coronavirus updates : கொரொனா அதிக உயிர்ப்பலி வாங்கிய நாள் நேற்று… மொத்த உயிரிழப்பு 47,000 ஐ கடந்தது!

கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் மாத்திரம் 1,000 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளிலும் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நாடுகளில் நேற்று மாத்திரம் 500 இற்கும் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகின.

நேற்று மாத்திரம் உலகளவில் 4,883 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர். கொரோனா தொற்று ஆரம்பித்த பின்னர், வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அதிக நோயாளர்கள் நேற்றுத்தான் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் இதுவரை 47,192 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக சுமார் 77,000 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இதனால் உலகளவில் தொற்றுக்குள்ளானவர்கள் 935,189 ஆக உயர்ந்துள்ளது. 193,989 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா

அடுத்த இரண்டு வாரங்கள்தான் அமெரிக்காவின் கடினமான நாட்கள் என ஜனாதிபதி ட்ரம்ப் சில நாட்களின் முன்னர் எச்சரித்திருந்தார்.அவரது எச்சரிக்கைப்படி, மிகப்பெரிய உயிரிழப்பு நேற்று அமெரிக்காவில் பதிவாகியது. ஒரேநாளில் 1,049 பேர் அங்கு உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 5,102 ஆக உயர்ந்தது. 26,473 பேர் புதிதாக தொற்றிற்கு இலக்காகினர். தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 215,003 ஆக உயர்ந்துள்ளது.

பிறந்து 6 வாரங்களேயான குழந்தையொன்றும் அங்கு உயிரிழந்துள்ளது.

நியூயோர்க் மாநிலத்தில் மொத்தம் 83,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் 1,941 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். அண்டை மாநிலமான நியூ ஜெர்சியில் 18,000 க்கும் அதிகமான தொற்றுக்கள், 267 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

ஸ்பெயின்

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 923 உயிரிழப்புக்கள் பதிவாகின. நாட்டின் மொத்த உயிரிழப்பு 9,387 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 8,195 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 104,118.

இத்தாலி

உயிரிழப்புக்கள் தொடர்ந்தும் கட்டுக்குள் இல்லாத உயிரிழப்பில் நேற்று 727 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 13,155 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,782 ஆக உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 110,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து

நேற்று மாத்திரம் இங்கிலாந்தில் 563 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்தில் கொரோனாவினால் ஒரே நாளில் பதிவான அதிக உயிரிழப்பு இதுவாகும். மொத்த உயிரிழப்பு 2,352 ஆக உயிர்ந்தது. புதிதாக 4,324 பேர் தொற்றிற்கு இலக்காக, மொத்தமாக தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 29,474 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வெளியிட்ட வீடியோவில், சோகமான நாள் என வர்ணித்தார். ஆனால், அனைவரும் தற்போது கடைப்பிடிப்பதை போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் வைரஸை வெற்றிகொள்ளலாமென தெரிவித்தார்.

பிரான்ஸ்

கடந்த 24 மணிநேரத்தில் பிரான்ஸில் 509 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு 4,032 ஆக உயர்ந்தது. புதிதாக 4,861 பேர் தொற்றிற்குள்ளாகினர். தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 56,989 ஆக உயர்ந்தது.

ஜேர்மனி

ஜேர்மனியில் நேற்று 156 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 931 ஆக உயர்ந்தது. புதிதாக 6,173 பேர் பாதிக்கப்பட, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77,981 ஆக உயர்ந்துள்ளது.

ஈரான்

கடந்த 24 மணித்தியாலத்தில் ஈரானில் 138 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 3036 ஆக உயர்ந்தது. 2,988 பேர் புதிதாக தொற்றிற்கு இலக்காக, 47,593 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, பெல்ஜியம் 123, நெதர்லாந்து 134, சுவீடன் 59, சுவிற்சர்லாந்து 54 என உயிரிழப்புக்கள் பதிவாகின.

இன்று வியாழக்கிழமை முதல் நாடு முழுவதையும் முடக்கு் உத்தரவை எரித்திரியா அறிவித்துள்ளது. 21 நாட்கள் முடக்குதல் அமுலில் இருக்கும். பொதுப்போக்குரவத்து, விமான சேவை, பாடசாலைகளை மார்ச் 21ம் திகதி எரித்திரியா முடக்கிய போதும், வைரஸ் பரவியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நாட்டில் 18 பேர் தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் சியாராலியோன் மூன்று நாட்கள் நாட்டை முடக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here