யாழில் கட்டுமான பணிக்கு வெளிமாவட்ட தொழிலாளர்களை அழைத்து வந்து கைவிட்ட புலம்பெயர் தமிழர்கள் சிலர்… வாரிக்கொடுப்பவர்கள் சிலர்!

யாழ்ப்பாணத்தில் சிக்கிய வெளிமாவட்ட தொழிலாளர்களிற்கான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆதரவற்றி நிலையில் திண்டாடிண வெளிமாவட்ட தொழிலாளர்களின் உணவுத் தேவையை யாழ் எயிட் தன்னார்வ அமைப்பு பொறுப்பேற்று வழங்கி வருகிறது.

இதேவேளை, யாழில் திண்டாடும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் பற்றி இதுவரை வெளியான தகவல்கள் இரண்டும், புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புடையது. கட்டுமான பணிகளிற்காக வெளிமாவட்டத்திலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்தவர்கள், நெருக்கடியான கட்டத்தில் அவர்களை கைவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தொழில் நிமித்தம் வந்த பணியாளர்கள் உணவின்றி அல்லாடும் தகவலை நேற்று தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது.

யாழ் நகரிலுள்ள செல்வா திரையரங்கில் கட்டுமானப் பணிகளிற்காக மட்டக்களப்பில் இருந்து வந்தவர்களே அந்த தொழிலாளர்கள்.

இதையடுத்து யாழ் எய்ட் அமைப்பு இந்த விடயத்தில் தலையிட்டு, அந்த தொழிலாளர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்துவருகிறது. தமது நிலையை வெளிப்படுத்தியதற்காக அந்த தொழிலாளர்கள் தமிழபக்கத்தை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் அவர்களின் இடரறிந்து உதவி செய்யும் யாழ் எயிட் அமைப்பினரே நன்றிக்குரியவர்கள். நீண்டகாலமாக மனித நேயப்பணியாற்றும் யாழ் எயிட் அமைப்பின் செயற்பாடு பாரட்டுக்குரியதே.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஆதரவற்றிருக்கும் மேலும் பல வெளிமாவட்ட தொழிலாளர்களிற்கும் யாழ் எயிட் உணவளித்து வருகிறது.

வெளிநாட்டு வாழ் தமிழர் ஒருவரிற்கு, யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அக்கரைப்பற்றை சேர்ந்த ஆறு பேர் ஊரடங்கு சட்டம் காரணமாக வீடு திரும்ப முடியாமல் திண்டாடியுள்ளனர். வெளிநாட்டு வாழ் புலம்பெயர் தமிழரையும் தம்மால் தொடர்பு கொள்ள முடியவில்லையென தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் செல்வா திரையரங்கின் உரிமையாளரும் தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அந்த திரையரங்கத்தின் கட்டுமான பணிக்கு வந்தவர்களே உணவின்றி அல்லாடுகிறார்கள்.

இதேவேளை, பல புலம்பெயர் தமிழர்கள் நெருக்கடியான கட்டத்திலும் தம்மாலான மனிதாபிமான பணிகளை வடக்கு கிழக்கில் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் குறிப்பிடத்தக்கவர், யாழ்ப்பாணம் ஏழாலையை சேர்ந்த சிவகாந்தன் என்பவர். பிரித்தானியாவில் வசிக்கும் அவர், முன்னாள் யாழ் மாவட்ட எம்.பி, த.சித்தார்த்தனின் பரிந்துரையில் ஏழாலையில் மனிதநேய பணியாற்றும் இளைஞர் அமைப்பொன்றை அடையாளம் கண்டு, அந்த இளைஞர்களிடம் 12 இலட்சம் ரூபா பணத்தை உடனடியாக வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது வெளிமாவட்ட தொழிலாளர்கள் அந்தரிக்கும்போது, அவர்களை தொழிலுக்கு அமர்த்திய புலம்பெயர் தமிழர்கள் உதவவில்லை. அதேவேளை, அந்தரிக்கும் மக்களிற்கு தாராளமாக இன்னும் சில புலம்பெயர் தமிழர்கள் உதவுகிறார்கள்.

மனிதர்கள் பல விதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here