கர்ப்பத்தை வீட்டிலேயே அறிந்து கொள்ளலாமா?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 27

சி.பகீரதன் (25),
வாதரவத்தை

எனக்கு திருமணமாகி இரண்டரை மாதமாகிறது. மனைவி கருத்தரித்ததை எப்படி நாமே கண்டறிவது? மனைவி கருத்தரித்தால் எத்தனை மாதம் வரை உடலுறவு கொள்ளலாம்?

டாக்டர் ஞானப்பழம்: கருத்தரித்தலில் தொடங்கி, பிரசவம் வரையிலான காலத்தை கர்ப்பகாலம் என்கிறோம். ஆணின் விந்தணு பெண்ணின் முட்டையைச் சென்று அடைந்ததும் கருத்தரித்தல் தொடங்குகிறது. கருத்தரித்து, கரு வளர்ச்சியடைந்து, முழு வடிவம் பெற்று உலகத்தைக் காண தோராயமாக 280 நாட்கள் ஆகும். இந்தக் காலத்தைத்தான் கர்ப்ப காலம் என்கிறோம். குழந்தை முற்றிலுமாக வளர்ச்சியடைந்ததும், கர்ப்பப்பையில் இருந்து பெண்ணின் வெஜைனா அல்லது பெண் உறுப்பு (Genital track) வழியாகக் குழந்தை வெளியே தள்ளப்படுவதை, பிரசவம் அல்லது குழந்தைப் பிறப்பு என்கிறோம்.

கர்ப்பத்தின் முதல் அடையாளம், மாதவிலக்கு ஏற்படுவது தடைபடுவதுதான். பொதுவாக, மாதவிலக்கு சுழற்சி என்பது 28 நாட்கள். ஒருவருக்கு 40 நாட்கள் அல்லது அதற்கு மேல் ஆகியும் மாதவிலக்கு ஏற்படவில்லை எனில், கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்பு உள்ளது. கர்ப்பம் தரித்திருப்பதை சாதாரண சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டறியலாம். கிட்டத்தட்ட, கருத்தரித்து 25 முதல் 30 மணி நேரத்தில் பெண்ணின் முட்டை இரண்டு செல்லாகப் பிரிகிறது. அடுத்த 50 மணி நேரத்தில் அது நான்கு செல், பின்னர் எட்டு செல்… இப்படிப் பிரிந்துகொண்டே இருக்கும். செல் பிரிதல் நிகழ்வு, அடுத்த சில மாதங்களில் முழுக் குழந்தையாக மாறுகிறது.

கர்ப்பம் தரித்திருப்பதன் முதல் அறிகுறியே, மாதவிலக்கைத் தவறவிடுவதுதான். ஆனால், மாதவிலக்கு வரவில்லை என்பதற்கு, வேறு பல காரணங்களும் இருக்கலாம். எனவே, கர்ப்பம் தரித்திருப்பதை உறுதிசெய்ய, சிறுநீர் பரிசோதனை செய்வதுதான் சிறந்தது. இதற்கு, மருந்துக் கடைகளிலேயே ப்ரெக்னென்ஸி ஸ்ட்ரிப் கிடைக்கிறது. ப்ரிக் கலர் (Preg color), விலாசிட் (Velocit)போன்ற பல ஹோம் டெஸ்ட் கிட்கள் உள்ளன. இதில், இரண்டு கோடுகள் இருக்கும். காலையில் சிறுநீர்ப் பரிசோதனை செய்யும்போது, கர்ப்பமாக இருந்தால், நிறம் மாறும். பிரெக்னென்ஸி ஸ்ட்ரிப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதியானால், தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

நீங்கள் உடலுறவு கொள்வது உள்ளிட்ட எல்லா சந்தேகங்களையும் தீர்த்து, ஆலோசனையை மருத்துவர் வழங்குவார்.

மயூரன் (36),
நெல்லியடி

என் மனைவி தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அவள் கர்ப்பமாகியிருக்கிறார். அதனால், அவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறினேன். ஆனால் அவர் வேலைக்கு செல்வேன் என விடாப்பிடியாக நிற்கிறார். அவர் வேலைக்குச் செல்வது சரியா? அவர் போகலாம் என்றால், எந்த மாதம் வரை வேலைக்குச் செல்லலாம்?

டாக்டர் ஞானப்பழம்: தாராளமாக உங்கள் மனைவி வேலைக்குச் செல்லலாம். ரத்தக்கசிவு, அதீத சோர்வு போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை எனில், வேலைக்குச் செல்வதில் பிரச்னை இல்லை. காலில் வீக்கம் ஏற்படுவது, சுவாசிப்பதில் சிரமம், உயர் ரத்த அழுத்தம், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து ஓய்வு எடுக்கலாம். மற்றவர்கள் பிரசவம் ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்னர் வரை அலுவலகம் செல்வதில் பிரச்னை இல்லை. வாகனங்களில் செல்பவர்கள், மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் குலுங்கிச் செல்லாதவாறு கவனமாகப் பயணிக்க வேண்டும். இதன் மூலம், பிரசவகால விடுப்பை மிச்சம்செய்து, பிரசவத்துக்குப் பிறகு நீண்ட நாள் குழந்தையை கவனித்துக்கொள்ள விடுப்பு எடுத்துக்கொள்ள முடியும்.

கடந்த பாகத்தை படிக்க: ஒருமுறை தாம்பத்தியம் வைத்தாலே கருத்தரிக்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here