சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று?

சவூதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூயோர்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது

இதில் ரியாத்தின் ஆளுநராக இருக்கும் மன்னர் குடும்பத்தின் இளவரசர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா வைரஸுக்காக சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் கிங் ஃபைஸல் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்காக பிரத்யேகமாக 500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரவிக்கப்பட்டுள்ளது.

“இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது என்பது தெரியவில்லை. எங்களை உச்ச பட்ச கண்காணிப்போடு இருக்க உத்தரவிட்டுள்ளார்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து நோயாளிகளும் இந்த மருத்துவமனைக்கு அனுப்வைக்கப்பட உள்ளார்கள்” என மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏறக்குறைய சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேர்வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் 84 வயதான மன்னர் கிங் சல்மான் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஜெத்தா நகர் அருகே கடலில் இருக்கும் சிறிய தீவில் தங்கி இருப்பதாகவும், இளவரசர் முகமது பின் சல்மான் அவரின் அமைச்சர்கள் பலர் நியோம் நகர் அருகே கடற்கரைப் பகுதியில் தங்கி இருப்பதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் கடந்த மாதம் 2ம் திகதி முதல் கொரோனா வைரஸ் நோயாளி இருப்பது உறுதி செய்யப்பட்டதிலிருந்து அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனாவுக்கும் யாத்ரீகர்கள் வருவது தடை செய்யப்பட்டது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன.

பெரிய முக்கிய நகரங்கள் அனைத்தும் லொக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டு, அத்தியாவசிய தேவைகளுக்கு மக்களுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சவூதி அரேபிய அரசின் கடும் கெடுபிடியால் 25 இலட்சம் முஸ்லிம் யாத்ரீகர்கள் தங்கள் புனித பயணத்தை இரத்து செய்தார்கள்.

இதுவரை சவூதிஅரேபியாவில் 2,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 45 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று நியூயோர்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here