சுவிஸ் போதகரின் மனைவி எடுத்த அழைப்பு: முடக்கப்பட்ட அரியாலை இன்னும் சில தினங்களில் திறக்கப்படலாம்!

கொரோனா வைரஸால் இலங்கையில் முடக்கப்பட்ட முதலாவது கிராமமான அரசியாலை பிரதேசம் இன்றும் சில நாட்களில் திறந்து விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 4 நாட்களில் தனிமைப்படுத்தல் கால எல்லை முடிவடைகிறது.

கடந்த மார்ச் 21 ஆம் திகதி அந்த ஊர் முடக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஊர் இன்னும் நான்கு நாட்களுக்கு முற்றாக முடக்கப்பட்டிருக்கும் என அறிய முடிகின்றது. அந்த நான்கு நாட்களின் பின்னர் அந்த ஊர் சாதாரண ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவரப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக பாதுகாப்பு மற்றும் சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அரியாலை பகுதியில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான போதகர் ஒருவரால் நடாத்தப்பட்ட நிகழ்வை மையப்படுத்தி, அப்பகுதியில் கொரோனா பரவுவதை தடுப்பதை நோக்காக கொண்டு அந்த ஊர் முடக்கப்பட்டதாக யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனநாயக்க கூறியிருந்தார்.

குறித்த போதகர் கடந்த 10 ஆம் திகதி நாட்டுக்குள் வந்துள்ளார். அரியாலை பகுதி தேவாலயம் ஒன்றின் பிரதான மத போதகரே சென்று அழைத்து வந்துள்ளதுடன் நாட்டை விட்டு வெளியேறும் போது, மானிப்பாய் பகுதி இளைஞர் ஒருவரின் வேனில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்து சுவிஸ் சென்றுள்ளார்.

இதுவரை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் பிரகாரம், குறித்த போதகர், கட்டுநாயக்கவில் இருந்து குருணாகல், வாரியபொல, கல்கமுவ ஊடாக அனுராதபுரம் கிளிநொச்சியைக் கடந்து யாழ் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது அநுராதபுரத்திலும் கிளிநொச்சியிலும் இரு உணவகங்களில் தரித்து உணவு பெற்று அங்கு சிறிது நேரம் காலம் கழித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அரியாலை தேவாலயம் அருகே உள்ள பிரத்தியேக வீட்டிலேயே போதகரும் அவர் மனைவியும் தங்கியிருந்துள்ளதுடன் மார்ச் 11 ஆம் திகதி அவர் சட்டத்தரணி ஒருவரை சந்தித்துள்ளார். பின்னர் அப்பகுதியில் பாலர் பாடசாலை ஒன்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் அவர் பங்கேற்றுள்ளார். பின்னர் மார்ச் 12 ஆம் திகதி யாழ் நகரிலுள்ள தனியார் வங்கிக்கு சென்றுள்ள அவர் அங்கு 5 நிமிடங்கள் வரை இருந்துள்ளார். வங்கியிலிருந்து சில மில்லியன் ரூபா பணத்தை மீளப் பெற்றுள்ளார். (வங்கி பின்னர் கிருமி நீக்கப்பட்டது). அத்துடன் அரியாலை கடை தொகுதிகளுக்கும் சென்றுள்ளார்.

13,14 ஆம் திகதிகளில் குறித்த போதகர் சுகயீனம் காரணமாக எங்கும் செல்லாமல் தேவாலயம் அருகேயுள்ள பிரத்தியேக தங்குமிடத்திலேயே இருந்துள்ளார். பின்னர் 15 ஆம் திகதியே மருந்துகள் இல்லாமல் நோய் குணப்படுத்தல் பிரதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அப்போதும் கடுமையாக சுகயீன நிலைமையில் இருந்துள்ள போதகர், ஆரம்ப நிகழ்வை நடாத்தும் பொறுப்பை அரியாலை தேவாலய பிரதான போதகரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் அந்நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன், 20 நிமிடங்கள் வரை மட்டுமே அவர் அந்த நிகழ்வை நடாத்தியுள்ளார். அதனையடுத்து அவர் அன்றைய தினமே இரவு 8.30 மணிக்கு இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளார்,

இந்நிலையில் சுவிஸ் சென்ற பின்னர் மத போதகரின் மனைவி, அரியாலை தேவாலய போதகருக்கு அழைப்பை ஏற்படுத்தி, தனது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதனையடுத்தே சுகதார அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் அரியாலையை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

சுவிஸ் போதகரின் நடவடிக்கைகளை அவதானிக்கின்ற போது, அவர் தொற்றிற்கு உள்ளானதை இலங்கையிலேயே அறிந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here