‘இளையவர்களின் விழிப்புணர்வுக்காக ஜூலியின் புகைப்படத்தை பிரசுரியுங்கள்’: கொரோனாவால் உயிரிழந்த 16 வயது மாணவியின் கதை!

பிரான்சில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். ஐரோப்பாவில் உயிரிழந்த முதல் இளம் வயதுடைய பெண்ணாக இவர் கருதப்படுகிறார்.

16 வயதான பாடசாலை மாணவியின் உயிரிழப்பு பிரான்சில் அதிகமாக பேசப்படும் விடயமாகவுள்ளது. பிரான்சில் மட்டுமல்ல, உலகளவிலும் இது அதிகம் பேசப்படுகிறது.

கொரோனா வயதானவர்களையே தாக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், 16 வயது மாணவியின் மரணம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சாதாரண இருமல் மற்றும் நெஞ்சு தடிமலுக்கு உள்ளாகிய ஜீலி அலியட் என்ற 16 வயது பாடசாலை மாணவி, பிரான்ஸின் புகழ்பெற்ற நெக்கர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றி உலகளவில் மிகப்பெரிய பாதிப்பையும் அழிவையும் ஏற்படுத்தவுள்ளதாகவும் அதனை தடுக்கும் மருத்துவ வசதி ஐரோப்பாவில் இல்லை என்றும் ஜூலியின் சகோதரி மனோன் பாரிசியன் கூறியுள்ளார். இவர் தனது சகோதரியின் இழப்பையடுத்து இளைஞர்களுக்கான விழிப்புணர்வு ஒன்றையும் முன்னெடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் வயதானவர்களை மட்டுமே தாக்குகிறது என்று நம்புவதை நாம் நிறுத்த வேண்டும் என மனோன் கூறியுள்ளார்.

ஜூலியின் சகோதரி மேலும் கூறியதாவது,

“இந்த வைரஸுக்கு எதிராக யாரும் வெல்ல முடியாது. ஜூலிக்கு கடந்த வாரம் இலேசான இருமல் ஏற்பட்டது. இது கடந்த வார இறுதியில் சளியுடன் மோசமாகிவிட்டது, திங்களன்று ஒரு பொது வைத்தியரை பார்க்கச் சென்றோம்.

அங்குதான் அவருக்கு சுவாசக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு முன்பு அவளுக்கு குறிப்பிட்ட நோய்கள் எதுவும் இல்லை. வைரஸ் காரணமாக வயதானவர்கள் மட்டுமே இறக்கும் அபாயம் இருப்பதாக இப்போது வரை பலர் நினைத்திருக்கிறார்கள். ஆனால் இளையவர்களையும் இந்த நோய் பாதிக்கும் என்பதற்கு எனது சகோதரி சரியான உதாரணம்“ என்றார்.

தனது சகோதரியின் கதையையும், புகைப்படத்தையும் வெளியிடுவதற்கு மனோன் பாரிசியன் சம்மதித்தமைக்கு ஒரேயொரு காரணம்தான் உள்ளது. அது- கொரொனா வைரஸ் குறித்து இளைஞர்களையும் அவர் எச்சரிக்க விரும்பினார்.

பாரிஸுக்கு தெற்கே லாங்ஜுமியோவைச் சேர்ந்த ஜூலி,  உயர்நிலைப் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தார்.

ஜூலிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும், முதலில் உள்ளூர் குடும்ப வைத்தியரிடம் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து பாரிஸில் உள்ள நெக்கர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நோய் அதிகரித்து மூச்சுதிணறல் இருந்துள்ளதாகவும் நுரையீரல் பாதிக்கப்பட்டே தனது சகோதரி உயிர் நீத்ததாகவும் மனோன் கூறியுள்ளார்.

“வைத்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள், ஆனால் அவளை காப்பாற்ற முடியவில்லை. இது போன்ற கொடுமை  இனி எவருக்கும் நடக்க கூடாது“ என ஜூலியின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கண்ணீர் மல்கியுள்ளனர்.

“அவளுக்கு இலேசான இருமல் இருந்தது. ஜூலிக்கு குளிர் காலத்தில் வழக்கமாகவே தடிமல் ஏற்படுவதால் ஆரம்பத்தில் அவளின் தடிமலை கண்டுகொள்ளவில்லை. அவள் ஸ்கிறப் மற்றும், மூலிகைகள், மூலம் குணப்படுத்த முயன்றாள். சனிக்கிழமை, ஜூலி மூச்சுத் திணறத் தொடங்கினாள். அவள் சுவாசிக்க சிரமப்பட்டாள். பின்னர் இருமல் ஏற்பட்டது“ என தாயார் சபின் கூறுகிறார்.

அவசரகால சேவையின் மூலம் ஜூலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஒட்சிசன் சுவாசம் வழங்கப்பட்டபடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஜூலியின் நிலை ‘மிகவும் மோசமாக இல்லை’ என்று தனக்கு முதலில் கூறப்பட்டதாக தாயார் சபின் கூறுகிறார். பின்னர் திடீரென ஜூலி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

வீட்டிலிருந்து பாரிஸுக்கு தெற்கே லாங்ஜுமியோவில் உள்ள அருகிலுள்ள வைத்தியசாலைக்கு ஜூலி முதலில் கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவருக்கு நுரையீரல் ஸ்கான் செய்யப்பட்டது. தாயார் வீட்டுக்கு சென்று, தொலைபேசி மூலம் வைத்தியசாலையை தொடர்பு கொண்டு முடிவை கேட்டதாகவும் தெரிவித்தார்.

நுரையீரலில் சில தொற்றுக்கள் இருப்பதாகவும், ஆனால்  ‘எதுவும் தீவிரமாக இல்லை’ என்றும் வைத்தியசாலை தரப்பினரால் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த இரவின் பிற்பகுதியில் ஜூலி மீண்டும் சுவாசிக்க சிரமப்பட்டு போராடினார். உடனடியாக, பாரிஸில் உள்ள புகழ்பெற்ற நெக்கர் குழந்தைகள் வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு மேலும் இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

செவ்வாய்க்கிழமை, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தாயார் வைத்தியசாலைக்கு சென்றபோது, தனது மகள் கவலையுடன் பேசியதாகவும், ‘என் இதயம் வலிக்கிறது’ என கூறியதாகவும் குறிப்பிட்டார்.

“அங்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைகளில் எதிர்மறையான முடிவுகள் வந்தன. அவளுடைய அறைக்கான கதவு திறக்கிறது. தாதியர்கள் பாதுகாப்பு ஆடைகளை அணியாமல் உள்ளே வருகிறார்கள். வைத்தியர் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் கட்டைவிரல் அடையாளத்தை எனக்கு காண்பித்தார்“ என சபின் கூறினார்.

அன்று நீண்டநேரமாகி விட்டதால், மகளுக்கு குட்நைட் சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்பினார்.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, வைத்தியசாலையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஜூலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரொனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரது நிலை மோசமடைந்து, செயற்கைச்சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

‘நாங்கள் அதை நம்ப முடியாது. ஒரு தவறு இருக்க வேண்டும். இந்த முடிவு ஏன் இவ்வளவு நேரம் தாமதமாக வந்தது?’ என சபின் கேள்வியெழுப்புக்கிறார்.

நள்ளிரவுக்குப் பிறகு, வைத்தியசாலையிலிருந்து மீண்டும் அழைத்து, சபீனை விரைவாக வைத்தியசாலைக்கு வரச் சொன்னார்கள்.

‘அந்த நேரத்தில், நான் பீதியடைந்தேன். சில வார்த்தைகள், அவை என்னவென்று உங்களுக்குத் தெரியும்’ என்று சபின் கூறினார்.

மனோனும் மீண்டும் பாரிஸுக்கு அவர் விரைந்தார். ஆனால் அவர்கள் அங்கு போனபோது ஜூலி இறந்திருந்தார். ‘அவளுடைய தோல் இன்னும் சூடாக இருந்தது’ என்றார் சபின்.

சபீன் தனது மகளை பார்க்கும் கடைசி நேரமிது. ஜூலியின் உடலை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டியிருந்தது மற்றும் அவரது உடைகள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்கள் எரிக்கப்பட்டன.

சபின் தனது மகளின் ஞானஸ்நான நெக்லஸ் மற்றும் வளையலைப் பிடித்துக் கொண்டார்.

ஜூலியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறவுள்ளது. தொற்று அபாயங்களைக் கட்டுப்படுத்த, இறுதிச் சடங்கிற்காக ஜூலியின் உடல் மூடப்பட்டிருக்கும். இறுதிச்சடங்கில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

ஜூலியின் மரணம் பிரான்ஸில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. எல்லா ஊடகங்களும் அதை பேசுகிறது. இடைவிடாத செய்தி அறிக்கைகள் குறித்து ‘இது தாங்க முடியாதது’ என்று சபின் கூறினார். ‘இது பயங்கரமானது, ஏனென்றால் அவர்கள் என் மகளைப் பற்றி பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியும். எங்களுக்கு ஒரு சாதாரண வாழ்க்கை இருக்க வேண்டும்.’ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here