Coronavirus updates: ஸ்பெயின் 913, இத்தாலி 812 … 38,000 ஐ எட்டும் உயிரிழப்புக்கள்!

கோவிட்-19 (கொரொனா) வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,000 ஆயிரத்தை நெருங்குகிறது. இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகளவில் பதிவாகி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 812 பேரும், ஸ்பெயினில் 913 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உலகின் எந்த நாட்டையும்விட மிக அதிக தொற்றுக்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. அங்கு 159,000 க்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

உலகளவில் கொரோனாவினால் நேற்று 37,790 பேர் உயிரிழந்தனர். இதுவரை வைரசினால் 784,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.165,387 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா

கடந்த 24 மணி நேரத்தில் அதிக உயிரிழந்து பதிவான நாடுகளின் பட்டியலில், ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்கு அடுத்த நிலையில் அமெரிக்காவே உள்ளது. அங்கு நேற்று 565 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 3,148 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 19,988 பேர் வைரஸ் தொற்றிற்கு இலக்காக, பாதிப்பு எண்ணிக்கை 163,479 ஆக உயர்ந்துள்ளது.

கலிஃபோர்னியா கவர்னர் கவின் நியூசோம், கடந்த நான்கு நாட்களில் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும், அந்த நேரத்தில் ஐ.சி.யூ நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

அங்கு நான்கு நாட்களின் முன்னர் 746 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது 1,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மிதக்கும் வைத்தியசாலையாக செயற்படும் இராணுவ கப்பல் நேற்று நியூயோர்க்கை சென்றடைந்தது. யுஎஸ்என்எஸ் கம்ஃபோர்ட் என்ற இந்த கப்பல் 894 அடி நீளமுள்ளது. சனிக்கிழமை வேர்ஜீனியாவின் நோர்போக்கில் இருந்து புறப்பட்டது.

இத்தாலி

இத்தாலியில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட பூட்டுதல், ஏப்ரல் 3ம் திகதியுடன் முடிவடையும் நிலையில், ஏப்ரல் 12ம் திகதி வரை நாடு பூட்டப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சர் ரொபேர்ட் ஸ்பெரான்சா அறிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 812 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு 11,591 ஆக உயிர்ந்தது. 4,050 பேர் புதிதாக வைரஸ் தொற்றிற்கு இலக்காகினர். மொத்தமாக 101,739 பேர் வைரஸ் தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.

ஸ்பெயின்

தமது நாட்டில் கடந்த நாட்களில் உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருவதாக ஸ்பெயின் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொணடிருந்த நிலையில், நேற்று உயிரிழப்பு சடுதியாக உயர்ந்தது. நேற்று 913 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 7,716 ஆக உயர்ந்தது. 7,846 பேர் புதிதாக தொற்றிற்கு இலக்காகினர். தற்போது 87,956 பேர் பாதிக்கப்பட்டனர். இது உலகளவில் 3வது அதிக பாதிப்பு எண்ணிக்கையாகும். சீனா நான்காவது இடத்தில் உள்ளது.

12,298 சுகாதார ஊழியர்கள் இப்போது வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஸ்பெயினில் 3வது வாரமாக முழுமையான பூட்டுதல் நடைமுறையிலுள்ளது.

கட்டார்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் 59 பேரை கட்டார் அடையாளம் கண்டது. இதுவரை 693 பேர் தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். 51 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கத்தார் 59 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன, மொத்தம் 693
கட்டாரி சுகாதார அமைச்சகம் 59 புதிய வழக்குகளை உறுதிப்படுத்தியது, இதில் மொத்தம் 693 வழக்குகள், 51 மீட்டெடுப்புகள் மற்றும் ஒரு கூடுதல் மரணம் உட்பட.

பிரான்ஸில்

கடந்த 24 மணி நேரத்தில் 418 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,034 ஆக உயர்ந்துள்ளது. 4,376 பேர் புதிதாக நோய்த் தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். 44,550 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் வீடுகளிற்குள் முடங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு வன்முறைக்கு ஆளாகும் பெண்களிற்கு விசேட திட்டமொன்றை பாலின சமத்துவ அமைச்சர் மார்லின் ஷியாப்பா அறிவித்துள்ளார்.

வீட்டு வன்முறைக்கு உள்ளாகுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர்கள் உளவள ஆலோசனை திட்டத்தின் பின்னர், ஹொட்டல் அறைகளில் தங்க அரசு பணம் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இங்கிலாந்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 180 பேர் உயிரிழந்தனர். 2,619 பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு 1,408 ஆகவும், பாதிப்பு 22,141 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஜேர்மனியில் நேற்று 104 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 645 ஆக உயர்ந்தது. 4,450 பேர் புதிதாக தொற்றிற்குள்ளாகினர். பாதிப்பு எண்ணிக்கை 66,885 ஆக உயர்ந்தது.

ஈரானில் 117 பேர் நேற்று உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 2,757 ஆக உயர்ந்தது. 3,186 பேர் புதிதாக தொற்றிற்கு இலக்காக, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,495 ஆக உயர்ந்தது.

நெதர்லாந்து 93, பெல்ஜியம் 83, சுவிற்சர்லாந்து 59, துருக்கி 39 என கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழப்புக்கள் பதிவாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here