கொரோனாவுடன் போராடி மீண்ட 104 வயது மூதாட்டி சொல்லும் அறிவுரை!

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து 104 வயது மூதாட்டி குணமடைந்துள்ளார். தைரியமும், நம்பிக்கையுமே என்னை இந்த நோயிலிருந்து விடுவித்தது என்று அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று இன்று சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிக உயிர் பலியைச் சந்தித்த நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 18,279 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 1,43,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இத்தாலியில் 104 வயதான மூதாட்டியான சானுசா என்பவர் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கண்டிருக்கிறார்.

இதுகுறித்து சானுசா வெளியிட்ட வீடியோவில் பேசும்போது, ”நான் நலமாக இருக்கிறேன். சில நாட்களாக எனக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் இருந்தது. ஒருவாரம் நான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். தற்போது நலமாகிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸை எதிர்கொள்ள தைரியமும், நம்பிக்கையும் தேவை என்று சக இத்தாலியர்களுக்கு தனது அனுபவத்தையே அறிவுரையாக வழங்கியுள்ளார் சானுசா.

உலகம் முழுவதும் 95,714 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here