கரவெட்டி நிவாரணத் திட்டம் தோல்வி: சுதந்திரக்கட்சி, முன்னணி முட்டுக்கட்டை!

வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேசசபையின் (கரவெட்டி) நிரந்தர வைப்பில் இருந்த பணத்தை, மக்களின் நிவாரணப் பணிகளிற்கு செலவிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினால் கைகூடவில்லை.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை.

கரவெட்டி பிரதேசசபையின் நிரந்தர இருப்பில் 26 கோடி ரூபா பணம் வைப்பிலுள்ளது. கொரொனா ஊரடங்கினால் வருமானமில்லாமல் பாதிக்கப்பட்ட அன்றாட உழைப்பாளர்களிற்கு நிவாரணம் வழங்க கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரன் யோசனையொன்றை முன்வைத்திருந்தார்.

வைப்பு நிதியில் இருந்து 50 இலட்சம் ரூபாவை பெற்று, ஒவ்வொரு வட்டார உறுப்பினர்க் மூலமாக அந்தந்த பகுதிகளில் உதவிப் பணிகளை முன்னெடுப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.

உள்ளூராட்சிசசபை விதிகளின்படி, சபையின் அனைத்து உறுப்பினர்களின் சம்மதத்துடன், ஆளுனருக்கு கடிதம் அனுப்பினால், ஆளுனர் அதனை ஏற்று, நிதியை விடுவிக்க முடியும்.

சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் இது பற்றி அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் (30) இதற்கான சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது.

உள்ளூராட்சிசபைகளின் மூலம் நிவாரணப்பணிகளை மேற்கொள்வதை அரசு தற்போது விரும்பாமல், அனைத்தையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடி உத்தரவில் மத்திய அரசின் மூலம் செயற்படுத்தி வருகிறது. தேர்தலை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக விமர்சனங்களும் இருந்து வருகிறது.

உள்ளூராட்சி மன்றங்களின் ஊடான நிவாரணப்ப பணிகளை அரசு விரும்பாததால், கரவெட்டி பிரதேசசபையில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து, சிறப்பு அமர்வை புறக்கணித்திருந்தனர். மேலிட உத்தரவிற்கமையவே அவர்கள் புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இந்த திட்டத்தை ஆதரிக்கவில்லை. அரசாங்கத்தினால் மேற்கொள்ள வேண்டிய பணிகளில் எதற்கு பிரதேசசபை தலையிட வேண்டுமென அவர்கள் கேள்வியெழுப்பினர்.

அனைத்து உறுப்பினர்களின் சம்மதம் கிடைக்காததையடுத்து, பிரதேசசபையின் வரவு செலவு திட்டத்தில் போசாக்கு, தாய்சேய் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 6 இலட்சம் ரூபாவை, நிவாரணப்பணிக்கு பாவிக்கும் யோசனை தவிசாளரால் முன்வைக்கப்பட்டது. அதை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இதன்படி, 6 இலட்சம் ரூபாயில் சவற்காரம், தொற்றுநீக்கி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here