போர்க்களமானது அண்ணாசாலை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் கொந்தளித்துள்ள நிலையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்துவதா என எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் நேற்று மாலை பல்வேறு அமைப்பினர் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியே போர்க்களமானதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மறியலில் ஈடுபட்ட இயக்குநர் பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப் பட்டனர்.

போட்டியின்போது மைதானத்துக் குள் காலணி, கொடி, சட்டைகளை வீசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் 3 நிமிடம் போட்டி தடைபட்டது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக் காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என பல் வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்பை மீறி போட்டியை நடத்தினால், மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது.

அதன்படி, இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னையில் அறிவிக்கப்பட்ட முதல் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் நேற்று மாலை போராட்டங்கள் வெடித்தன. திருவல்லிக்கேணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல சேப்பாக்கம் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா சாலை – வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை அருகில் மாலை 4 மணியில் இருந்து ஒவ்வொரு அமைப்பினராக திரளத் தொடங்கினர். நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்டிபிஐ, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மே 17 இயக்கம், கொங்குநாடு இளைஞர் பேரவை, மனித நேய ஜனநாயகக் கட்சி, தமிழ்த்தேச பொதுவுடை மைக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேர வை, தமிழ் நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கொடிகளுடன் திரண்டனர்.

தொடக்கத்தில் சில நூறு பேர்களுடன் தொடங்கிய மறியல் போராட்டத்தில் நேரம் செல்லச் செல்ல ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அண்ணா சிலையை சுற்றிலும் உள்ள நான்கு சாலைகளிலும் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

மாலை சுமார் 5 மணி அளவில் அண்ணா சிலை சந்திப்பில் இருந்து வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் மைதானம் நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறிச் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்த முடியா மல் போலீஸார் திணறினர். அப் போது காவல் துறையினரின் தடுப்புகளை உடைத்துத் தள்ளிவிட்டு மைதானத்தை நோக்கி ஓடினர்.

இதையடுத்து திருவல்லிக்கேணி காவல் நிலையல் அருகே அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு எம்எல்ஏக்கள் கருணாஸ், உ.தனியரசு, தமிமுன் அன்சாரி, கவிஞர் வைரமுத்து, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், தங்கர்பச்சான், கவுதமன், களஞ்சியம், அமீர், வி.சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப் புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்த்தேச பொதுவுடமை கட்சியின் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஐபிஎல் டிக்கெட்களை தீயிட்டுக் கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடைகள் அடைப்பு

கலைந்து செல்லுமாறு போலீ ஸார் கூறியும் அதை ஏற்காமல் வாலாஜா சாலையில் தரையில் அமர்ந்து அனைவரும் தொடர்ந்து முழக்கமிட்டனர். ஒருகட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டது. இதில் இயக்குநர்கள் வெற்றி மாறன், களஞ்சியம் உள்ளிட் டோர் தாக்கப்பட்டனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்ததால் அண்ணா சாலையை சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு செல்ல முடியாமல் பலர் அவதிப்பட்டனர். போராட்டம் காரண மாக அண்ணா சாலை, வாலாஜா சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் மாலை 6 மணியில் இருந்து படிப்படியாக அவர்களை காவல் துறையினர் கைது செய்யத் தொடங்கினர். முதலில் சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, அண்ணா சிலை அருகே ஒரு அமைப்பினர் மறியல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்து ஏராளமானோரை கைது செய்தனர்.

மைதானத்தில் காலணி வீச்சு

போராட்டத்தையொட்டி சேப்பாக்கம் மைதானத்திலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மைதானத்தில் அதிவிரைவுப் படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கிடையே, இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கியது. போட்டி நடந்து கொண்டிருந்தபோது, இரவு 8.30 மணி அளவில் கேலரியில் இருந்த சில இளைஞர்கள் திடீரென காலணிகளை மைதானத்துக்குள் வீசினர். சட்டையை கழற்றியும் வீசினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து சென்று, காலணி வீசிய 8 பேரைப் பிடித்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இவர்கள் நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here