மாவையின் அப்டேற் வெர்சனா விக்னேஸ்வரன்?: இனி தமிழரசுக்கட்சி 2.0 அரசியல்தான்!

 

நம்மாழ்வார்

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வு நடந்தது. வடக்கு முதலமைச்சர் க.வீ.விக்னேஸ்வரனும் அதில் கலந்து கொண்டிருந்தார். பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்கள் சிலர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். பேச்சாளர்களும் அவர்கள்தான். முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் அரசியலில் தனி அடையாளமாக மேலெழ வேண்டிய காலம் வரும், அதை பயன்படுத்தி தவிர்க்க முடியாத அடையாளமாக முதலமைச்சர் மாறுவார், அடுத்த முதலமைச்சரும் அவர்தான் என்ற சாரப்பட உரையாற்றினார்கள். அவர்கள் இப்படி கொளுத்தி விட்டுக் கொண்டிருந்த சமயத்தில், முதலமைச்சர் முகத்தில் மெல்லிய புன்முறுவலுடன் உட்கார்ந்திருந்தார். இந்த பேச்சுக்களை அவர் இரசித்துக் கொண்டிருந்தார்.

முதலமைச்சர் அடுத்து என்ன முடிவெடுக்க போகிறார்? இந்த மாகாணசபை முதலமைச்சர் பதவிக்காலத்திற்கு பின்னரும், தமிழ் அரசியலில் தொடர போகிறாரா? அப்படி தொடர்ந்தால், தமிழரசுக்கட்சியுடன் இணைந்திருப்பாரா? இல்லையெனில், செற்பாட்டு அரசியலில் பலவீனமான முதலமைச்சர், எப்படி தனித்த அரசியல் இயக்கத்தை உருவாக்குவார்? இப்படியெல்லாம் ஏராளம் கேள்விகள் வரிசையில் உள்ளன. அவற்றில் முதன்மையான கேள்விக்கு இந்த நாட்களில் விடை கிடைத்து வருகிறது.

அந்த கேள்வி- இந்த பதவிக்காலத்தின் பின்னர் முதலமைச்சர் என்ன முடிவெடுக்க போகிறார்? தமிழ் அரசியலில் நீடிக்கப் போகிறாரா? என்பதே. கடந்த சில மாத நிகழ்வுகள் இதற்கான பதிலை அரூபமாக ஏற்படுத்தியுள்ளது. ஆம், முதலமைச்சர் தமிழ் அரசியலில் நீடிக்கப் போகிறார்!

எப்படி நீடிக்கப் போகிறார்?

அதற்கான தெளிவான பதிலை சொல்ல முன்னர், முதலமைச்சரின் இயல்பொன்றை பற்றி குறிப்பிட வேண்டும். முதலமைச்சரிற்கு மிக நெருங்கிய வட்டத்தில் உள்ள ஒருவர் அடிக்கடி குறிப்பிடுவார், “அவர் எப்பொழுது என்ன முடிவெடுப்பார் என்பது தெரியாது. ஒரு விசயத்தில் அவர் எடுக்கும் முடிவில் செல்வாக்கு செலுத்துவது, அவர் யாரை இறுதியாக சந்திக்கிறார் என்பதிலேயே தங்கியுள்ளது“ என.

தீர்மானங்கள் எடுப்பதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவ்வளவு பலமானவர் கிடையாது. அவரது முடிவுகளில் ராஜதந்திர தொனி இருப்பது அரிது. இதில் மெதுமெதுவாகத்தான் அவர் முன்னேறி வருகிறார். முடிவெடுப்பதில் இவ்வளவு பலவீனமான முதலமைச்சர், அரசியலில் எப்படி நீடிக்கப் போகிறார் என்பதை உடனடியாக தெரிந்துகொள்வது சிரமம்தான். ஆனால் இந்த நாட்களில் அவர் தனது நிலையெதுவென்பதை உள்ளூர உய்த்தறிந்துள்ளார் என்றே தோன்றுகிறது.

விக்னேஸ்வரனின் அரசியல் என்பது- அடுத்த முதலமைச்சர் என்பதுதான். முதலமைச்சர் பதவியின் மூலம் எதையாவது செய்யலாமென அவர் நம்புகிறார். அதாவது, ஏற்படுத்தப்பட்ட இலங்கையின் நிர்வாக, அரசியலமைப்பு முறைமைகளிற்கு உட்பட்ட விதத்திலேயே அவரால் அரசில் செய்ய முடியும், அரசியல் போராட்டம் செய்ய முடியும். இது தமிழ் அரசியல் செயற்பாட்டு பாரம்பரியத்தில் புதியதொரு அம்சம். தீவிர அரசியல் செயற்பாட்டாளர்கள் அப்படியிருப்பதில்லை. அவர்கள் போராடி தமக்கான இடத்தை கண்டுபிடிப்பார்கள். இதில் இன்னொரு நகைமுரணும் உண்டு. ஈழத்தமிழ் அரசியலில் அப்படியான முயற்சிகளை செய்தவர்கள் அதிகபட்ச ரிஸ்க்கான வாழ்க்கையை சந்தித்தார்கள். மரணத்தையும் தழுவினார்கள். அந்த முயற்சியில் அவர்களால் வெற்றியடையவே முடியவில்லை.

இப்படியான ஈழ அரசியல் பாரம்பரியத்தில், 2009 இன் பின்னர் மேலெழுந்த அரசியல் சக்திகள் அதிகபட்ச விமர்சனத்தை சந்தித்தது ஆச்சரியமானதல்ல. தமிழரசுக்கட்சியாகட்டும், ஆயுத இயக்கங்களாகட்டும், தமிழ் தேசிய கூட்டமைப்பாகட்டும்- அனைத்துமே மேலே சொன்ன “அடங்கமறு“ அரசியல் பாதையில் உருவானவைதான். ஆனால் இன்று, அவை தமது விடாப்பிடி தன்மைகள் பலவற்றை நீக்கி, இன்று புதியதொரு அரசியல் வெர்சனை (Version) உருவாக்கியுள்ளன.

அரசியலில் நீடிப்பதெனில், விக்னேஸ்வரனிற்கு இப்போதுவரை இரண்டு தெரிவுகள் உள்ளன. முதலாவது, ஏற்கனவே அவர் அரசியலுக்கு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது தமிழரசுக்கட்சியின் மூலமே வடமாகாணசபை தேர்தலில் களமிறங்குவது. அல்லது, புதியதொரு கூட்டணியை உருவாக்குவது.

விக்னேஸ்வரன் புதியதொரு கூட்டணியை நோக்கி செல்கிறார் என தமிழ் அரசியல் பரப்பில் அண்மைக்காலமாக பலர் எழுதுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கும் தெரிவை விக்னேஸ்வரன் இன்னும் கைவிடவில்லை. அல்லது, அப்படியான சூழல் ஒன்று உருவாகுவதை தடுக்கும் அரசியல் சக்தி அவரிடமில்லை.

தமிழரசுக்கட்சியுடன் விக்னேஸ்வரனிற்கு கொள்கைரீதியிலான அதிக முரண்பாடுகள் கிடையாது. அதில் எம்.ஏ.சுமந்திரனின் அரசியல் ஆதிக்கம் அதிகமாக உள்ளது மட்டுமே பிரச்சனையாக உள்ளது. சுமந்திரனின் அரசில் ஆதிக்கம் நீக்கப்பட்ட தமிழரசுக்கட்சியோ, தமிழ் தேசியக்கூட்டமைப்போ விக்னேஸ்வரனிற்கு அசளகரியத்தை கொடுக்காது. அப்படியொரு தமிழரசுக்கட்சியை, அல்லது அப்படி தோன்றும் தமிழரசுக்கட்சியை நோக்கி அவர் நகர்த்த முனையக்கூடும்.

அடுத்த முதல்வர் வேட்பாளராக யாரை களமிறக்குவதென்ற விவாதம் தமிழரசுக்கட்சிக்குள் ஏற்படும் சமயத்தில்தான், ஒரு அரசியல் பேரம் நிகழும். தமிழரசுக்கட்சியின் முதல்வர் வேட்பாளராகும் வாய்ப்பிருந்தால், விக்னேஸ்வரன் வெளியில் செல்லும் வாய்ப்பு அதிகபட்சமாக இருக்காது. அப்படி நடந்தால், மாவை சேனாதிராசா மீண்டுமொரு முறை காத்திருப்போர் பட்டியலில் இணைய வேண்டியிருக்கும். தமிழ் அரசியல் சூழல் செல்லும் திசையை கவனித்தால், விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கும் நெருக்கடியையே இரா.சம்பந்தனிற்கு ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும், அண்மைக்காலத்தில் கூட்டமைப்பின் முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தரிற்கு வெளியிலும் சென்று கொண்டிருப்பதையும், பல குறுநில மன்னர்கள் மேலெழுவதையும் கவனிக்க வேண்டும்.

தமிழரசுக்கட்சிக்குள் இடமில்லாவிட்டால், வீட்டுக்குத்தான் போக வேண்டுமென்ற நெருக்கடி விக்னேஸ்வரனிற்கு இல்லை. அதனால்தான் தனக்கான கூட்டணியொன்றிற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ் மக்கள் பேரவையென்பது, விக்னேஸ்வரனின் எதிர்கால அரசியல் செயற்பாட்டிற்கான நடைமேடையே. பேரவையிலிருந்து புதியதொரு கூட்டணிக்கு செல்லும் வாய்ப்புக்கள் உள்ளன. அப்படியொரு கூட்டணியமைந்தால், அது தமிழரசுக்கட்சியின் அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெர்சன் 2.0 ஆகவே இருக்கும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியியுடன் அரசியல் கூட்டணி வைத்திருக்க முடியாதென முதலமைச்சர் உறுதியாக நம்புகிறார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் நிலைப்பாடுகளும், முதலமைச்சரின் அரசியல் நிலைப்பாடுகளும் வேறுவேறானவை. அரசியல் இலக்கில் தொடங்கி, அதற்கான அணுகுமுறை வரை இரண்டு தரப்பும் வெவ்வேறு நிலைப்பாடுடையவர்கள். அதாவது தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டிற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டிற்கும் உள்ள வித்தியாம் அது. அதனால்தான் முதல்வரின் அரசியல் தமிழரசுக்கட்சி வெர்சன் 2.0  என்றேன். இதில் இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். உள்ளூராட்சி தேர்தலின் பின்னர், தமிழரசுக்கட்சிக்குள்ளும் கடும்போக்காளர்களின் குரல்கள் மேலெழுந்து வருகிறது. அல்லது அப்படியான தொனியில் பேச ஆரம்பிக்கிறார்கள்.

2009 அரசியல் மாற்றத்திற்கு பின்னர் மேலெழுந்த அரசியல்சக்திகள் ஏன் விமர்சனத்திற்கு உள்ளாகின என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இதில் மாவை சேனாதிராசாவும் ஒருவர். அவர் மீதும் கடுமையான விமர்சனங்களை பலர் வைத்தனர். இதில் மாவை சேனாதிராசாவை தனித்து குறிப்பிட காரணம்- தமிழ் அரசியலில் ஒருகாலத்தில் அதிக ரிஸ்க் எடுத்தவர் அவர். இலங்கையின் அரசியல், நிர்வாக அமைப்புக்களிற்கு உட்படாமல், புதிய அமைப்பொன்றிற்காக கனவு கண்டவர், முயற்சித்தவர். ஆனால், அரசியல் மாற்றத்தில், சமகால சூழலை வந்தடைந்திருக்கிறார்கள்.

அரசியல்ரீதியாக பார்த்தால் மாவை சேனாதிராசாவிற்கும், விக்னேஸ்வரனிற்குமிடையில் எந்த வேறுபாடும் கிடையாது. நிலைப்பாடுகள், வழிமுறைகளில் ஒத்தவர்களாகவே காணப்படுகிறார்கள். சிலசில நுணுக்கமான அம்சங்களில்தான் வித்தியாசம் உள்ளது. மாவை சேனாதிராசா தனது அரசியலின் தொடக்க, மத்திய காலத்தில் எப்படி பேசினாரோ, அப்படி பேசாததே அவரது சறுக்கல். அந்த சறுக்கலை விக்னேஸ்வரன் சந்திக்கவில்லை. காரணம், தற்போதைய தமிழரசியலின் வெகுஜன பலவீனமான சில கூறுகள் அவரிடமில்லை. அதாவது, வர்த்தக உற்பத்திகள் சந்தையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத சந்தர்ப்பத்தில், அந்த தவறுகளை சரி செய்து, அப்டேற் வெர்சன்கள் வெளியாவதில்லையா, அப்படியான வித்தியாசமே மாவைக்கும், விக்னேஸ்வரனிற்குமிடையிலான வித்தியாசம். மாவை சேனாதிராசாவின் அரசியலில் எந்த மாற்றத்திற்குமான அப்டேற்றுக்கும் இனி வாய்ப்பில்லையென்றே தோன்றுகிறது. அப்படி பார்த்தால், இருவருக்குமிடையிலான போட்டியில் மாவையின் அப்டேற் வெர்சனான விக்னேஸ்வரன்தான் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த போட்டியில் யார் ஜெயித்தாலும், தமிழ் அரசியல் அடுத்த ஐந்து வருடத்திற்கும் தமிழரசுக்கட்சி 2.0 அரசியல்தான் நடக்கப் போகிறது!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here