மட்டக்களப்பு மாநகரசபை நிவாரணப்பணிகளில்!

ஊரடங்குச் சட்டத்தால் வருமானத்தினை இழந்த குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுத்து வருகின்றது.

கொரொனா நோய்ப்பரவலினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் தமது வருமானத்தினை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையும், புலம்பெயர் தொண்டு அமைப்புகளும் இணைந்து நிவாரண பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

இதன்படி நேற்று (01) மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 20 வட்டாரங்களுக்குமான நிவாரணப் பொதிகள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் அந்தந்த கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபையின் நிதியின் ஊடாகவும், மாநகர முதல்வரின் வேண்டுகோளிற்கிணங்க எமது சமுகம், கனடா பாடுமீன் அமைப்பு, கே.ஓ.வி. குடும்பத்தினர், அவுஸ்திரேலியா மற்றும் இலண்டன் நலன்விரும்பிகள் ஆகியோருடன் மயூரன், சண்முகலிங்கம் எனும் தனிநபர்களின் நிதிப்பங்களிப்புடனும் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் உ.சிவாராஜா மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு பொருட்களை கையளித்திருந்தனர்.

நாளைய தினம் குறித்த பிரதேசத்துக்கான கிராம சேவை உத்தியோகத்தர்களால் மாநகர சபையின் 20 வட்டாரங்களிலும் உள்ள சுமார் 3000 குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று நேரடியாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here