மட்டக்களப்பு சமுர்த்தி: குறைபாடுகளும், சுட்டிக்காட்டல்களும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை அரசாங்கம் கட்டுப்படுத்த எடுத்துவரும் ஊரடங்கு சட்ட நடைமுறையின் பின்புலத்தில் நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியான நிலையில் நிற்கும் சாதாரன தர மக்களும் சமுர்த்தி நன்மை பெறும் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக 285 ற்கு மேற் பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச்சேர்ந்ததும் 29 சமுர்த்தி வங்கிகளை உள்ளடக்கியதுமாக சமுர்த்தி பயனாளிகளாக சமுர்த்தி முத்திரை நிவாரணம் பெறும் குடும்பங்கள் 101856 உள்ளன.

இக்குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் ரூபா 420.ரூபா, 1500.ரூபா, 2500.ரூபா, 3500 என்ற ரீதியில் சமுர்த்தி வங்கிகள் ஊடாக சமுர்த்தி முத்திரை நிவாரணக் கொடுப்பனவாக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் கிழமை அதாவது 10 திகதி அல்லது 15ம் திகதிக்கு இடையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படுகிறது. 29 சமுர்த்தி வங்கிகளினது நடைமுறைக்கணக்கிற்கு மாதாந்த மாக ரூபா 236180100.00 பெறுமதியான நிதி உரிய காலப்பகுதியில் வைப்பிலிடப்படுவதுடன் குறித்த தொகை உரிய பயனாளிகளுக்கு அந்த மாதத்தினுள்ளே கொடுப்பனவு செய்யப்பட வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கொடுப்பனவு தொடர்பான கடமைகளுக்காக சமுர்த்தி வங்கி அதிகாரிகளுக்கு மாதா மாதம் மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றது.

இன்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த மட்டில் இக் கொடுப்பனவு உரிய காலப்பகுதியில் உரிய மக்களைச் சென்றடைவது இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அத்துடன் ரூபா 420 பெறுமதியான முத்திரை நிவாரணம் பெறும் குடும்பங்கள் 13000 தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாக அறிக்கைகள் இருந்தாலும் உண்மையில் இக் கொடுப்பனவை பெற தகுதியானவர்களாக குறித்த தொகையில் 80% மானவர்கள் தகுதி இல்லாதவர்கள் யதார்த்தமாக குறித்த ரூபா 420 கொடுப்பனவை பெறுபவர்களாக அடையாளப்படுத்தப்படுபவர்கள் உண்மையில் 20 வருடங்களாக சமுர்த்தி திட்டத்தின் ஊடாக வாழ்வாதாரத்தில் மேம்பட்டவர்களையே சாரும். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த தொகைக்குள் உள்ள சமுர்த்தி பயனாளிகள் யதார்த்தமாக சமுர்த்தி நிவாரணத்தொகையினைப் பெற தகுதியானவர்களாக இருந்தும் அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படாமல் ஏதோ சமுர்த்தி வழங்க வேண்டும் என்பதற்காக குறித்த ரூபா 420 விற்கான முத்திரை வழங்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தமானதும் மறுக்க முடியாததுமான உண்மையும் கூட.

அதிலும் இந்த 13000 குடும்பங்களுக்கும் தங்களுக்கு கட்டாய சேமிப்பு ரூபா 240 மாதாந்தம் வங்கியில் வைப்புச் செய்யப்படுகின்றது. அதன் பெயரில் வருடாந்தம் 7% வட்டி வழங்கப்படுகின்றது என்றதை கூட அறிந்து கொள்ளக்கூடிய வகையில் அவர்களுக்கான வங்கி கணக்கு புத்தகங்கள் கூட பல வருடங்களாக பல சமுர்த்தி வங்கிகளால் இதுவரை வழங்கப்பட வில்லை.

இது ஒரு புறம். அடுத்ததாக மாதாந்தம் நிவாரணத்தொகையாக சமுர்த்தி வங்கிகள் ஊடாக பணத்தினை பெற வேண்டிய மாவட்டத்தின் மொத்த 88000 குடும்பங்களுக்கு பல சமுர்த்தி வங்கிகள் கடந்த தைப்பொங்கலுக்கு பிற்பாடு உரிய பணத்தினை வழங்காது உள்ளதும் மிகவும் வேதனையான விடயமும் கூட. இன்நிலையில் அண்மையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவிகளை வழங்கும் முகமாக பல் வேறு திட்டங்களை அரசாங்கம்அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மேற் கொண்டு வரும் நிலையில், சமுர்த்தி நிவாரண நன்மை பெறும் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக ரூபா 5000 தவணைகள் கொண்ட கடனாக சமுர்த்தி வங்கிகளினால் வழங்க ஏற்பாடுகளைச் செய்ய சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில சமுர்த்தி வங்கிகளில் சமுர்த்தி முத்திரை நிவாரண வழங்கப்படாத பணம் ரூபா 2 நபர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு 3 மாதத்திற்கான தொகை ரூபா 6200 உம் 3 நபர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றின் மூன்று மாத தொகை ரூபா 9300 மீதியாக சமுர்த்தி வங்கிகள் சில வைப்பதில் வைத்துக் கொண்டு ரூபா 5000 பணத்தினை கடனாக வழங்குவதில் முன்னுரிமை காட்டி வருகின்றன. அத்துடன் மட்டக்களப்பு நகர் பகுதியை அண்டியுள்ள சமுர்த்தி பயனாளிகள் முத்திரை நிவாரண பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக அன்மைய நாட்களில் கூட்டம் கூட்டமாக சமுர்த்தி வங்கிகளில் காணப்படுவதும் அவதானிக்க கூடியதாகவுள்ளது

அத்துடன் கடந்த 21/03/2020 ம் திகதி அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளரினதும் மற்றும் 23.03.2020. DSD/HO/14/18 சுற்றுநிருபம். இலக்க சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாகவும் மாவட்டச் செயலாளர்களுக்கு சமுர்த்தி நிவாரண முத்திரை நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கு தற்போதைய ஊரடங்கு நிலையினை கருத்தில் கொண்டு உணவு பொதிகளை பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கிராமம் கிராமமாக வழங்க நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும் அதற்கான கொடுப்பனவினை சமுர்த்தி வங்கிகள் ஊடாக சமுர்த்தி முத்திரை பயனாளிகளின் நிவாரண பெறுமதிக்கு ஏற்றால் போல் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல்கள் துரித கதியில் அரசாங்க உயர் மட்டங்களில் இருந்து வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இன்று வரை குறித்த நிவாரணப் பொருட்களின் விநியோகத்தை மட்டக்களப்பு மாவட்டச் செயலக நிருவாகம் வழங்க நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்பட்டு வருகின்றது.

அத்துடன் சில அதிகாரிகளைத் தொடர்ப்பு கொண்டு பொருட்கள் விநியோகம் தொடர்பாக கேட்ட போது அரசாங்கத்தால் விலை நிர்ணயம் செய்த பொருட்களுக்கு கூட உரிய விலை மாவட்டச் செயலகத்திற்கு கிடைக்க வில்லை எனவும் பருப்பு அரிசிக்கான விலைகளை விசாரித்துக் கொண்டு உள்ளதாகவும் பதில்களை வழங்கி வருகின்றனர்.

அத்துடன் 2009 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பல இடர் அனர்த்தங்களில் போது பலநோக்கு கூட்டறவுச் சங்களின் செயற்பாடுகள் சிறப்பாக இடம் பெற்று வந்துள்ளதுடன் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் பாரிய அளவிலான நடவடிக்கைகள் அல்லாது சாதாரணமான நிலையில் இயங்கி வருகின்ற வேளையில் அவர்களை குறிப்பிட்ட இக்காலப்பகுதியில் பயன்படுத்தி குறித்த நிவாரண பொருள் விநியோக நடவடிக்கையினை கிராமங்கள் தோறும் மேற் கோள்ளக்கூடிய நடவடிக்கையினை அதிகாரிகள் இலகுவாக மேற் கொள்ள முடியுமாக உள்ளதுடன் மக்கள் நெரிசல் மற்றும் போக்கு வரத்து வசதிகள் மட்டுப்பட்டுத்தப்பட்ட நிலையில் உள்ள பின்தங்கிய பிரதேச மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு செயற்பட்டிருக்க முடியும்

அத்துடன் தற்போதைய நிலையில் 8 மணித்தியாலங்கள் இடைவெளியில் தளர்த்தப்படும் ஊரடங்குச்சட்ட நிலையின் போது சாதாரன ஏழை மக்களுக்கு பணமாக ரூபா 5000 முதற்கட்ட கடன் பணம் மற்றும் மூன்று மாத முத்திரை ப்பணத்தினையும் ஒரே தடவையில் வழங்கி வைப்பதால் குறித்த மக்கள் தங்கள் கைவசம் பணம் இருந்தும் அவர்களுக்கு தேவையான அண்றாட நுகர்வுத் தேவைக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டு வருவதுடன் அதிக விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு முச்சக்கர வண்டிகளுக்கு அதிகளவான பணத்தினைச் செலுத்தி பயணம் செய்யும் நிலையில் உள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது.

இன்நிலையில் ஜனாதிபதியினால் இரண்டாம் கட்ட நிவாரணங்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்புகளும் வரும் வாரங்களில் நடைமுறைக்கு வரும் நிலை உள்ள வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை மற்றும் கொரோனா வைரஸ் பரவும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பணமாக ஏழை மக்களுக்கு வழங்கும் அரசாங்க உதவிகள் சிறந்த விடயமாக கருத முடியாத விடயமும் கூட

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகாரமான பதவிகளில் உள்ள பல அதிகாரிகள் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள சாதாரன மக்களின் வாழ்க்கை நிலை என்ன கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு அவர்களுக்கான போக்கு வரத்து வசதிகள் என்ன என்று அறிந்து கொள்ளாதவர்களாக மூடிய அறைக்குள் இருந்து கொண்டு தீர்மானங்களை மேற் கொண்டு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் ஊடாக தகவல்களைப்பெற்று அறிக்கை வழங்கும் அதிகாரிகளாகவும் அறிக்கை விடுபவர்களுமாகவே உள்ளனர் என்பது ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது நிதர்சனமாக விளங்கி கொள்ளக்கூடிய ஒன்றாகும்.

மாற்றம் என்பது மக்கள் மனங்களில் இல்லை மக்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் மனங்களில் ஏற்பட்டால் மாத்திரமே மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்காலம் சுபிட்சம் பெற வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here