கேஸவ் மகராஜ் சாதனை: வெற்றிக்காக காத்திருக்கும் இலங்கை!

இலங்கைக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், 61 ஆண்டுகளுக்குப் பின், தென்னாபிரிக்க வீரர் கேஸவ் மகராஜ் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இலங்கையில் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி விளையாடி வருகிறது. இதில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நேற்று முதல் நடந்து வருகிறது.

ரொஸ் வென்ற இலங்கை அணி முதலில் ஆடியது. முதல்நாள் ஆட்டமான நேற்று ஒரேநாளில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. தென்னாபிரிக்க அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் கேஸவ் மகராஜ் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

இலங்கை அணியில் ரொப் ஓர்டர் ஆட்டக்காரர்களான குணதிலக (57), கருணாரத்ன(53), டி சில்வா(60) ஆகியோர் அரைசதம் அடித்தனர். நடுவரிசை வீரர்களும், கடைசிநிலை வீரர்களும் கேஸவ் மகராஜின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர்.

104.1 ஓவர்களில் 338 ரன்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேஸவ் மகராஜ் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தென்னாபிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேஸவ் மகராஜின் கிரிக்கெட் வாழ்க்கையில் 9 விக்கெட் வீழ்த்தியது மிகப்பெரிய சாதனையாகும். சிறப்பான பந்துவீச்சாகவும் அமைந்தது. தொடக்க நாளில் கேஸவ் மகராஜ் 8 விக்கெட்டுகளையும், 2-வது நாளான இன்று ஒரு விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த கேஸவ் மகராஜின் பூர்வீகம் இந்தியா ஆகும். இவரின் தாய், தந்தை இந்தியாவில் இருந்து தென்னாபிரிக்காவில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் தென்னாபிரிக்க அணியில் கடந்த 1957-ம் ஆண்டு டேபீல்ட் 113 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 61 ஆண்டுகளுக்குப் பின் கேஸவ் மகராஜ் சமன் செய்துள்ளார்.

ஆனால், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தியதில் இதுவரை இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கரும் (53/10), இந்திய வீரர் அணியில் கும்ப்ளே (74/10) ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாபிரிக்க அணி 124 ரன்களில் சுருண்டது. இலங்கை வீரர்கள் அகில தனஞ்செய 5 விக்கெட்டுகளையும், தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

தென்னாபிரிக்க அணியில் மூத்த வீரர் ஹசிம் அம்லா இந்தப் போட்டியில் 19 ரன்களை எட்டியபோது, சர்வதேச டெஸ்ட் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது தென்னாபிரிக்க வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

முதல் இன்னிங்ஸில் 214 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 34 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளது. குணதிலக 61 ரன்களில் வெளியேறினார். கருணாரத்னே 59 ரன்களிலும், மத்யூஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். மகராஜ் 2 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

போட்டியில் இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், இலங்கை இரண்டாவது இன்னிஸ்சில் 7 விக்கெட்டுக்கள் கைவசத்துடன் 365 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியிலும் இலங்கை வெற்றிபெற வாய்ப்புள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here