்தனியே அலங்கார சவப்பெட்டிகளில் வைத்து, ஒரே இடத்தில் பெரும் பள்ளங்களை வெட்டி மொத்தமாக சாதாரண பெட்டிகளில் உடல்களை வைத்து அடுக்கடுக்காக வைத்துப் புதைக்கிறார்கள்.

நியுயோர்க் நகரில் அதிகளவானவர்கள் இறப்பதால், சடலங்களை பிராங்ஸை ஒட்டியுள்ள ஹார்ட் தீவில் பெரும் பள்ளம் தோண்டப்பட்டு புதைக்கப்பட்டு வருகிறது.

இந்த தீவில் 19ஆம் நூற்றாண்டிலிருந்து அடையாளம் தெரியாத சடலங்களையும், இறுதிச்சடங்கு செய்ய முடியாதவர்களின் சடலங்களையும் இந்த தீவில் புதைக்கப்பட்டு வருகிறது.

அந்த தீவில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டு வருகிறது. சிறைச்சாலை கைதிகள் சுமார் 12 பேர் அங்கு சடலங்களை புதைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

படகில் மட்டுமே செல்லக் கூடிய இந்தத் தீவு கல்லறையில் மிகக் குறைவான ஊதியத்தில் சிறைக் கைதிகளே பணியாற்றுகின்றனர்.

இங்குள்ள சவக்கிடங்கில் சுமார் 800 முதல் 900 உடல்களை சேமிக்க முடியும்,. இதுதவிர, 40 குளிரூட்டப்பட்ட லொறிகளில் சுமார் 4,000 உடல்களையும் சேமிக்கும் வசதியேற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒவ்வொரு வியாழக்கிழமை ஹார்ட் தீவில் சுமார் 25 உடல்கள் புதைக்கப்படுகின்றன. எனினும், மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் இறப்புகள் வெகுவாக அதிகரித்தபோது அந்த எண்ணிக்கை 72 ஆக அதிகரித்தது

ஹார்ட் தீவின் திகில் வரலாறு

ஹார்ட் தீவின் வரலாறு அச்சமூட்டுவது. 1868 இல் உள்நாட்டுப் போரின்போது இறந்தவர்களின் உடல்களை புதைக்குமிடமாக இந்த தீவு பயன்படுத்தப்பட்டது. இதுவரை, அங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.

மனநல நிறுவனம், காசநோய் சுகாதார நிலையம், உடல்கள் புதைக்கும் இடம் மற்றும் பனிப்போர் காலத்தில் விமான எதிர்ப்பு ஏவுகணை தளமாக இது பயன்படுத்தப்பட்டது.

1868 ஆம் ஆண்டில் கல்லறையாக பயன்படுத்தப்பட்ட பின்னர், நகர மருத்துவமனைகளில் இருந்து அகற்றப்படும் உரிமைகோரப்படாத சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டு வருகின்றன.

1958 அளவில் இங்கு அடக்கம் செய்யப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 500,000 ஐ எட்டியது. 1870 மஞ்சள் காய்ச்சல் தொற்றுநோய், 1919 ஸ்பானிஷ் காய்ச்சல் காரணமாக இறந்தவர்களின் உடல்களும் இங்குதான் புதைக்கப்பட்டது.

ஸ்பானிஷ் காய்ச்சலின் போது, ​​500,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்தபோது, ​​நகர புதைகுழிகளில் புதைக்க இடமின்மையால் ஆயிரக்கணக்கானோர் ஹார்ட் தீவில் அடக்கம் செய்யப்பட்டனர்.

தொற்றுநோய்களின் போது ஒரு நாளைக்கு 50 முதல் 5,000 உடல்கள் இங்கு புதைக்கப்பட்டன.

மிக சமீபத்திய காலங்களில், உரிமை கோரப்படாத ஆயிரக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகளின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளர். 1985 ஆம் ஆண்டிலிருந்து எயிட்ஸ் நோயாளிகளின் உடல்கள் புதைக்கப்பட்டு வருகிறது.

1988 மற்றும் 1999 க்கு இடைப்பட்ட காலத்தில் 200 அடி அகழியில் 8,904 குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டன.

இது 1980 களில் ஒரு பொது கல்லறையாகப் பயன்படுத்தப்பட தொடங்கிய பின்னர், உரிமை கோரப்படாத சடலங்களை நியூயோர்க்கில் இருந்து வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துச் சென்று ரைக்கர்ஸ் தீவில் உள்ள கைதிகளால் அடக்கம் செய்யப்படுகிறது.

உரிமை கோரப்படாத உடல்கள், மருத்துவ பள்ளிகளிலோ அல்லது சவக்கிடங்கு வகுப்புகளிலோ பயிற்சிக்கு பயன்படுத்த மாநில சட்டத்தில் இடமுண்டு. உரிமை கோரப்படாத உடல்களுக்கும் மருத்துவப் பள்ளிகளால் பயன்படுத்தப்பட்ட இடங்களுக்கும் இங்கு புதைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here