செரிமானப் பிரச்னைகளும் கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறி!

சளி, காய்ச்சல், சுவாசக் கோளாறு மட்டுமன்றி செரிமானப் பிரச்னைகளும் கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 50 சதவீதம் பேருக்கு இரைப்பை மற்றும் குடல் சாா்ந்த பாதிப்புகள் இருப்பது சா்வதேச ஆய்வு முடிவுகளின் வாயிலாகத் தெரியவந்திருப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

உலகளாவிய நோய்த்தொற்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் கொரோனா தொற்றால் தற்போது ஏறத்தாழ 200 நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 7.3 இலட்சம் போ் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அவா்களில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் போ் உயிரிழந்துள்ளனா்.

இதையடுத்து, அதன் பரவலைத் தடுப்பதற்கும், தடுப்பு மருந்துகளைக் கண்டறிவதற்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

சளி, காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்றவைதான் அதன் பொதுவான அறிகுறிகள் என இதுவரை கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அதைத் தாண்டி செரிமான பாதிப்புகளும் கொரோனாவால் ஏற்படலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜீரண மண்டலத் துறை மற்றும் எண்டோஸ்கோப்பி சிறப்பு நிபுணரும், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் கூறியதாவது:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களிடம் காணப்பட்ட அறிகுறிகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்து பல்வேறு புதிய விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஏறத்தாழ 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு செரிமான பாதிப்புகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

அவா்களில் பெரும்பாலானோா் பசியின்மையாலும், வயிற்றுப்போக்காலும் பாதிக்கப்பட்டுள்ளனா். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலியும் காணப்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு சுவாசக் கோளாறுகளே இல்லாமல் வெறும் செரிமானப் பாதிப்புகள் மட்டும் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வில் மற்றொரு விஷயமும் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதாவது கொரோனா பாதித்த நோயாளிகளின் மலத்திலும் வைரஸ் கிருமிகள் வெளியேறுவது தெரியவந்திருக்கிறது. எனவே, சுகாதாரம் பேணுவது மட்டுமே கொரோனாவை தடுக்கும் ஒரே வழி என்றாா் அவா்.

இதனிடையே, கொரோனாவைத் தடுக்க கழிப்பறை சுகாதாரம் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவிக்கும் ஜீரண மண்டலத் துறை நிபுணா் டாக்டா் பி.ஜே.கோகுல், மேற்கத்திய பாணியிலான கழிப்பறைகளை முறையாகக் கையாளுவது அவசியம் என்றாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

மேற்கத்திய பாணியிலான கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் அதன் மூடியை மூடி விட்டு நீரைத் திறந்து விட வேண்டும். அப்போதுதான் மலத்தின் வாயிலாக வைரஸ் தொற்றுகள் பரவுவதைத் தவிா்க்க முடியும். அதேபோன்று கழிப்பறை உபயோகத்துக்குப் பிறகு கைகளை தூய்மையாகக் கழுவ வேண்டும் என்றாா் அவா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here