ரஷ்ய ஜனாதிபதி கைகுலுக்கிய வைத்தியருக்கும் கொரோனா!

ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் கை குலுக்கிய வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, புடினுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 27வது இடத்தில் உள்ளது. ஆனால் கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட 2வது நாடாக ரஷ்யா இருந்தது.

தற்போது அங்கு கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதையடுத்து, தலைநகர் மொஸ்கோ உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறும் நபர் களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப் படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து அவருடன் கை குலுங்கிய வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் மொஸ்கோவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியசாலைக்கு புடின் நேரில் சென்று ஆய்வு செய்தார். முக கவசம், கையுறைகள் என எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் சாதாரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளை புடின் ஆய்வு செய்தார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கை குலுக்குவது, கட்டி தழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வரும் நிலையில், தலைமை வைத்தியர் டெனிஸ் புரோட்சென்கோ என்பவருடன் புடின் சகஜமாக கை குலுக்கினார்.

இந்த நிலையில்,வைத்தியர் டெனிஸ் புரோட்சென்கோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அதே வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜனாதிபதி புடினுடன் நெருக்கமாக இருந்த வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் புடினுக்கும் வைரஸ் பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆனால் புடின் வழக்கம் போல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here