கரோனாவால் பாதிக்கப்பட்ட தாயுடன் சேர்ந்திருக்க வேண்டும் என மகள் கதறும் வீடியோ வைரல்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனது தாயுடன் சேர்ந்திருக்கவேண்டும் என மகள் கதறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகந்தா கோரிகொப்பா. இவர் பெளகாவி மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். இதனிடையே அவருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து பெளகாவியில் உள்ள ஒரு ஓட்டலில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தனிமை வார்டில் சுகந்தா கோரிகொப்பா தங்கவைக்கப்பட்டுள்ளார். 11 நாட்களாக அவர் தனிமை வார்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தாய் சுகந்தாக் காண முடியாமல் அவரது 3 வயது மகள் ஐஸ்வர்யா தவித்து வந்தார். இதையடுத்து சுகந்தா தங்கவைக்கப்பட்டுள்ள தனிமை வார்டுக்கு வெளியே தினமும் ஐஸ்வர்யாவை அவரது தந்தை சந்தோஷ் அழைத்து வருவார். சிறிது நேரம் வார்டின் நுழைவுவாயிலில் இருந்து தாயைப் பார்த்துவிட்டு திரும்புவார் ஐஸ்வர்யா. இந்நிலையில் ஒரு நாள் தனது தாயைப் பார்த்ததும் தன்னுடன் வீட்டுக்கு வருமாறு ஐஸ்வர்யா அழ ஆரம்பித்தார். மகளை சமாதானம் செய்ய முடியாமல் தந்தை சந்தோஷ் தவித்தார். மகளுடன் இருக்க முடியாமல் தாய் சுகந்தாவும் தவித்தார்.

இதைப் பார்த்த சிலர் இதை வீடியோவாகப் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதவிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் சில தொலைக்காட்சிகளிலும் இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் தனிமை வார்டில் உள்ள செவிலியர் சுகந்தாவுடன், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தொலைபேசியில் பேசி அவரை சமாதானம் செய்தார். நீங்கள் சிறிது காலம் தனிமை வார்டில் தொடர்ந்து இருக்கவேண்டும். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. எனவே உங்கள் குடும்பத்துக்காக சிறிது காலம் தனிமை வார்டில் இருப்பதே நல்லது என்று முதல்வர் எடியூரப்பா, சுகந்தாவிடம் தெரிவித்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று சுகந்தா தொடர்ந்து தனிமை வார்டில் இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here