உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும்!

உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவ மக்களுக்கு கடந்த காலங்களில் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகவே இருந்து வந்துள்ள போதிலும், கடந்த வருடம் அது மிகவும் துன்பகரமான ஒன்றாக மாறியது. இதனால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இதனைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அதில் மேலும் கூறியிருப்பதாவது, இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுடன் இணைந்து, மனித இனத்தை பாவங்களில் இருந்து விடுவிப்பதற்காக இயேசு சிலுவையில் தனது வாழ்வை அர்ப்பணித்து உயிர்த்தெழுந்த உயிர்ப்புப் பெருவிழாவை இன்று பக்தியுடன் நினைவு கூர்கின்றனர்.

தனது ஆன்மாவையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக்கொள்வது இதன் முக்கிய நோக்கமாகும். கிறிஸ்தவ பக்தர்கள் இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்ப்பை நினைவுகூர்ந்து ஆன்மீக கிரியைகளில் ஈடுபடுகின்றனர். அதன் மூலம் வளர்த்துக்கொள்ளும் அமைதியும் சாந்தமும், நாட்டில் உள்ள ஏனைய சகோதர இனங்களுக்கிடையிலான அன்பு, சமாதானம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்திக்கொள்ள அவர்களுக்கு உதவும் என நான் நம்புகின்றேன்.

தற்போது கொரோனா வைரஸ் பரவுவதுடன் உலக மக்கள் முகம் கொடுத்துள்ள பாரிய அனர்த்தம் அனைத்து பக்தர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இயேசு பிரானின் தெய்வீக மகிமையினால், துன்பத்திற்குள்ளாகியுள்ள அனைத்து மக்களுக்கும் ஆறுதலை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

உயிர்ப்புப் பெருவிழா இந்நாட்டில் உள்ள கிறிஸ்தவ பக்தர்களுக்கு கடந்த காலங்களில் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. எனினும் கடந்த வருடம் அது மிகவும் துன்பகரமான ஒன்றாக மாறியது. இன்றும் அந்த கவலை நீங்கவில்லை. பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. அதேபோல் அத்தகைய சம்பவங்களை தாய்நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டுவதற்கும் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் உள்ளது.

நாடும் மக்களும் சவால் மிகுந்த சுகாதார அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ள இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினதும் சுகாதார அதிகாரிகளினதும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப வீடுகளில் இருந்து இயேசு கிறிஸ்துவுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இயேசுவின் போதனைகளை நினைவுகூர்ந்து ஆன்மாவை பாவத்திலிருந்து விடுவிப்பதற்கு உங்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இயலுமாவதாக என பிரார்த்திக்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here