அமெரிக்க பாணி போருத்தியை பாவித்த புலிகள்!: இறுதியில் இராணுவம் பாவித்ததும் அதுதான்!

  • யுத்தத்தின் இறுதி நிமிடங்கள்
  • கட்டுக்கதைகளும் உண்மைக்கதைகளும்
  • மினி தொடர் 7

விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் சக்தி வாய்ந்த தளபதியாக இருந்த கடாபி பற்றிய நிலவிய கட்டுக்கதைகளை பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் கடந்த சிலவாரங்களாக குறிப்பிட்டிருந்தோம். விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் சக்தி வாய்ந்த தளபதியாக இருந்த கடாபியின் எழுச்சி, சடுதியாக நிகழ்ந்த அவரது வீழ்ச்சி, பின்னர் அதிலருந்து எப்படி எழுந்தார் என்பதையெல்லாம் குறிப்பிட்டிருந்தோம்.

கடாபி விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்தது தொடக்கம், இறுதி யுத்த காலம் வரையான காலப்பகுதியை ஒன்லைனாக குறிப்பிட்டிருந்தோம். இந்த ஒன்லைனில், கடாபியின் இறுதிக்கணம் குறிப்பிடப்படவில்லை. பல வாசகர்கள் எம்மை தொடர்புகொண்டு, கடாபிக்கு என்ன நடந்ததென்பதையும் எழுத வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள்.

அதற்கு முன்னர்,கடாபிக்கு என்ன நடந்ததென்பது குறித்து எப்படியான கதைகள் உலாவுகிறது என்பதை பார்ப்போம்.

முதலாவது, கடாபி இறுதியுத்தத்தில் மரணமாகி விட்டார்.

இரண்டாவது, இரகசிய இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மூன்றாவது, கொஞ்சம் வில்லங்கமானது. ஆனால் அதை நம்பவும் ஆட்கள் இருக்கிறார்கள். உலகின் இரகசியமான தீவொன்றில் முகாமமைத்து தங்கியுள்ள விடுதலைப்புலிகள் அணியுடன் தங்கியிருக்கிறார்.

இதில் எது உண்மை, எது உல்டா என்பதை இறுதியில் குறிப்பிடுகிறோம்.

இறுதியுத்தம் ஆரம்பித்த போது புலிகளின் ஆரம்ப இராணுவ பயிற்சி முகாம்களின் பொறுப்பாளராக கடாபி இருந்தார். அதனால் இறுதி யுத்தத்தின் ஆரம்பத்தில் அவர் நேரடியாக யுத்தகளத்தில் இருக்கவில்லை. மாறாக, யுத்தகளத்திற்கு புதிய போராளிகளை தயார்படுத்தி அனுப்பிக்கொண்டிருந்தார்.

புலிகளின் இராஜதந்திர தலைநகரான கிளிநொச்சியை இழந்தபின், புலிகள் கடுமையான நெருக்கடியை சந்தித்தார்கள். களத்தில் இருந்த தளபதிகளால் இராணுவத்தின் நகர்வை தடுக்க முடியவில்லை. ஆளணி பற்றாக்குறை, ஆயுதப்பற்றாக்குறை என அவர்களும் நிறைய பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருந்தனர்.

இராணுவத்தை கட்டுப்படுத்த வேண்டுமென பிரபாகரன் நினைத்தார். கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த பின்னர், பிரபாகரன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியதை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அதை தவறவிட்டவர்களிற்காக மீண்டுமொரு முறை குறிப்பிடுகிறோம்.

Image result for பிரிகேடியர் கடாபிமுரசுமோட்டை பகுதியில் இந்த சந்திப்பு நடந்தது. கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிவிட்டது. கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய புலிகளின் அணிகள் மற்றும் நிர்வாக அணிகளிலிருந்து திரட்டப்பட்டு தாக்குதலணிக்கு உள்வாங்கப்பட்டிருந்தவர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி நடந்த கூட்டம் அது. புலிகளின் முக்கிய தளபதிகள் –தாக்குதல்- அனைவருமே அதில் கலந்து கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இராணுவத்தின் முன்னேற்றத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என பிரபாகரன் கூட்டத்தில் சொன்னார். ஆயுத வரத்தும் இல்லை, இராணுவத்தை தடுக்கவும் முடியாத நிலையில் பிரபாகரன் கொஞ்சம் கடுமையான தொனியிலேயே தளபதிகளுடன் பேசினார். அனைத்து தளபதிகளும் முன்னரணில் போராளிகளுடன் நிற்க வேண்டுமென்றும் கூறினார்.

கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றி, பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியால் நகர்ந்து தருமபுரத்தை அடைந்தது. இதன்பின் புலிகள் முன்னரங்க கட்டளைபீடத்தில் பல மாற்றங்களை செய்தனர்.  சுண்டிக்குளத்தின் பின்பக்கமாக தொடங்கும் கடற்கரையில் ஆரம்பித்து, விசுவமடு, அதற்கப்பாலிருந்த காட்டுப்பகுதி (அம்பகாமத்திற்கு அண்மையான பிரதேசம்) என நீண்ட புலிகளின் முன்னரண் புதுக்குடியிருப்பிற்கு வந்து, அப்படியே வட்டுவாகல் வரை சென்றது. ஒருகாலத்தில் மணலாற்றின் தொடங்கி வன்னியை குறுக்கு வெட்டாக ஊடறுத்து மன்னார் வரை நீண்டிருந்தது புலிகளின் முன்னரண். இப்பொழுது மிக குறுகியிருந்தது.

விசுவமடுவிற்கு அப்பாலிருந்த அம்பகாம முனைக்கு கடாபி, நடேசன் இருவரும் கூட்டு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

விடுதலைப்புலிகளின் எல்லாவித உத்திகளையும் உடைத்துக் கொண்டு முன்னேறும் இராணுவத்தை சமாளிக்க கடாபி சில உத்திகளை பாவிக்க முயன்றார். அதில் முக்கியமானது, வழக்கமான நேர்கோட்டு முன்னரண் பாணியை தவிர்த்து, “தையல் பாணி“ முன்னரண்களை அமைத்தார். அதாவது முன்னரண்கள் நேர்கோட்டில் இல்லாமல், இரண்டு நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருக்கும். முதல் கோட்டில் உள்ள இரண்டு காவலரண்களிற்கு இடையில் இரண்டாவது வரிசையில் ஒரு காவலரண் வரும். (பின்னாளில் புலிகளிற்கு இராணுவம் போட்ட கடைசி Log இல் இராணுவமும் இதே பாணியை பின்பற்றியதுதான் முரண்நகையான விசயம். இது அமெரிக்க இராணுவம் ஈராக்கில் கையாண்ட உத்தி.

Image result for பிரிகேடியர் கடாபிகடாபிக்கு களமுனையில் குறுகியகால அவகாசமே கிடைத்தது. இரண்டாவது, நாலாபுறமும் இராணுவம் சூழ்ந்த நிலையில் அம்பகாமத்தில் மட்டும் அதிசயங்களை நிகழ்த்த முடியவில்லை. பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதிக்கு வடக்கு பக்கமாக, பிரமந்தனாறு மற்றும் தேவிபுரத்திற்கு அப்பாலிருந்த பகுதிகளை நோக்கி 58, 55ம் டிவிசன்கள் முன்னேறிக் கொண்டிருந்தன. இதனால் பரந்தன் – புதுக்குடியிருப்பு வீதியை விட்டு பின்வாங்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை புலிகளிற்கு ஏற்பட்டது. அந்த வீதியை விட்டு பின்வாங்கினால், வீதிக்கு தெற்கு பக்கமிருந்த காட்டையும் விட்டு பின்வாங்கியே தீர வேண்டும். கடாபியின் அணியும் பின்வாங்கியது. பின்னர் புதுக்குடியிருப்பு களமுனையில் புலிகளின் முழு தளபதிகளும் அடங்கினார்கள். பரந்தன்- புதுக்குடியிருப்பு சாலைக்கு வடக்கு பக்கமாக கடாபி தனது அணியுடன் களத்தில் நின்றார்.

புதுக்குடியிருப்பு இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்த பின்னர், இன்னும் களமுனை சுருங்கியது. அதனால் குறிப்பாக எந்த இடத்திலும் அவர் கட்டளை தளபதியாக இருக்கவில்லை. ஆனால் இம்ரான்- பாண்டியன் படையணியினரை வழிநடத்தினார். கட்டளை பீடங்களிலேயே தங்கியிருந்தார்.

ஆனந்தபுரம் BOX வரை இதுதான் நிலைமை. ஆனந்தபுரம்தான் கடாபியின் இறுதி களம். அங்கு என்ன நடந்ததென்பதை அடுத்த பாகத்தில் குறிப்பிடுகிறோம்.

(தொடரும்)

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here